பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம்
ஜாஹிலிய்யத்
J.S.S. அலி பாதுஷா மன்பயீ பாஜில் ரஷாதி
அளவிலா அருளும் நிகரில்லாத அன்பும் நிறைந்த ஏக இறைவன் அல்லாஹ்வின் திருநாமம் போற்றி துவங்குகின்றேன்.
படைப்பினங்களில் மிகச்சிறந்த படைப்பாக மனித இனத்தை இறைவன் படைத்திருக்கின்றான். மனிதர்கள் இவ்வுலகில் பிறப்பு எய்திய நாள்முதல் இவ்வுலகை விட்டுப்பிரியும் வரையிலும் தமது வாழ்க்கை பயணத்தில் சுகம் காணவே விரும்புகின்றான்.
இவ்வுலகிலும் சுகம் மறைவுக்குப்பின் மறுமையிலும் சுகம் பெற வேண்டுமானால் மனிதன் படைத்தவனை மட்டுமே வணங்க வேண்டும். அவனுக்கு மட்டுமே அடிபணிய வேண்டும். இதில் எள்ளலவும் சந்தேகமே இல்லை. மனித சமுதாயம் அனைத்திற்கும் ஒரே இறைவன், அல்லாஹ் ஒருவன் தான். மனிதன் நிறத்தில் கருப்பாக இருந்தாலும் சரி, வெள்ளையாக இருந்தாலும் சரி, சிறுபான்மை இனத்தவர்களாக இருந்தாலும் சரி, பெறும்பான்மை யானவர்களானாலும் சரி, எந்த நாட்டில் எந்த திசையில் வாழக்கூடியவர்களானாலும் சரி, அவர்கள் அத்துனை பேரையும் படைத்து பரிபாலித்து வருகிறவன் அல்லாஹ் ஒருவன் தான். எனவே தான் அல்லாஹ் ஆணித்தரமாக கூறுகின்றான். மனித சமுதாயம் அனைத்தும் என்னை மட்டுமே வழிபடவேண்டும் என்று. உங்களின் இந்தச் சமுதாயம் உண்மையில் ஒரே சமுதாயமே. மேலும் நானே உங்களின் அதிபதி. எனவே எனக்கே நீங்கள் அடிபணியுங்கள் (அல்குர்ஆன் 21: 92)
ஆனால் இன்று ஒரே சமுதாயமாகிய மனிதர்களுக்கு மத்தியில் எத்துனை வேறுபாடுகள், எவ்வளவு குளறுபடிகள், போட்டிகள், பொறாமைகள், ஒழுக்கத்துடனும் கண்ணியத்துடனும் வாழவேண்டிய சமுதாயம் இன்று பிளவுபட்டு ஒருவருடன் மற்றவர் போட்டிபோட்டுக் கொண்டு உனக்கு நான் சலைத்தவனல்லன் என்று பெருமையடித்துக் கொண்டு தன்னைத்தானே அழித்துக் கொண்டு தன் பயணத்தை பேரழிவின் பக்கம் செலுத்திக் கொண்டிருக்கின்றார்கள். படைத்தவன் கூறுகின்றான் இதன் பின்னர் மக்கள் மாறுபட்டு பல பிரிவுகளாக பிரிந்தனர். அறப்போரில் ஈடுபடுவதை விட்டுச் சோம்பேரிகளாயினர். சுகமான வாழ்வை விரும்பினர். மன இச்சைகளைப் பின்பற்ற ஆரம்பித்தனர். அல்லாஹ் யாரை பாதுகாத்தானோ, அவர்களைத்தவிர மற்றவர்களிடம் வெறுக்கத்தக்க செயல்கள் தோன்றின. எனவே அவர்களை அல்லாஹ் மாற்றினான். அவர்கள் செய்த செயல்களுக்காக அவர்கள் மீது எதிரிகளை அல்லாஹ் சாட்டினான். அல்லாஹ் தனது அடியார்களுக்கு அநீதம் இழைப்பவனல்லன். அல்லாஹ் கூறுகின்றான். எந்த ஒரு சமுதாயத்தவரும் தம் நிலையை தாமே மாற்றிக் கொள்ளாத வரையில் அல்லாஹ் அவர்களை நிச்சயமாக மாற்றுவதில்லை. (அல்குர்ஆன் 13:11) என்கிறான். எனவே மனித சமுதாயம் படைத்தவனை மறந்துவிட்டு மனோ இச்சைகளுக்கு அடிபணிந்தால் அல்லாஹ்வின் உதவி எப்படி கிடைக்கும்.
வணங்குவதற்கும் வழிபடுவதற்கும் தகுதியான ஒரே இறைவனாகிய அல்லாஹ்வின் சட்டங்களைப் பின்பற்றாமல் இன்று இந்த மனித சமுதாயம் ஜாஹிலிய்யத் என்ற அறியாமை பழக்க வழக்கங்களைப் பின்பற்றுகின்றனர். ஜாஹிலிய்யத் என்றால் என்ன? ஜாஹிலிய்யத் என்றால் இறைவன் வகுத்துத் தந்த இஸ்லாமிய சட்டத்திற்கு எதிராக அல்லாஹ்வின் வழிகாட்டுதல் அவனின் இறுதித் தூதர் (ஸல்) அவர்களின் வழிமுறையை விட்டு விட்டு, யூகம், கற்பனை, கண்டதே
காட்சி கொண்டதே கொள்கை என்று மன இச்சைகளின் அடிப்படையில் தோற்றுவிக்கப்படும் அனைத்துமே ஜாஹிலிய்யத்தின் வழிமுறையாகும். இதுபோன்ற செயல்முறையை எங்கு – எக்காலத்தில் மனித சமுதாயம் தேர்ந்தெடுத்துக் கொண்டாலும் அம்முறை ஜாஹிலிய்யத்தின் வழிமுறை என்றுதான் சொல்லப்படும். எனவே வாழ்க்கை பயணம் சுகமானதாக இருக்க வேண்டுமானால் மனோ இச்சைகளை விட்டு விட்டு படைத்தவனின் வழியை பற்றிப் பிடிக்க வேண்டும்.
இன்றைய நவீன உலகமும் தனது மனோ இச்சையை பின்பற்றுவதின் காரணத்தால்தான் போட்டிகளும் பொறாமைகளும் ஏற்படுகின்றன. அரசியலில் போட்டி தலைவர்களுக்கு மத்தியில் கருத்து வேறுபாடு என்றால் சமுதாயத்தையே பிரித்து சின்னாபின்னப்படுத்தி தனது மன இச்சைகளுக்கு கட்டுப்பட்டு வாழ்கின்றனர். அண்டை நாடுகள் என்று எடுத்துக் கொண்டால் நான் பெரியவனா அல்லது நீ பெரியவனா? என்னிடம்தான் அதிகமான ஆயுதம் உள்ளது என்று அவ்வப்போது ஏவுகணைச் சோதனை என்று பெருமையின் உச்சகட்டத்தில் சகோதரத்துவம் சமத்துவத்தையோ குழி தோண்டி புதைத்துக் கொண்டிருக்கின்றனர் ஏன் இந்த நிலை. பயணம் மனோ இச்சையை நோக்கி பயணிப்பதால் படைத்தவனை மறந்ததினால் அல்லாஹ் பாதுகாக்க வேண்டும்.
எந்த சமுதாயம் அவர் தனி மனிதராக இருந்தாலும் சரி அல்லது எந்த நாட்டைச் சேர்ந்தவராக இருந்தாலும் சரி, வாய்மைக்கு புரம்பாக, நீதிக்கு எதிராக தன் மன இச்சைக்கு கட்டுப்பட்டு வாழ்ந்து தன் மக்களையும் வழிநடத்துகிறார்களோ அவர்கள் அல்லாஹ்வின் கோபத்திற்கு ஆளானவர்கள் அவனின் கோபம் வேதனை கடுமை யானதாக இருக்கும். அதை தான் அவ்வப்போது நாம் சந்தித்துக் கொண்டிருக்கின்றோம். மழையினால் அழிவு, புயலினால் அழிவு, பூகம்பம், சுனாமி என்று நடந்தேறி வருகின்றது. எங்கெல்லாம் மனோ இச்சைக்கு அடிமையாகி மக்கள் தன் மனம் போன போக்கில் வாழ்கின்றார்களோ அங்கெல்லாம் இது போன்ற பேரழிவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது மட்டுமல்ல மறுமையின் அடையாளமும் கூட. மேலும் மக்கள் கட்டிடங்களை (போட்டி போட்டுக் கொண்டு) உயரமாக கட்டாத வரை மறுமை நாள் வராது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புஹாரி :அபூஹூரைரா) கல்வி அகற்றப்படும், பூகம்பங்கள் அதிகரிக்கும், காலம் சுருங்கும், குழப்பங்கள் தோன்றும், கொலை அதிகரிக்கும், செல்வம் கொழிக்கும் அது வரை மறுமை நிகழாது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி: அபூஹூரைரா) மேலும் கூறினார்கள். (மறுமை நாள் வருமுன்) காலம் சுருங்கி விடும். செயல்பாடு குறைந்து போகும். மக்களின் உள்ளங்களில் (பேராசையின் விளைவாக) கஞ்சத்தனம் உருவாக்கப்படும் குழப்பங்கள் தோன்றும் ஹர்ஜ் (கொலை) பெருகி விடும் என்று நபிகள் (ஸல்) கூறினார்கள் (புஹாரி : அபூஹூரைரா)
எனதருமை சகோதரர்களே உலகில் நடந்து வருகின்ற கோர சம்பவங்களையும் அல்லாஹ்வின் அத்தாட்சிகளையும் கண்கூடாக பார்த்த பின்பும் நாம் மன இச்சைகளுக்கு கட்டுப்பட்டு நமது வாழ்க்கை பயணத்தை தொடரலாமா? … அல்லாஹ் நம்மை மன இச்சைகளிலிருந்து பாதுகாப்பானாக ஆமீன் வஸ்ஸலாம் .
தேரிருவேலி J.S.S. அலி பாதுஷா மன்பயீ பாஜில் ரஷாதி
ஷார்ஜா