இவர்தாம் முஹம்மது நபிநாதர்!

இலக்கியம் ஏமபல் தஜம்முல் முகம்மது கவிதைகள் (All)
இவர்தாம் முஹம்மது நபிநாதர்!-அல்லாஹ்
இறுதியில் அனுப்பிய திருத்தூதர்!!
 
அன்பே இவர்களின் அடிப்படையாம்-தூய
         அறிவே இவர்களின் ஆயுதமாம்!
பண்புகள் இவர்களின் படைவரிசை-இந்தப்
         பாருலகே இவர்கள் சீர்வரிசை!                       (இவர்தாம்…)1.
 
ஆர்வம் இவர்களின் வாகனமாம்-வந்(து)
        அடைந்திடும் துக்கமும் துணைவனென்பார்!
சீர்இறை வணக்கமே பேரின்பம்-இவர்கள்
        செயலுக்கு ஞானமே மூலதனம்!                      (இவர்தாம்…)2.
 
பொறுமை  இவர்களின் போர்வையாம்-பெரும்
        போராட் டம்தான் பிறவிக்குணம்!
உறுதி இவர்களின் நல்லுடைமை -என்றும்
        உண்மையே இவர்களின் வழிகாட்டி!                (இவர்தாம்…)3
 
ஏழ்மை இவர்களின் தனிப்பெருமை-வியக்கும்
       எளிமை இவர்களின் வாழ்வருமை!
தாழ்மை இவர்களின் செல்வகுணம்-இதனைத்
       தாரணி புகழ்ந்திடும் தினம்தினம்!                       (இவர்தாம்…)4
 
பணிசெய் தல்இவர் களின்நிறைவு-ஒளிரும்
      பகுத்தறி(வு) இவர்களின் பக்தியின்வேர்!
அணியாய் அமைந்தநன் நம்பிக்கை-அது
      அன்றோ இவர்களின் வல்லமை!                         (இவர்தாம்…)5
 
தியானம் இவர்களின் உயிர்த்தோழன் -உள்ள
      திருப்தி இவர்களின் வெற்றிப்பொருள்!
தியாகம் இவர்களுக் குரியகலை -இவர்கள்
      தியாகத்திற் கீடு இணையில்லை!                         (இவர்தாம்…)6
 
சொல்லும் செயலும் ஒன்றாக – நாம்
      சொர்க்கத்து வாழ்வினைப் பெற்றிடவே
அல்லும் பகலும் உழைத்தவர்கள் -அந்த
      அல்லாஹ் வேதத்தை உரைத்தவர்கள்!               (இவர்தாம்…)7
 
இறைசொல் ஏற்றம் பெற்றிடவே- எங்கும்
       இஸ்லாம் பூரணம் உற்றிடவே
நிறைமொழி கூறிய நீதரிவர்-மக்கள்
      நேர்நிறை ஒன்றெனும் போதரிவர்!                       (இவர்தாம்…)8
 
அகிலங் களுக்கோர் அருட்கொடை-யாக
      அமைந்தார் நடையே நன்னடை!
முகம்மது நபியினும் மேலவர்-என
      மொழிந்திட எங்கே யாருளர்?                                 (இவர்தாம்…)9
 
பற்றுகொள் வார்கள் எவரிடமும் -மீளப்
     பரிந்துரைப் பார்கள் இறையிடமும்!
ஒற்றுமை இவர்கள் உவந்தநிலை-இரண்டு
    உலகிலும் இவர்களுக் குயர்ந்தநிலை!!                    (இவர்தாம்…)10.
 
                                     —-ஏம்பல் தஜம்முல் முகம்மது
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *