1)
சுயமாகத் தொழிலைத்தான் செயல்படுத்த வழியின்றி
அயல்நாட்டில் பணியாற்றி அடிமையாய் வளர்ந்துகொண்டு
துயரத்தைக் குடும்பத்தில் துடைத்திட்டப் பணமெல்லாம்
வியர்வையின் விதைகளிலே விளைந்திட்ட விருட்சமன்றோ?
2)
இரைதேடும் பறவையாய் இழந்திட்டார் உறவையே
கரைதேடும் படகாகக் கலக்கத்தி லுழைக்கின்றார்
விரைவாகக் கடனெல்லாம் விடுதலையா குமென்றெண்ணி
தரைமீது தவிக்கின்றார் தகிக்கும்வெய் யிலிலன்றோ?
3)
பாலையாம் வாழ்க்கையை பைஞ்சோலை யாயாக்க
பாலையாம் நாட்டிற்குள் பாதங்கள் வைத்தநாளாய்
காலைத்தூக் கத்தையே காசாக்கி வீட்டிற்கு
ஓலையாய் மாற்றத்தான் ஓயாமல் வேலையாம்
4)
இளமைக் கருக்க இரத்தம் சுருங்க
வளமைப் பெருக்க வடிக்கு முழைப்பை
களவாய்ச் செலவு; கடும்விலை ஏற்றம்
உளமே வெடிக்க உறிஞ்சிக் குடிக்கும்
ஓலை = காசோலை (cheque)
களவாய்ச் செலவு = களவாகுதற்போல் வீண் செலவு
—
யாப்பிலக்கணம்:
பாடல் 1 & 2 = இயற்றரவு கொச்சகக் கலிப்பா
பாடல் 3 & 4 = வெண்டளையால் வந்த கலிவிருத்தம்
”கவியன்பன்” கலாம், அதிராம்பட்டினம்(பிறப்பிடம்)
அபுதபி(இருப்பிடம்)
எனது வலைப்பூத் தோட்டம் http://www.kalaamkathir.blogspot.com/
மின்னஞ்சல் முகவரி: kalamkader2@gmail.com
shaickkalam@yahoo.com
kalaamkathir7@gmail.com
அலை பேசி: 00971-50-8351499