இஸ்லாம் தான்உயர் தத்துவம்-இதை
ஏற்பது தான்முதல் உத்தமம்!
நம்பிச் செயல்படல் பத்தியம்-இது
நலமெலாம் தருதல் சத்தியம்!
பொறுமையில் நன்கு கலந்து-வாழ்வு
பூராவும் இதனை அருந்து!
வெறுமை யில்கூட இருந்து-பல
வெற்றிகள் தரும்இம் மருந்து! (இஸ்லாம்…)
பாவம் அனைத்தையும் நீக்கும்-நேர்ப்
பாதையில் கொண்டுனைச் சேர்க்கும்!
மேவும் புகழினைக் காக்கும்-இந்த
மேதினி வியந்து பார்க்கும்!
இஸ்லாம் நிரந்தர அதிசயம்-இதில்
எத்தனை மெய்ஞான ரகசியம்!
அறிந்தவர் வெல்வது நிச்சயம்-எனும்
அனுபவம் சரித்திரப் பரிச்சயம்! (இஸ்லாம்…)
நடுநிலை யானதிம் மார்க்கம்-இது
நல்கிடும் உரிமைகள் யார்க்கும்!
கெடுதல் அனைத்தையும் தீர்க்கும்-நல்ல
கெதியினில் மக்களைச் சேர்க்கும்!
ஒருவன் இறைவனென் றுரைக்கும்-நபி
உரைப்பவை மனங்களைக் கரைக்கும்!
இருலோக வாழ்வைக் காட்டும்-அந்த
இரண்டிலும் ஒளியைக் கூட்டும்! (இஸ்லாம்…)
—ஏம்பல் தஜம்முல் முகம்மது