திருமறையின் தோற்றுவாய்” என்று தமிழுலகம் போற்றியுரைக்கும் ஃபாத்திஹா சூராவைப் பற்றி அறிவுலகச் சகோதரர்களுடன் பகிர்ந்துகொள்ளும் ஆவலில் எழுதப்பட்ட ஓர் ஆக்கத்தைக் கீழே அன்புடன் சமர்ப்பிக்கிறேன்:-
வெளிச்ச வாசல்
அளவே இல்லா அருளாளன்
நிகரே இல்லா அன்பாளன்
நலமே செய்யும் பண்பாளன்
நாயன் அல்லாஹ் திருப்பெயரால்…
எல்லாப் புகழும் இறைவனுக்கே!
இலங்கும் உலகம் பற்பலவாம்
வல்லான் அவனே படைப்பவனாம்
வாழச் செய்திடும் ரட்சகனாம்
அளவே இல்லா அருளாளன்
நிகரே இல்லா அன்பாளன்
நலமே செய்யும் பண்பாளன்
நாளைய தீர்ப்பின் அதிபதியாம்!
அதிபதி உனையே வணங்குகிறோம்
அடிமைகள்,உதவியும் தேடுகிறோம்
எதுநேர் வழியோ அதில் செலுத்து…
இன்னருள் பெற்றோர் வழியதுவே!
நீசினந் தோரின் வழிவேண்டாம்
நெறிகெட் டோரின் வழிவேண்டாம்
மாசில் லாஉன் அருள்பொழியும்
மார்க்கப் படியே எமைநடத்து
வேதம் எதிலும் இல்லாத
வெளிச்ச வாசல் ஃபாத்திஹா
போதம் குர்-ஆன் சாரமிது!
புரிந்தோர் உணரும் ஞானமிது!!
ஆமீன்,ஆமீன் அவ்வாறே
ஆகுக,ஆகுக,ஆகுகவே!
—ஏம்பல் தஜம்முல் முஹம்மது