எந்தேசம் காணுமே இன்று விடுதலைச்
சந்தோசக் கொண்டாட்டச் சங்கமம்- இந்நேரம்
பாட்டின் தலைப்பிலும் பாரதம் என்பதைப்
போட்டேன் பொருத்தமாய்ப் போச்சு (வெண்பா)
********************************************************************
நுனிநாக்கி லாங்கிலம் நுட்பக் கணினி
தனியார்வ நோக்கில் தணியாத தாகம்
இனியென்ன வேண்டுமிங் கிந்தியர் என்றும்
நனிசிறந்தே வாழ்வர் நவில்.
************************************************************(வெண்பா)
கடின உழைப்பும் கடமை யுணர்வும்
படியும் குணமும் பலமான போட்டியுறும்
சந்தையில் இன்று சிறப்பான எங்கள்
இந்தியர் என்றே இயம்பு. ( வெண்பா)
************************************************************************
காடும் மலையும் கடலுமே தாண்டி
வாடும் உடலும்தம் உள்ளமும் வேலையில்
ஈடுபட்டுத் தேனீயென் றீட்டிட இந்தியர்
பாடு படுவதைப் பாடு! (வெண்பா)
**************************************************************************
சிந்தும் உழைப்பும் சிறந்த தியாகமே
இந்தியச் சந்தை இழந்த உழைப்பினை
அன்னிய நாட்டவர் அங்கீ கரித்தனர்
தன்னிறை என்பதுஎந் நாள் (வெண்பா)
***********************************************************************
எம்மைத் தந்த எம்மண் ணிற்கு
என்னச் செய்தோம் எண்ணிப் பார்ப்போம்
நன்றி கொன்ற நம்மை தேசம்
என்றுமே வளர்த்து மெப்படி யுதவிச்
செய்து மென்னச் செய்தோ மின்னும்
பொய்தா னெங்கள் போலிப் பற்று
இந்தியர் அனைவரு மிணைந்துப் போரில்
சிந்திய தியாகம்; சிந்தைக் கூறின்
ஒன்று பட்ட வுண்மை வெற்றி
இன்றும் கிட்டு மின்னும் பெற்றி
வேற்றுமை மறப்போம்; வேரொன் றென்றுப்
போற்றிக் கொண்டால் போதும் வெல்லவே
(ஆசிரியப்பா)
*************************************************************************
வாழ்வினை வளமாய் வழங்கிய தேசம்
வளர்த்திடு வதனுடன் நேசம்
தாழ்விலு முயர்வாய் மதித்திடு நாட்டை
தரையிலும் கடலிலும் நாட்டைப்
பாழ்படுத் திடுவர் யாரெனக் கண்டு
பழித்திடத் துடித்திடு இன்று
காழ்ப்புணர் வின்றி பழகிடும் தன்மை
காத்திடும் வேற்றுமை(யில்) ஒருமை
(எழுசீர் விருத்தம்)
***************************************************************************
—
”கவியன்பன்” கலாம், அதிராம்பட்டினம்(பிறப்பிடம்)
அபுதபி(இருப்பிடம்)
எனது வலைப்பூத் தோட்டம் http://www.kalaamkathir.blogspot.com
மின்னஞ்சல் முகவரி: kalamkader2@gmail.com
shaickkalam@yahoo.com
kalaamkathir7@gmail.com
அலை பேசி: 00971-50-8351499