ஊடகம் பேசிடும் தன்மை
ஊனமாய்ப் போகுதே உண்மை
நாடகம் போடுதல் கண்டு
நாணமே நாணிடும் ஈண்டு
பாடமும் பாடலும் நம்மை
பார்த்திடும் தோரனை வெம்மை
வேடமேப் போடுதல் என்றும்
வேகமாய்த் தீர்த்திட நின்று
தீவிர வாதியாய்க் காட்டி
தீர்த்திட ஏனிதில் போட்டி?
மேவிடும் வேற்றுமை யாரால்?
மேதினி கூறிட வாராய்!
பாவிகள் காட்டிடும் வஞ்சம்
பாலினு லூற்றிடும் நஞ்சாம்
தாவிடும் ஓரினம் நம்மை
தாழ்ந்திடக் கூவுதல் உண்மை
ஊழ்வினைப் பேரிலே மக்கள்
ஊழலைப் பார்த்திடா வெட்கம்
வாழ்வினைத் தாக்கிடும் செய்தி
வாழ்வதா சாவதா நீதி?!
பாழ்வினை யூட்டிடும் பாடல்
பாலகர் யாவரின் தேடல்
சூழ்நிலைக் கைதியாய் நாமும்
சோர்ந்திட வாழ்ந்திட லானோம்
ஆயிரம் கைகளைக் கொண்டு
ஆதவ(னைச்) சாடுதல் போன்று
ஆயிரம் பொய்களைக் கூட்டி
ஆர்ப்பரி(க்கும்) ஊடகம் காட்டி
வாயினா லூதிடும் காற்றால்
வாய்மை நீங்கிட மாட்டா
ஆயினும், வேற்றுமைத் தூண்டி
ஆணவம் தோன்றிட வேண்டா.
நாடுவோம் தாயக மென்றும்
நானிலம் போற்றிட வேண்டும்
சாடுவோம் ஊடகம் செய்யும்
சூழ்ச்சிகள் யாவும் பொய்யாம்
பாடுவோம் கூடியே காயல்
பார்த்திடும் பாட்டர(ங்க) வாயல்
தேடுவோம் ஊடக வெற்றி
தேடியது கூடினால் பெற்றி
(யாப்பிலக்கணம்: விளம்+விளம்+தேமா அரையடிக்கு என்னும் வாய்பாட்டில் அறுசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்)
—
”கவியன்பன்” கலாம், அதிராம்பட்டினம்(பிறப்பிடம்)
அபுதபி(இருப்பிடம்)
எனது வலைப்பூத் தோட்டம் : http://kalaamkathir.blogspot.com
மின்னஞ்சல் முகவரி: kalamkader2@gmail.com
shaickkalam@yahoo.com
அலை பேசி: 00971-50-8351499
தற்காலிக அலைபேசி விடுமுறை காலம் (18/06/2011 வரை )தாயகத்தில்: 00918438134619