நூல் நிறை
இலக்குவனார் திருவள்ளுவன்
பயணங்கள் இனிமையானவை. பிறரின் பயணக் கட்டுரைகளைப் படிப்பதும் சுவையானது. ஆனால், பயணம் மேற்கொள்ளாமலேயே ஒரு பயண நூலை நமக்கு அளித்துள்ளார் முனைவர் வெ.இறையன்பு இ.ஆ.ப. அவர்கள்.
பத்தாயிரம் கல் பயணம் என்னும் பொருண்மையில் (10000 மைல் பயணம்) தொடராக வெளிவந்த கட்டுரைகளின் தொகுப்புதான் இந்நூல். எனினும் கட்டுரைத் தொகுப்பாக அமையாமல், சிறுகதைகளும் புதினங்களும் காணாமல் போன இக்காலத்தில், நெடும் புதினம் ஒன்றைப் படித்த மன நிறைவை அளிக்கிறது இந்நூல். பயணம் செல்வோம் எனத் தொடங்கிப் பயணம் செய்வோம்; மரணம் வெல்வோம் என முடித்து 45 தலைப்புகளில் நம்மைப் பொது அறிவு உலகத்திற்கு அழைத்துச் செல்கிறார். முற்கால விளையாட்டுகள், தேநீர், சதுரங்கம், காழ்நீர் (காஃபி), புகையிலை, உப்பு, மிளகாய், சருக்கரை, இனிமம் அல்லது வித்தினிமம் (சாக்லட்டு அல்லது கொக்கோ), மணப்பொருள்கள், சந்தன மரம், முளரி (ரோசா), தக்காளி, மருந்துகள், வளர்ப்பு விலங்குகள், குதிரை, ஒட்டகம், கழுதை, பூனை, கோழி, பன்றி, சோளம், உணவு, உருளை, அரிசி, சிறு கூலங்கள் (தானியங்கள்), பட்டு, தேன், எனப் பலவற்றின் தோற்றம், பரவல் முதலானவற்றின் நிகழ்வுகளையும் கதைகளையும் நன்கு தெரிவித்துள்ளார். இவ்வாறாகப், பொருள்களின் பயணம், நாகரிகக் கூறுகளின் பயணம், பண்பாட்டுச் சிறப்புகளின் பயணம், கலைப் பாங்குகளின் பயணம் என்ற வகையில் வணிகப் பயணங்களாலும் பிற பயணங்களாலும் பொருள்கள் எவ்வாறு பயணம் மேற்கொண்டு நாடு விட்டு நாடு சேர்ந்து பரவலடைந்தன; அந்தந்தப் பகுதி மக்கள் அவற்றால் பெற்ற பயன்கள்; பெயர்களுக்குரிய உண்மைக் காரணங்களும் தொன்மக்கதைத் தெரிவிப்புகளும் எனப் பலவகையாக நமக்கு இவர் தொகுத்தளித்துள்ளார்.
அலெக்சாண்டர் அடக்கிய குதிரையின் பெயர் பியூசிபேலசு (Bucephalus) என்பது போன்ற பொதுஅறிவுச் செய்திகளையும் வரலாற்றுக் குறிப்புகளையும் ஆங்காங்கே அளித்துள்ளார். எனவே, பொதுஅறிவு வேண்டும் என்றால் பொதுஅறிவு வினா-விடை நூல்களைப் படிப்பதைவிட பொதுஅறிவைக் குழைத்துத் தரும் இதுபோன்ற நூல்களைப் படித்தலே பயன்தரும்.
பல நூலகங்களுக்குச் சென்று நூற்றுக்கணக்கிலான நூல்களைப் படித்து நாம் தெரிந்து கொள்ளக்கூடிய செய்திகளைத் தாமே முயன்று நமக்குக் கருத்துப் பிழிவாக அளித்துள்ளார்.
இந்நூலில் அங்கொன்றும் இங்கொன்றுமாகத் தமிழகம் சார்ந்த குறிப்புகளைத் தந்ததுடன், தமிழர் பயணங்கள் எனத் தனித்தலைப்பும் தந்துள்ளார். இருப்பினும் தமிழர் பயணங்கள் குறித்து இவர் ஒரு நூலைப் படைப்பின் உலக வாசகர்கள் அனைவருக்கும் பயனுள்ளதாக அமையும். தமக்குக் கிடைத்துள்ள நூல்களின் அடிப்படையில் சில தகவல்கள் மட்டுமே இடம் பெற்றுள்ளதால் தேடல் முயற்சியில் சளைக்காத இவர் மேலும் பல நூல்களையும் சான்றாவணங்களையும் ஆராய்ந்து சிறப்பாகப் படைக்க இயலும். சான்றாக கி.மு.14,000 அளவில் குமரி நாட்டு அரசன் செங்கோன் மேற்கொண்ட தரை வழி வெற்றிப் பயணம் குறித்து நனியூர் சேந்தன் எழுதிய செங்கோன் தரைச்செலவு என்னும் பயண நூல் தமிழில் இருந்துள்ளது. பஃறுளியாற்று அணை கட்டிய முத்தூர் அகத்தியர் பாயிரம் பாடி உள்ளார். இதைப்பற்றிய பாடல்களும் இருந்துள்ளன. உலக வரலாற்றிலேயே முதல் பயணநூல் இதுதான். அதைப்பற்றிய குறிப்புகளை அளித்திருக்கலாம். தமிழ்நாட்டிலிருந்து போகர் சித்தர் சீனா சென்றதால்தான் வானக்குடை (பாராச்சூட்) சீனாவிற்கு அறிமுகமானது. இதுபோன்ற வானூர்தி பற்றிய பயணங்களைக் குறிக்கலாம். கிருட்டிணதேவ(இராய)ர் அமரும் மனை தங்கத்தாலானது எனக் குறித்துள்ளதால் சங்கக் காலத்தில் கட்டில்கள், கூரைகள் முதலானவை தங்கத்தாலான செய்திகளைக் குறிப்பிட்டிருக்கலாம். பகவத்கீதையில் குறைவாகவோ அதிகமாகவோ சாப்பிடுவது தவறு எனச் சொல்லப் பட்டிருப்பதைக் குறிப்பிட்டுள்ளார். அதற்கும் முன்னதாகவே தெய்வப் புலவரின் திருக்குறள் அற்றால் அளவறிந்து உண்க என உண்ட உணவு செரித்தபின்பு அளவோடு உண்ண வேண்டும் என வலியுறுத்துவதையும் சேர்த்திருக்கலாம். வெறும் கற்பனைக் கதைகளைக் கொண்ட அயல்நாட்டுக் குறிப்புகளை எல்லாம் எடுத்தாள்பவர் இலக்கியச் சான்றுகள், அகழாய்வுச் சான்றுகள் உள்ள தமிழர் பயண உண்மைகளைச் சுவையாக அளிப்பின் தமிழ் இலக்கியங்களும் மக்களைச் சென்றடையும் அல்லவா?
பெயர்ச்சொற்கள் பெரும்பாலும் கிரந்த எழுத்துகளிலேயே குறிக்கப்படுகின்றன. அயற்சொற்களையும் அயல் எழுத்துகளையும் தவிர்த்து நல்ல நூலைப் படைக்கும் திறனுடையவர் அவ்வாறே படைக்கலாம் அல்லவா?
சிவிங்கி என்னுமிடத்தில் சிறுத்தை வந்த மாயம் (பக்.11), நான்கும் எட்டுமாக என வரவேண்டியது ஐந்தும் எட்டுமாக என மாறியது (பக்.25), 18,446,744,073,709,551,615 என வந்திருக்க வேண்டிய எண் தவறாக இடம் பெற்றது (பக்.25) போன்ற தவறுகளை அடுத்த பதிப்பில் திருத்திவிடுவார்கள் என எதிர்பார்க்கின்றேன்.
264 பக்கங்கள் கொண்ட இந்நூலைப் புதிய தலைமுறை பதிப்பகம் (சென்னை – 17) பணப் பெருக்கத்திற்கு முதன்மை அளிக்காமல் அறிவுப் பெருக்கத்திற்கு முதன்மை அளித்து 100 உரூபாய்க்கு மட்டுமே அளித்துள்ளதால் வாழ்க்கையில் சுவை வேண்டும் என்போர் யாவரும் வாங்கிப் படிக்க வேண்டும்; பிள்ளைகளுக்குப் படிப்பார்வம் வேண்டும் என எண்ணுபவர்களும் பொது அறிவில் அவர்கள் சிறந்து விளங்க வேண்டும் என விழைபவர்களும் இந்நூலை வாங்கி அவர்களுக்கு அளிக்க வேண்டும்.
வாழ்க்கையைச் சுவையாகப் பார்க்கவும் பயனுள்ளதாக மாற்றவும் உதவும் நூல்களில் கருத்துக் களஞ்சியம் முனைவர் வெ.இறையன்பு அவர்களின் இப்பயண நூலும் ஒன்றாகும்.