காந்தி

அதிரை கவியன்பன் கலாம் இலக்கியம் கவிதைகள் (All)

காந்தியுடை(ய) நாண யத்தை
            காற்றிலே விட்ட கட்சி(கள்)
காந்தியையும் நாண யத்தில்
          கச்சித மாக அச்சில்
காந்திமகான் சொல்லிச் செய்துக்
           காட்டிய சத்யப் போரில்
காந்தியவா(தி) அன்னா பாரீர்
          களத்திலே உதவ வாரீர்
கண்ணாகப் போற்றும் நாட்டில்
                   களவுகள் விரட்ட வேண்டி
புண்ணாக வளரும் ஊழல்
                  புறப்படு மிடத்தில் தோண்டி
மண்ணோடுப் புதைக்கச் சொன்னா(ரே)
                  மக்களைத் திரட்டி அன்னா(ஹஸாரே)
உண்ணாத அறப்போர் சாட்சி
                    உடன்பட வைத்த காட்சி
ஒற்றுமையாய் உழைத்தால் வெற்றி
                   ஒழுங்குடன் வாழ்தல் பெற்றி
ஒற்றுமையால் கோப்பை வென்றோம்
                  ஊழலும் போகு மென்போம்
கற்றுணர்ந்த பாட மாகும்
                   களத்திலே நமது வேகம்
பற்றுடனேச் செய்வாய் நீயே
                 பற்றிடும் பரவும் தீயாய்
(யாப்பிலக்கணம்: அறுசீர் விருத்தம்:
காய்ச்சீரும் மாச்சீர் தேமா (அரையடிக்கு)
விளமுடன் மாச்சீர் தேமா (அரையடிக்கு)

02)

எப்பாடு பட்டாலும் சோதனைகள் வென்றுதானே எழுந்து நிற்பான்
தப்பான வழிகளிலேச் செல்லாது உழைப்பினிலே தயங்கா(த) ஜப்பான்
கூப்பாடு போட்டவர்கள் புலம்பியவர் அழுகையின் கூவல் இல்லை
சாப்பாடு கேட்டவர்கள் வரிசையில் நிற்பதுவே சாந்த எல்லை
எல்லார்க்கும் கிடைத்திடவே தேவைக்கும் அதிகமாக எடுக்கா(த) அன்பு
பொல்லாதத் திருட்டுகள் சாலையில் இடைஞ்சல்கள் புரியா(த) பண்பு
நில்லாமல் உதவிடவே எந்நேரம் விழிப்புடனே நிற்கும் காவல்
சொல்லாலே வடித்திடவே முடியாத மீட்புப் பயிற்சி ஆவல்
சோதனைகள் வந்தாலும் மீட்சியுடன் உழைத்திடவேச் சோரா(த) திண்மை
சாதனைகள் செய்தாலும் களித்திடாத நடுநிலைமைச் சார்ந்த தன்மை
வேதனைகள் தொடர்ந்தும் உறுதியுடன் பணியாற்றி வெல்லும் வேட்கை
போதனைகள் நமக்கெலாம் ஜப்பானின் விடாமுயற்சி போற்றும் வாழ்க்கை
காய்-காய்-காய்-காய்-மா-தேமா
வாய்பாட்டில் அமையும் அறுசீர் விருத்தம்
03)-
இலக்கினைப் பார்த்து வாழ்வினை நகர்த்து
             இடைவரும் சோம்பலை யொழித்து
கலக்கமே யின்றி யிலக்கினைப் பற்றிக்
            களத்தினு ளிறங்கினால் வெற்றி
விலக்கிடு ஐயம் யாவுமே துணிந்து
       விதைத்திடு மனத்தினுட் பதிந்து
துலங்கிடும் புதிய வழிகளும் உன்னால்
          துவக்கிடுப் புள்ளியும் முன்னால்
 
 
நோக்கியே தேவை யுணர்ந்திட வேண்டும்
       நோக்கமும் முடிவுறும் நாளை
ஊக்கமாய்த் தெரிவு செய்திட வேண்டும்
      ஊசலும் விலகவும் வேண்டும்
ஆக்கமும் குறையக் காரணம் என்ன
     ஆர்வமாய்த் துலக்கிட வேண்டும்
தாக்கிடும் விபத்தில் பரிவுடன் வந்து
     தாங்கிடும் நண்பரும் வேண்டும்
 
 
திட்டமிட் டபடி யிலக்கினை நோக்கித்
      திண்ணமா யுழைத்திட வேண்டும்
வட்டமாய்க் கவலை சுற்றியே மனத்தை
        வதைத்திடா திருந்திட வேண்டும்
நட்டமே வந்து தடுத்திட முனைந்தால்
             நம்பியே வென்றிட வேண்டும்
பட்டதும் தெளிவுக் கிட்டவும் வேண்டும்
        படைத்தவ னருளவும் வேண்டும்

விளம், மா, விளம், மா, விளம், விளம், மா வாய்பாட்டில் அமையும் எழுசீர் விருத்தம்

”கவியன்பன்” கலாம், அதிராம்பட்டினம்(பிறப்பிடம்)
அபுதபி(இருப்பிடம்)
 
எனது வலைப்பூத் தோட்டம் : http://kalaamkathir.blogspot.com
 
மின்னஞ்சல் முகவரி: kalamkader2@gmail.com
                                       shaickkalam@yahoo.com
அலை பேசி: 00971-50-8351499

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *