காய்-காய்-காய்-காய்-மா-தேமா
வாய்பாட்டில் அமையும் அறுசீர் விருத்தம்
எப்பாடு பட்டாலும் சோதனைகள் வென்றுதானே எழுந்து நிற்பான்
தப்பான வழிகளிலேச் செல்லாது உழைப்பினிலே தயங்கா(த) ஜப்பான்
கூப்பாடு போட்டவர்கள் புலம்பியவர் அழுகையின் கூவல் இல்லை
சாப்பாடு கேட்டவர்கள் வரிசையில் நிற்பதுவே சாந்த எல்லை
எல்லார்க்கும் கிடைத்திடவே தேவைக்கும் அதிகமாக எடுக்கா(த) அன்பு
பொல்லாதத் திருட்டுகள் சாலையில் இடைஞ்சல்கள் புரியா(த) பண்பு
நில்லாமல் உதவிடவே எந்நேரம் விழிப்புடனே நிற்கும் காவல்
சொல்லாலே வடித்திடவே முடியாத மீட்புப் பயிற்சி ஆவல்
சோதனைகள் வந்தாலும் மீட்சியுடன் உழைத்திடவேச் சோரா(த) திண்மை
சாதனைகள் செய்தாலும் களித்திடாத நடுநிலைமைச் சார்ந்த தன்மை
வேதனைகள் தொடர்ந்தும் உறுதியுடன் பணியாற்றி வெல்லும் வேட்கை
போதனைகள் நமக்கெலாம் ஜப்பானின் விடாமுயற்சி போற்றும் வாழ்க்கை
—
”கவியன்பன்” கலாம், அதிராம்பட்டினம்(பிறப்பிடம்)
அபுதபி(இருப்பிடம்)
எனது வலைப்பூத்தோட்டத்தில் உங்களின் வருகைப் பதிந்திட வழி: http://kalaamkathir.blogspot.com
மின்னஞ்சல் முகவரி: kalamkader2@gmail.com
shaickkalam@yahoo.com