- நோன்பே, நீ
எல்லாத் தீமைகளுக்கும்
எதிரான கேடயம்.
உன்னை அரியாதவர்க்கோ
புதிரான பொருள் !
- புனிதர்களாக்கி, மானிடருக்குப்
புத்துணர்ச்சியும் அளிக்க
ஹிரா மலையிலிருந்து
கிளம்பிய அருவி நீ
- இறையருள் மழையின்
ஈர்ப்பு விசை நீ
- தீமையின் தேசங்களில்
ஷைத்தான்கள் எழுப்பும்
கோட்டைகளை மூழ்கடிக்கும்
கடல்கோள் நீ
- அறத்திற்கு முரணானவற்றைத்
தடுத்து
ஆன்மீக அரணாகி நிற்கும்
அற்புதம் நீ !
- இறைவனை
உடம்பால் வணங்கினோம்
உளத்தால் வணங்கினோம்
உரையால் வணங்கினோம்
உயிராலும் வணங்க வைத்த
உபதேசி நீ
- புலன்களின் போக்கை மற்றி
மானுடத்தைப்
புலப்படுத்தும் புரட்சி நீ
- நீ எமது
பக்தியின் மணிமுடி;
அதனால்தான்
பொறுமையால் கோலோச்சும்
சிம்மாசனம் கிடைத்தது !
- தடுக்கும் கேடயமாய் வந்து
கொடுக்கும்
தங்கத் தட்டாய் விடை பெறுகிறாய்
‘ரையான்’ எனும் சொர்க்கத்தின்
ஒரே திறவுகோல்
இன்று எம் கைகளில் !
- ஈட்டி உவப்பதும்
ஈந்து உவப்பதும்
இரு வேறு நிலைகள்;
நீதான் அவற்றிற்கு
மலரும் மணமுமாய் ஆகும்
மாண்பளித்தாய் !
- பற்றிருக்கப் பற்றறுத்து
பற்றுகொண்டு வெற்றி பெறும்
பாடம் படித்தவர்களுக்குப்
பயிற்சிப் பட்டறை நீ
- நோன்பே !
முன்னொரு ரமளானின்
பத்ரு’ களத்தில் தொடங்கியது
எமது வெற்றி ஊர்வலம் !
இப்போது எமக்கு அது
காலங்கள் தோறும் தொடரும்
காவியம் …….
- ரமளானே நீ
வரும்போதெல்லாம்
வரவேற்கிறோம், மகிழ்ந்து !
போகும்போதெல்லாம்
புழுங்குகின்றோம், நெகிழ்ந்து ….
- ஈத்முபாரக்!’ சொல்லிச் செல்லும்
இனிய ரமளானே, நீ
சொன்ன சொல் தவறாமல்
அடுத்தடுத்த ஆண்டுகளிலும்
அருள் சுமந்து வா,
அலைகளைப்போல் ………
- இப்படிக்கு
எதிர்பார்ப்புடனும் ஏக்கத்துடனும்
இறைநம்பிக்கையாளர்கள் ………..
– ஏம்பல் தஜம்முல் முகம்மது