முதுகுளத்தூர் : முதுகுளத்தூர் அரசு மருத்துவமனையில் டாக்டர்கள் இல்லாததால் குற்றவாளிகளை உடனடியாக சிறையில் அடைப்பதில் போலீசாருக்கு சிக்கல் ஏற்படுகிறது. இதனால் போலீசார்- நர்களிடையே அடிக்கடி ஏற்படும் வாக்குவாதம் மருத்துவமனையை ரணகளமாக்கி விடுகிறது. முதுகுளத்தூர் அரசு மருத்துவமனையில் 11 டாக்டர் பணியிடங்களில் தற்போது மூவர் மட்டுமே பணியாற்றி வருகின்றனர். மக்களுக்கு அவசர சிகிச்சை கிடைப்பதில் பல ஆண்டுகளாக தொய்வு ஏற்பட்டுள்ளது. மேலும் இருக்கும் டாக்டர்களும் பணி நேரத்தில் இருப்பதில்லை. வெளிநோயாளிகள் நீண்ட நேரம் காத்திருந்து தவிக்கின்றனர். மேலும் குற்றவாளிகளை சிறையில் அடைப்பதற்கு மாஜிஸ்திரேட்டிடம் உத்தரவு பெற்று வந்தாலும், “கைதிகள் நலமுடன் உள்ளனர், சிறையில் அடைக்கலாம்’ என “பிட்னஸ்’ சான்றிதழ் வழங்க டாக்டர்களை தேடி போலீசார் அலைகின்றனர். “டாக்டர் இல்லை, மறுநாள் வரச்சொல்லி மருத்துவமனை ஊழியர்கள் கூறுகின்றனர். உடனடியாக கைதிகளை சிறையில் அடைக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ள போலீசார், டாக்டர்களின் வீடுகளுக்கு செல்கின்றனர். அங்கும் டாக்டர் இல்லாத போது கைதிகளுடன் ரோட்டில் அலைகின்றனர்.
வாக்குவாதம்: டாக்டரை தேடி மீண்டும் மருத்துவமனைக்கு வருகின்றனர். சான்று வேண்டி நர்ஸ்களிடம் நிர்ப்பந்திக்கின்றனர். அப்போது இருதரப்பிற்கும் நர்ஸ்களுக்கும் வாக்குவாதம் ஏற்படுகிறது. இதனால் அரசு மருத்துவமனையே ரணகளமாக மாறுகிறது. பின்னர் உயர் அதிகாரிகள் வரை பிரச்னை இரவில் சிகிச்சைகள் மறுக்கபட்டு, மதுரை, ராமநாதபுரம் உட்பட பல பகுதிகளுக்கு நோயாளிகள், பாதிக்கபட்டவர்கள் பரிந்துரைக்கப்படுகின்றனர். இதனால் நோயாளிகள் பாதிக்கப்படுகின்றனர். எனவே, போதிய டாக்டர்களை நியமிக்க மருத்துவத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
முதுகுளத்தூருக்கு வந்த சோதனை : கடந்த மாதம் முதுகுளத்தூர் அரசு மருத்துவமனையில் கலெக்டர் அருண்ராய் ஆய்வு மேற்கொண்டார். அப்போது டாக்டர்கள் இல்லாதது கண்டுபிடிக்கப்பட்டும் நடவடிக்கை எடுக்கபடவில்லை.
இதுகுறித்து மருத்துவ அதிகாரி ஒருவர் கூறுகையில், “”இருப்பதோ குறைவான டாக்டர்கள் இவர்கள் மீது நடவடிக்கை எடுத்துவிட்டால் சிகிச்சை அளிக்க டாக்டர்களே இருக்க மாட்டார்கள். நோயாளிகளின் வசதிக்காக நடவடிக்கை எடுக்கப்படவில்லை,” என்றார்.
Thanks : Dinamalar.com