2006ஆம் ஆண்டு தொடங்கி அமீரக மண்ணில் அன்னைத் தமிழ் பவனி அழகுற நடந்தேறிவருகிறது. ஒவ்வொரு மனிதருக்குள் பொதிந்திருக்கும் திறமைதனை வெளிக்கொணர நாங்கள் எடுத்துவரும் இனிய முயற்சி! மாதந்தோறும் ஒரு தலைப்பு என்கிற வகையில் ஒரே தலைப்பில் ஒவ்வொருவரும் சிந்திக்கும் பேரழகு வெளிப்படுகிறது. பல்வேறு கருத்துக்களை உள்ளடக்கிய தொகுப்பாக இதழ்கள் வெளியிடப்பட்டு வருகின்றன!
தாயகத்திலும்கூட இதுபோன்ற தொடர் நிகழ்ச்சிகள் சாத்தியமில்லாத நிலையில் அயலகத்தில் வாழ்வுதேடி வந்திருக்கும் தமிழர்கூட்டம் .. தங்கள் திறமைகளுக்கான அங்கீகாரம் கிடைக்க வழிவகைகள் செய்துவருகிறோம். இன்னும் இன்னும் எங்கள் பணிகள் தொடரும்! உங்களைப் போன்ற நல்லோர் தம் ஆதரவும் வாழ்த்துக்களும் எங்களை உயரவைக்கும்! உலகம் அறியவைக்கும்!
தலைவர் – திரு. எல். கோவிந்தராஜ்
ஆலோசகர் – கவிஞர் காவிரிமைந்தன்
பொதுச் செயலாளர் – திரு. சிம்மபாரதி
இணைச் செயலாளர்கள் திரு. ஜியாவூதீன்
திரு. கீழைராஸா
துணைச் செயலாளர்கள் திரு. முகவை முகில்
திரு. ஆதிபழனி
பொருளாளர்கள் – திரு. லட்சுமி நாராயணன்
திரு. ஆனந்தன்
ஒருங்கிணைப்பாளர்கள்- திரு. அபுதாபி பழனி
திரு. மலைவேல்
அன்புடன்,
காவிரிமைந்தன்
அன்பார்ந்த நெஞ்சங்களே!
ஈடுயிணையில்லாத தமிழ்மொழியை தாய்மொழியாய் கொண்டவர்கள் நாம்! வாய்மொழியாகினும், வடிவம்தரும் ஏட்டுவழியாகினும் தேன்தமிழை, தென்னவரின் புகழ்சொல்லும் வான்மறையாம் வள்ளுவத்தை, மானுட இயலை வகைவகையாய் செப்பம் தந்த தொல்காப்பியச் சூத்திரங்களை, பக்தி இலக்கியங்களை, சங்கத்தமிழ் நூல்களை, பாக்களை, காப்பியங்களை, செய்யுள் வடிவங்களை, நாட்டுப்புறச் செல்வங்களைத் தன்னுள் கொண்டு திகழும் தமிழ் மகளை – உலக மொழிகளில் மூத்தவளை – இளமை கொலுவிருக்கும் கன்னித்தமிழை, எண்ணி எண்ணி இறுமாப்பு எய்துதல் படைப்பாளர்தமக்கு இயல்புதானே!!
கரும்பினும் இனிய கன்னல்மொழி, கவிதைக்கென்றே இன்பமொழி, சுடர்விளக்கேற்றும் பெரும்பணியே எனினும் முரசு கொட்டும் முகமுடைய மொழி, நாவிலும் நடமாடி நற்றமிழ் வளம்பாடி, கற்றவர்திறம் சொல்லும் கனி மொழி! புவியெங்கும் தேடினும் இதுபோல் புகழொத்த மொழி காணல் அரிது!! அறநெறி முதலாய் குறள்வழி காட்ட, அகவல், பனுவல், ஆத்திச்சூடி, இன்னா நாற்பது, இனியவை நாற்பது, பனினெண்கீழ்க்கணக்கு, சிலப்பதிகாரம், சீவகசிந்தாமணி, குண்டலகேசி என வளமார் செல்வங்கள் வகைவகையாய் கண்ட மொழி! தன்னிலிருந்து கிளைபிரிந்து கன்னடம், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகள் தோன்றல்தந்த ‘தாய்’மொழியாம் நம் தமிழ் எனும் பூரணப்பொற்குடம், கவிஞர்களின் கற்பனைப் பாற்கடல்தனில் மூழ்கி வள்ளுவன், இளங்கோ, கம்பன் என விரிந்து.. நம் தலைமுறையில் பாரதி, பாரதிதாசன், கண்ணதாசன், பட்டுக்கோட்டை, வாலி, வைரமுத்து என தடம் பதித்தோர் நடாத்தி வந்த தமிழ் பவனி.. சீர்பெருக.. சிறப்புடனே செம்மொழியாய் உலக அரங்கில் கோலலோச்சும் இந்நேரம்..
அமீரகத்தில் அன்னைத் தமிழ் பவனியது – நம் ஒன்றுபட்ட சிந்தனையால், ஒருமித்த கருத்தால், உன்னத உழைப்பால், முயற்சிகளின் முகிழ்ச்சியாய் வானலை வளர்தமிழ் – அதன் முகமாய் ஒளிவிட.. படைப்பாளர்கள் கூடிப் பரவசமுடனே பாங்குடன் நடத்தும் ‘தமிழ்த்தேர்’ என்கின்ற ஒன்றின் பொருளறிவோம் அல்லவா? ஆம்.. ஊர்கூடித் தேரிழுத்தல் ஒற்றுமைக்கு ஒரு சின்னம்! வடம் பிடித்தல் என்னும் வழக்கம் – அனைவருமே சமம் என்னும் தத்துவத்தை எடுத்துரைக்கும்!
நம் அன்புத்தலைவர் குறிப்பிட்டதைப்போல், அனைத்து மதங்களிலுமே அழகாய் பவனி வருவது ‘தேர்’ மட்டுமே! மதங்கள் பல இருந்தாலும் மார்க்கங்கள் பிறந்தாலும் எம்மதமும் சம்மதமாய் தேர்த்திருவிழா நடத்துதல் யாங்கணுமே நடைபெறும்! அவ்விதமாய் இன மதங்கள் கடந்தபடி.. இதயங்கள் இணைந்தபடி.. மாதம்தோறும் இனிய பல இதழ்கள் வெளியிட்டு விழாக்களை மொழியென்னும் வடம்பிடித்து தமிழ்த்தேர் உலா காண்கிறோம்!
உங்கள் ஒவ்வொருவரின் கரத்தைப் பற்றியபடி.. ஒன்றுபட்ட உணர்வுடனே.. வென்று காட்டுவோம் என வேண்டி விடைபெறுகின்றேன்!
காவிரிமைந்தன்
ஆலோசகர் – வானலை வளர்தமிழ்
ஆசிரியர் – தமிழ்த்தேர்
தற்போது – ருவைஸ், அபுதாபி..
00971 50 2519693
kmaindhan@gmail.com