நெல்லை: தமிழக அரசின் சமூக நலத் துறையால் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் டாக்டர் முத்துலட்சுமி நினைவு கலப்பு திருமண நிதி உதவி திட்டம் மற்றும் டாக்டர் தர்மாம்பாள் நினைவு விதவை மறுமண நிதி உதவி திட்டம் ஆகிய திட்டங்களின் கீழ் பயனடைய தமிழக அரசு நிபந்தனைகள் விதித்துள்ளது.
டாக்டர் முத்துலட்சுமி நினைவு கலப்பு திருமண நிதி உதவி திட்டத்தின் கீழ் பொது பிரிவின் கீழ் பயன் பெற முற்பட்ட வகுப்பைச் சேர்ந்த ஒருவர் பிற்பட்ட வகுப்பினர் மற்றும் மிகவும் பிற்பட்ட வகுப்பினரை திருமணம் செய்திருக்க வேண்டும்.
சிறப்பு பிரிவின் கீழ் பயன் பெற தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த ஒருவர் பிற்பட்ட வகுப்பினர் மற்றும் மிகவும் பிற்பட்ட வகுப்பினர் மற்றும் முற்பட்ட வகுப்பினரை மணம் முடித்திருக்க வேண்டும். 17.5.2011 முதல் பொது பிரிவு மற்றும் சிறப்பு பிரிவின் கீழ் பயன் பெறுவோருக்கு வருமான உச்ச வரம்பு ஏதுமில்லை. திருமணமாகி 2 ஆண்டுகளுக்குள் விண்ணப்பத்தை சம்பந்தப்பட்ட பி.டி.ஓ அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்
திருமணத்தின் போது 18 வயது பூர்த்தியாகியிருக்க வேண்டும். உச்ச வரம்பு ஏதுமில்லை. திருமணப் பதிவு சான்று, திருமண பத்திரிக்கை, மணமகன் மற்றும் மணமகள் சாதிச் சான்றுகள், வயது சான்றிதழ் இணைக்கப்பட வேண்டும். இதில் 10-ம் வகுப்பு அல்லது பிளஸ் 2 தேறிய அல்லது தவறிய விண்ணப்பதாரர்களுக்கு ரூ. 25 ஆயிரம் (15 ஆயிரம் செக், 10 ஆயிரம் சேமிப்பு பத்திரம்), 4 கிராம் தங்கம் வழங்கப்படும். பட்டய படிப்பு முடித்தவர்களுக்கு ரூ. 50 ஆயிரம் (30 ஆயிரம் செக், 20 ஆயிரம் தேசிய சேமிப்பு பத்திரம்), 4 கிராம் தங்கம் வழங்கப்படும்.
மறுமண நிதி உதவி: டாக்டர் தர்மாம்பாள் நினைவு விதவை மறுமண நிதி உதவி திட்டத்தின் கீழ் 17.5.2011 முதல் நடக்கும் திருமணங்களுக்கு சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு நிதி உதவி வழங்கப்படுகிறது. வருமான உச்ச வரம்பு ஏதுமில்லை. திருமணமாகி 6 மாதங்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும். திருமணத்தின் போது மணமகளின் குறைந்தபட்ச வயது 20 ஆக இருக்க வேண்டும். மணமகனின் வயது 40க்குள் இருக்க வேண்டும். விதவை சான்று தாசில்தாரிடமிருந்து பெற வேண்டும்.
மறுமண பத்திரிக்கை மட்டும் போதுமானது. 10-ம் வகுப்பு, பிளஸ் 2 தேர்ச்சி அல்லது தவறியவர்களுக்கு ரூ. 25 ஆயிரம், 4 கிராம் தங்கம், பட்ட படிப்பு முடித்தவர்களுக்கு ரூ. 50 ஆயிரம், 4 கிராம் தங்கம் வழங்கப்படும்.