தொண்டை அழற்சி – ‘டான்சிலிட்டிஸ்’ என்பதன் பெயர் தான் இது. தொண்டைச் சதை வீங்கி, உணவை விழுங்க முடியாமல் போய்விடும்; இதில் ஆரம்பித்து காய்ச்சல் ஏற்பட்டு கோளாறு அதிகமாகும். குழந்தைகளுக்குத்தான் அதிகம் இந்த கோளாறு தாக்குகிறது. இதற்குக் காரணம், அவர்களின் விளையாட்டுத்தனமான, சுகாதரமற்ற நடவடிக்கைகள் தான்.
அடுத்தவர் பயன்படுத்திய டம்ளரைப் பயன்படுத்துவது, டூத் பிரஷ் பயன்படுத்துவது போன்ற காரணங்களால், பாக்டீரியா மற்றும் வைரஸ் தொற்றுக்கிருமிகள் தொண்டையைப் பாதிக்கின்றன. இதுபோல், அடுத்தவருக்கு ‘டான்சில்’ இருந்தாலும் எளிதில் தொற்றும்.
தொண்டையில் இரு முக்கிய தசைகள் உள்ளன. ஒன்று, அடித் தொண்டையில் இருப்பது; இன்னொன்று அடிநாக்குப் பகுதியில் இருப்பது. இந்த பகுதியில் தான் தொற்றுக்கிருமிகள் தொற்றுகின்றன. இது தொண்டையில் வீக்கத்தை ஏற்படுத்தும்; புண் ஏற்படும். அதனால் உணவை விழுங்குவது முதல் பல பாதிப்புகளை சந்திக்க வேண்டியிருக்கும்.
காரணம் என்ன?
தொண்டை அழற்சி:
தொண்டை அழற்சி ஏற்பட ஸ்டெப்டோகோகஸ், ஹிமோபில்ஸ் ஆகிய பாக்டீரியாக்கள் தான் காரணம். அதுபோல, அடெனோவைரஸ், எப்ஸ்டின் – பார் ஆகிய வைரஸ்கள் காரணமாக உள்ளன. இந்த பாக்டீரியா, வைரஸ்கள், அடுத்தவரிடம் இருந்தும் தொற்றும்; சில காரணங்களாலும் தொற்றும். குடும்பத்தில் உள்ள யாருக்காவது டான்சிலிட்டிஸ் இருந்தால், மற்ற சிறு வயதினருக்கும் தொற்றும். அதனால், டம்ளர் உட்பட சில பொருட்களை ஒருவர், மற்றவருடன் பகிர்ந்துக் கொள்ளவே கூடாது.
தொண்டை கரகரப்பு:
தொண்டை கரகரப்பு இருந்தால் டான்சிலிட்டிஸ் என்று முடிவு செய்து விடக்கூடாது. அதே சமயம், தொடர்ந்து ஒருவருக்கு தொண்டையில் வீக்கம், எரிச்சல், கரகரப்பு இருந்தால் கண்டிப்பாக டாக்டரிடம் போய் காட்ட வேண்டும். உணவு விழுங்க முடியாமல் போகிறபோதே உஷாராகி விட வேண்டும். அப்போதே காட்டினால் சிகிச்சை சுலபமாகி விடும்.
எத்தனை வகை?
டான்சிலிட்டிஸ் கோளாறில் மிதமானது, நடுத்தரமானது, மோசமானது என்று மூன்று வகைகள் உள்ளன. தொண்டையில் தொடர்ந்து வலி இருக்கும். அதைத் தொடர்ந்து லேசான காய்ச்சல் ஆரம்பிக்கும். தொண்டை சதை, மிகவும் சிவப்பாகி விடும். அதில் இருந்து சீழ் வரலாம். வராமலும் இருக்கலாம். இப்படி சிவந்த நிலையில் சதைப்பகுதி தொங்கியபடி இருக்கும். அதனால், தொண்டையில் உணவை விழுங்குவது தண்ணீர் குடிப்பது போன்றவற்றின் போது பெரும் எரிச்சல் வரும். தொண்டை அழற்சியின் அறிகுறி, மூன்று நாளில் இருந்து மூன்று மாதம் வரை இருக்கும். மூன்று மாதத்தில் தொண்டை வீக்கம் அதிகரிக்கும். வாய் நாற்றமெடுக்கும்.
கண்டுபிடிப்பது எப்படி?
நோயாளியின் தொண்டையைத் திறக்கவைத்து பரிசோதித்தாலே டாக்டரால் கண்டுபிடித்து விட முடியும். தொண்டையில் நிணநீர் பகுதியை சோதித்தாலும் தெரியவரும். தொண்டை சதைப்பகுதி சிவந்து வீக்கம் கண்டிருப்பதும் டான்சிலிட்டிசின் அறிகுறி தான். காய்ச்சல் இருந்தால் ரத்தப் பரிசோதனை செய்ய டாக்டர் ஆலோசனை தருவார். இதன் மூலம் பாக்டீரியா தாக்குதல் எந்த அளவுக்கு இருக்கிறது என்பது தெரியும்.
மருந்து பயன்படுமா?
கிருமிகள் பாதித்திருப்பது, அதன் விளைவாகத் தொண்டை சதைப்பகுதி பாதிப்பு போன்றவற்றை ஆராய்ந்து பின்னர் தான் மருந்துகள் மூலம் குணமாகுமா என்பது தெரியவரும். பெரும்பாலான நோயாளிகளுக்கு மருந்தால் குணமடைந்து விடும். மிக அதிக பாதிப்பு இருந்தால் அடித்தொண்டைப் பகுதியில் சதைப்பகுதியில் அறுவை சிகிச்சை தேவை. அப்போது தான், டான்சிலிட்டிஸ் முழுமையாகத் தீரும். காய்ச்சல், வலி போக்கத்தான் மருந்துகள் பயன்படும். அதையும் தாண்டி, டான்சிலிட்டிஸ் தீர்வதற்கு இந்த மருந்துகள் பயன்தராது.
எப்போது ஆபரேஷன்?
டான்சிலிட்டிஸ் பாதிப்பு வந்தாலே, அறுவை சிகிச்சை தேவையில்லை. ஆண்டுக்கு நான்கு, ஐந்து முறை தொடர்ந்து ஏற்பட்டால், அறுவை சிகிச்சை தான் சரியான தீர்வு. தொற்றுக்கிருமி மூலம் எப்போதோ ஒரு முறை வந்தால் மருந்துகள் போதுமானது. குழந்தைகளுக்கு அடிக்கடி இந்த பாதிப்பு வரும். அதற்காக உடனே அறுவை சிகிச்சை தேவைப்படாது. மருந்துகளால் சரிசெய்யப்படாமல் போனால், அறுவை சிகிச்சை செய்யலாம்.
தவிர்க்க முடியுமா?
தொண்டை அழற்சிக்கு காரணமான வைரஸ், பாக்டீரியாக்கள் உள்ளதால், ஒவ்வொருவருக்கும் ஒரு மாதிரியான பாதிப்பு ஏற்படும். அவரவர் நடவடிக்கையைப் பொறுத்துத்தான் இந்தக் கோளாறு ஏற்படும். சாப்பிடும் டம்ளர், உணவு சாப்பிடும் தட்டு, பாத்திரங்கள் விஷயத்தில் அடுத்தவர் பயன்படுத்தியதைக் கண்டிப்பாக பயன்படுத்தக்கூடாது. அடுத்தவர் குடித்த டம்ளரை நாம் வாங்கி மீதித் தண்ணீரைக் குடிப்பதோ, வாயில் வைத்துக் குடிப்பதோ தவறான பழக்கம். இதனால்தான் இந்த பாதிப்பு வர வாய்ப்புள்ளது