கடந்த 44 ஆண்டுகளாகக் காலதாமதம் செய்யப்பட்ட லோக்பால் மசோதா இப்போது அமைச்சரவைக் கூட்டத்தில் ஏற்கப்பட்டு, நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடரில் முதல் இரு நாள்களுக்குள் அறிமுகம் செய்யப்பட உள்ளது. ஒரு வகையில் இது மனநிறைவு தந்தாலும், சமூக ஆர்வலர் அண்ணா ஹசாரே தலைமையிலான மக்கள் பிரதிநிதிகள் தெரிவித்த பல கருத்துகள் ஏற்கப்படவில்லை என்பது நெருடலாகவே இருக்கிறது.
சமூக ஆர்வலர்கள் குழு தெரிவித்த கருத்துகள் ஏற்கப்படப்போவதில்லை என்றால் எதற்காக அவர்களை வரைவு மசோதா குழுவில் சேர்த்துக்கொண்டு பலமுறை பேச்சு நடத்த வேண்டும்? பேச்சுகளை விடியோவில் பதிவு செய்யவேண்டும்? இல்லாத நாடகமெல்லாம் நடிக்கப்பட வேண்டும்? என்ற கேள்விக்கு நமக்குக் கிடைக்கும் விடை- திருவிழாவில் விலைஅதிகமான பொருளைக் கேட்டு அழுகின்ற குழந்தைக்கு பஞ்சுமிட்டாய் கொடுத்து ஏமாற்றிவிடுவதைப் போல, மக்கள் பிரதிநிதிகளையும் ஏமாற்றிவிட்டது மத்திய அரசு என்பதுதான் இதிலிருந்து தெரிகிறது.
அரசு தயாரித்த வரைவு மசோதா மட்டுமே நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டபோதே, அண்ணா ஹசாரே ஆதரவாளர்கள் நடுவே வருத்தம் மேலிட்டது. அதே வருத்தம் இப்போதும் தொடர்கிறது. “”அடித்தட்டு மக்களுக்கு (ஆம் ஆத்மி) எதிரான ஊழல்களை ஒழிக்கும் நடவடிக்கைகளையும் இந்த லோக்பால் கொண்டிருக்கும் என்று உண்மையாக நம்பிக்கொண்டிருந்தேன்” என்று வேதனைப்பட்டுள்ளார் அண்ணா ஹசாரே.
இதற்காக அவர்கள் வருத்தப்படத் தேவையில்லை. அண்ணா ஹசாரே போன்றவர்கள் இந்த விவகாரத்தில் காட்டிய அபரிமிதமான ஆர்வமும் அவர்கள் நடத்திய போராட்டங்களும் இல்லையென்றால், லோக்பால் தொடர்ந்து கிடப்பில் போடப்பட்டிருக்கும். இந்த அளவுக்காவது முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது என்றால் அந்தப் பெருமை அண்ணா ஹசாரே குழுவையே சேரும்.
“பிரதமர் பதவியை இந்தச் சட்ட வரையறைக்குள் கொண்டு வருவதற்குத் தான் எதிராக இல்லை’ என்று முன்னர் தெரிவித்ததைப்போலவே, பிரதமர் மன்மோகன் சிங் அமைச்சரவைக் கூட்டத்திலும் தெரிவித்ததாகவும், ஆனால், அதை அமைச்சரவை ஏற்க மறுத்துவிட்டதாகவும் சொல்லப்படுகிறது. பதவியில் இருக்கும்போது பிரதமர் மீது லோக்பால் நடவடிக்கை கூடாது என்பது ஏற்கப்படக்கூடியதே என்றாலும், இதே அளவுகோலை நீதிபதிகளுக்கும், நாடாளுமன்ற வளாகத்துக்குள் உறுப்பினர்கள் நடவடிக்கைக்கும் நீட்டிக்க வேண்டும் என்பதிலும் தவறு காண முடியாது.
நாம் ஒரு விஷயத்தை நன்றாக மனதில் இருத்திக்கொள்ள வேண்டும். நமது நாடாளுமன்ற உறுப்பினர்களின் தரம் சொல்லிக்கொள்ளும்படியாக இல்லை என்றால் அது அவர்களைத் தேர்ந்தெடுத்த நமது குற்றம்தானே? எந்தக் காரணத்தைக் கொண்டும் எந்த ஓர் அமைப்பும் நாடாளுமன்றத்தைவிட உயர்ந்ததாக இருப்பது மக்களாட்சித் தத்துவத்துக்கு எதிரானது.
இந்த மசோதா நிறைவேறிய பின்னர், லோக்ஆயுக்த வரம்புக்குள் மாநில முதல்வர் பதவி இடம்பெறாமல் போகும் நிலைமை எல்லா மாநிலங்களிலும் உருவாகும் என்று முன்னாள் காவல்துறை அதிகாரி கிரண்பேடி தெரிவித்துள்ளார். அவரது எச்சரிக்கையில் அர்த்தம் இருக்கிறது. குறிப்பாக, இப்போது கர்நாடக மாநில முதல்வர் எடியூரப்பா மீது கர்நாடக மாநில லோக்ஆயுக்த கூறியுள்ள குற்றச்சாட்டுகள் முதல்வர் பதவிக்கே உலைவைத்துள்ள நிலையில், வேறு எந்த மாநில முதல்வரும் இந்தச் சட்ட வரம்புக்குள் இடம்பெறுவதை விரும்ப மாட்டார். பிரதமருக்கு அளிக்கப்படும் விதிவிலக்கு முதல்வர்களுக்குத் தரப்பட வேண்டிய அவசியம் இல்லை என்பதுதான் நமது கருத்து.
லோக்பால் சட்டத்தில் ஊழல் குற்றச்சாட்டை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட நாளிலிருந்து ஏழு ஆண்டுகளுக்குள் முடிக்கப்பட வேண்டும் என்கின்ற விதிமுறை இந்தச் சட்டத்தை வலுவிழக்கச் செய்யப் போதுமானது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு ஊழலை விஞ்சும் ஊழல்கள் அம்பலப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில், ஓர் ஊழல் குற்றச்சாட்டை விசாரிக்க அதிகபட்சம் 7 ஆண்டுகள் காலஅவகாசம் அளிப்பதன் மூலம், குற்றம் சாட்டப்பட்டவர் அனைத்துச் சாட்சிகளையும் கலைத்துவிடுவார் என்பது மட்டுமல்ல, அனைத்துச் சாட்சிகளும் மாயமாய் மறைந்துபோய் விசாரணையே நீர்த்துப்போகக் கூடும்.
மேலும், இந்த லோக்பால் உறுப்பினர்களின் பதவிக்காலம் 5 ஆண்டுகள் மட்டுமே. ஆனால், விசாரணை வரம்பு 7 ஆண்டுகள். இந்த அளவுக்கு நீண்ட காலஅவகாசம் முறைகேடுகளில் போய் முடியும். நேர்மையுடன், அநீதிக்கு வளையாமல் நிற்கும் உறுப்பினர்கள் பதவிக்காலம் முடிந்து வெளியேறும் வரை காத்திருந்து, பிறகு சாதகமான சூழலில் சாதகமான தீர்ப்பைப்பெற குற்றவாளிக்கு ஒரு வாய்ப்பை ஏற்படுத்துகிறது இந்த விதிமுறை.
மேலும் இந்த அமைப்பு தனக்குள் பாதி உறுப்பினர்களை நீதிபதிகளாகக் கொண்டிருந்தபோதிலும்கூட, இதற்கு வழக்குப் பதிவு செய்யும் (பிராசிக்யூட்) அதிகாரம் இல்லை. விசாரணை செய்து உச்ச நீதிமன்றத்துக்குப் பரிந்துரைக்க மட்டுமே அதிகாரம் உள்ளது. மீண்டும் உச்ச நீதிமன்றத்தில் சில ஆண்டுகளுக்கு வழக்கு நடக்கும். “தெய்வம் நின்று கொல்லும்’ என்பதற்காக, சட்டமும் நிதானமாகத்தான் தண்டிக்கும் என்றால், மக்கள் அச்சட்டத்தின் மீது எப்படி நம்பிக்கை கொள்வார்கள்?
கர்நாடக லோக்ஆயுக்த தலைவரும் லோக்பால் வரைவு மசோதா குழுவில் இடம்பெற்றவருமான சந்தோஷ் ஹெக்டே தன் கருத்தைத் தெரிவிக்கையில், “”44 ஆண்டுகளுக்குப் பிறகு கொண்டு வருகிறார்கள். ஆனால், வலுவாகக் கொண்டுவரவில்லை” என்று கூறியுள்ளது இதைக் கருத்தில்கொண்டுதானோ என்னவோ?
“ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் முந்தைய ஆட்சிக் காலத்தில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை அமல்படுத்தினோம். இப்போது லோக்பால் கொண்டுவந்துள்ளோம்’ என்று காங்கிரஸ் தலைவர்கள் பெருமைப்பட்டுக் கொள்கிறார்கள். தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை அரசும் அதிகாரிகளும் கடந்த மூன்று ஆண்டுகளில் மெல்லமெல்ல வலுவிழக்கச் செய்துவிட்டார்கள். இப்போது அதிகாரிகள் இதைக் கண்டு அஞ்சுவதே இல்லை. கேட்ட தகவலைக் கொடுப்பதும் இல்லை.
இதே நிலையை லோக்பால் சந்திக்காமல் இருக்க வேண்டும் என்றால் லோக்பால் மசோதாவில் பல திருத்தங்கள் செய்யப்பட்டு அது சக்திவாய்ந்த அமைப்பாகச் செயல்பட வழிகோல வேண்டும். அதைவிட்டு விட்டு அவசரக்கோலத்தில் இப்படி ஒரு சட்டம் கொண்டுவருவதைவிடப் பேசாமலேகூட இருந்துவிடலாம்!