தொழு…!

இலக்கியம் இஸ்லாமியக் கவிதைகள் கவிதைகள் (All)

தொழு…!
கதை-கவிதை – கவிதை

கரு வறை தொடங்கி
கல் லறை அடங்கி
முடி வுறும் நாள்வரை…
இறைவனைத் தொழு!

எத்தனை அழகு
என்னென்ன நிகழ்வு
எல்லாம் உனக்களித்த
ஏகனைத் தொழு!

காணவும் களிக்கவும்
கண்களால் ரசிக்கவும்
பார்வையைத் தந்தவனை
நேர்மையாய்த் தொழு!

கேட்கவும் கிறங்கவும்
கேட்டதை உணரவும்
ஒலி புரியச் செவி தந்த
வலியோனைத் தொழு!

சாப்பிடவும் கூப்பிடவும்
சண்டையின்றிப் பேசிடவும்
நாவும் நல் வாயும் தந்த
நாயன் தனைத் தொழு!

சுவாசிக்கும் நாசியாகவும்
முகர்ந்தறிய மூக்காகவும்
அமைத்தொரு புலன் தந்த
ஆண்டவனைத் தொழு!

கையும் காலும்
கச்சித உடலும்
வாகாய்த் தந்த
வல்லோனைத் தொழு!

முடிந்த இரவை முழுமையாக்கி
விடியும் முன்பு தொழு…
புதிய பூவாய்ப் பூரிப்போடு
மதிய நேரம் தொழு…

மாலை மகுடம் காத்திருக்கு
மாலை வேளை தொழு…
மாலை மயங்கி இரவு தொடும்
வேளையிலும் தொழு…

இன்று நன்றாய் முற்றுப்பெற
இரவு நேரம் தொழு!
காலநேரம் கடக்குமுன்
கவனமாகத் தொழு!

கடமையுணர்ந்து தொழு!
கண்மணி நபி
கற்பித்தவாறு
கவனமுடன் தொழு!

உறுதியாகத் தொழு
உபரியையும் தொழு!
அறுதியாய்ச் சுவனம்
அடைந்திடத் தொழு

உன்
உடல் கிடத்தி
ஊர் தொழு முன்-
உயிரோடு நீ…
தொழு!
– சபீர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *