கோடுகள்

இலக்கியம் கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகள் (All)

கோடுகள்

நாம் கோடு கிழிப்பவர்கள்
கோடுகளால்
கிழிக்கப்படுகிறவர்கள்

சில கோடுகளை
நமக்காகப் பிறர் கிழிக்கிறார்கள்

சில கோடுகளை
நமக்காக நாமே கிழித்துக்கொள்கிறோம்

நாம் கோடுகளால் வரையப்படுகிறோம்
கோடுகளால் அழிக்கப்படுகிறோம்

நாம் கோடுகளின் அடிமைகள்
நாம் கோடுகளாலேயே அறியப்படுகிறோம்

ஓவ்வொருவரைச் சுற்றியும்
இருக்கிறது இலக்குவனக் கோடு
இராவணன் மட்டுமல்ல
இராமனும் இருக்கிறான்
கோடுக்கு அப்பால்

நாம் பாதுகாப்புக்காகக்
கோடுகள் வரைகிறோம்
கோடுக்கு உள்ளேயும்
வருகிறது ஆபத்து

நாம் கோடு கிழித்து
விளையாடுகிறோம்

கோடுகள்
நம் ரேகைகள் ஆகிவிடுகின்றன

நாம் கோடுகளுக்காகச்
சண்டை போட்டுக் கொள்கிறோம்

ஒரு கத்தியின் கீறலைப்போல்
நம் கோடுகளில் கசிகிறது ரத்தம்

நம் கோடுகள்
தூக்குக் கயிறாகி இறுக்குகின்றன
பாம்புகளாகிக் கடிக்கின்றன

நாம் கோடுகளுக்காகச் சாகிறோம்

நதிகளைப் போல் நம் கோடுகளில்
நீர் ஓடுவதில்லை

மின்னலைப் போல் நம் கோடுகளில்
வெளிச்சம் இல்லை

இசைத் தட்டைப் போல் நம் கோடுகளில்
சங்கீதம் இல்லை

எழுத்தைப் போல் நம் கோடுகளில்
அர்த்தம் இல்லை

கண்ணீரைப் போல் நம் கோடுகளில்
மனிதம் இல்லை

கோலம் போல் நம் கோடுகளில்
வரவேற்பு  இல்லை

ஏரின் தடம் போல் நம் கோடுகளில்
விளைச்சல் இல்லை

எந்த ஊருக்கும் போகாத
பாதைகளாக
நீளுகின்றன
நம் கோடுகள்

சரித்திரத்தின் துக்கங்களைச்
சுமந்து கொண்டு
சுகப் பயணிகளோடு
அவற்றில்
பயணம் செய்கிறோம் நாம்

முடிவே இல்லாமல்
வரப்பிலும் முளைக்கிறது
புல்
வேலியிலும் மலர்கிறது
பூ
நம் கோடுகளில் மட்டும்
காயங்கள்

– அப்துல் ரகுமான்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *