தீர்வைத் தே​டி! ( ஹபீப்ராஜாவி​ன் பிரிக்கப்ப​டாத மடலுக்கு பதில் மடல்)

இலக்கியம் கட்டுரைகள்

From: KALATHUR ANBAN <kalathuraan@gmail.com>
Date: 2011/3/16
Subject: தீர்வைத்தேடி! ( ஹபீப்ராஜாவின் பிரிக்கப்படாத மடலுக்கு பதில் மடல்)
To: vkalathur.com@gmail.com

அன்புள்ள ஹபீப்ராஜாவுக்கு…!
அஸ்ஸலாமுஅலைக்கும்.
 
தங்களின் பிரிக்கப்படாத கடிதம் கண்டேன்! ஆனால்… நீங்களே பிரிக்காதநிலையில், நாகரிகம் கருதி அதை நானும் பிரிக்கவில்லை! எனினும் என்னால், யூகிக்க முடிந்தது. அதில் என்ன பதில் இருக்கக்கூடும் என்பதை! ஏனெனில்.. கடந்த 22 வருடங்களாக என் குடும்பத்திலிருந்து எனக்கும் இதுப்போன்ற மடல்கள் வந்துக்கொண்டுதான் இருக்கிறது!
 
சரி, அதற்கு முன்.. தங்களின் எழுத்திற்கும் , இலக்கியத்துறையில் எடுத்துவைத்த உங்களின் முதல் அடிக்கும் என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்!
 
உங்களுக்கும் எனக்கும் வருவதைப்போன்றே.. புலம்பெயர்ந்து வசிக்கும் யாவருக்கும் அவரவர் குடும்பத்திலிருந்து வரும் பொதுவான கடிதம்தான். ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. ஆனாலும், மேலே சொன்ன நீரிழிவு, இரத்தக்கொதிப்பு, அல்சர் நோயை சுமந்தவண்ணம் நீங்கள் பறந்துவிட்டீர்கள். ஆனால்.. இன்னும் பலருக்கு இத்தனை நோய்கள் வந்தபின்னும், பார்சல் பார்சலாக மருந்து மாத்திரைகள்தான், இவர்களைத்தேடி பறந்துவருகிறதேயன்றி.. இங்கிருந்து யாரும் முழு திருப்திக்கொண்டு போனதாய் தெரியவில்லை. 60 வயதுக்கு மேல் கட்டாயப்படுத்தி அமீரகமே, நம்மை நம் சொந்த நாட்டுக்கு அனுப்பி வைக்க வேண்டிய அவலநிலை! இருந்தும் ‘இன்னும் ஒரு ஸ்டே அடிச்சு ஒரு மூணு வருஷம் இருந்திருந்தா நல்லாயிருந்திருக்குமே..’ என்று குறைப்பட்டுக் கொள்வோரும் உண்டு. நான் யாரையும் குற்றம் சொல்லவில்லை!  நாம் ஒவ்வொருவரும் ஒவ்வொரு சூழ்நிலையை சொல்லி.. ‘இந்த அமீரகச் சிறையில் சூழ்நிலைக் கைதியாகவே இருக்கிறோம்’ இந்தச் சூழலை நாமே உறுவாக்கிக்கொள்கிறோம்! இதில் இன்னொரு வகையான சாராரும் உண்டு! ’சம்பாதித்தது போதும் வந்துவிடுங்கள். இருக்கும் பொருளாதாரத்தைக்கொண்டு சொந்தமாக இங்கு ஒருதொழில் செய்து பிழைத்துக்கொள்ளலாம்’ என்றுவரும் கடிதங்களை அலட்சியப்படுத்தியும், பிரிக்காமலும்கூட சில கடிதங்கள் இருக்கத்தான் செய்கின்றன! இதற்கெல்லாம் காரணம் “போதும் என்ற மனமே பொன்செய்யும் மருந்து” என்ற பொன்மொழியை அறியாததும்.. அல்லது அறிந்தும் அலட்சியப்படுத்துவதுமே!
 
ஆனாலும், நீங்கள் வருத்தப்பட்டாலும் இங்கு ஒன்றைச் சொல்லியே ஆகவேண்டும்! அது என்னவெனில்.. நல்ல சிந்தனைகளையும், உபதேசங்களையும் பிறருக்கு பதிவிடும் நாம்… முதலில் அந்த உபதேசங்களை மத்தித்தவர்களாய் ‘நாம்’ இருத்தல் அவசியம். என்னையும் சேர்த்துதான் சொல்கிறேன். நானும்கூட இதே வலைதளத்தில் “ஆயுளின் அற்பம்” என்றத் தலைப்பில், ஒரு சிந்தனைமிக்க கட்டுரை எழுதியவன்தான். ஆனாலும்.. எழுதி வெளிவந்தப்பின் வெட்கினேன். வேதனைப்பட்டேன். ஏனெனில்.. எழுதும்போது பிறருக்காகவும், அதை படிக்கும்போது எனக்காகவுமாய் என்னியபோது.. என் எழுத்தே என் நெஞ்சைஉறுத்தியது! இதுப்போன்ற உபதேசக்கட்டுரையை நாம் நம் மண்ணிலிருந்து எழுத வேண்டும்! பிறருக்கு உதாரணமாயிருந்து எழுத வேண்டும். இங்கிருந்து எழுதும்போது இங்குள்ள வலியை எழுதுவோம். இன்ஷா அல்லாஹ்…  ஊரிலிருந்துக்கொண்டு நாம்பட்ட வலியையும்.. அதற்கு நாம் கண்ட நிவாரணத்தையும் சொல்லி, நம் சமுதாயம் விழிப்படைய.. எழுத்தாலும் எண்ணங்களாலும் செயலாலும் பாடுபடுவோம் என உருதிப்பூண்டேன்.
 
ஆம்.. உண்மைதான் ஹபீப்ராஜா அவர்களே! வாலிப வயதில்.. இங்கு வரும் ஒரு இளைஞன், நரை விழுந்தும், நாடி நரம்பெல்லாம் தளர்ந்தும்  முதியவானாய்.. தாயகம் திரும்பும்போது.. பணம் சம்பாதித்தானோ இல்லையோ நிறைய நோய்களுடன்தான் செல்கிறான். இதற்கு தீர்வுதான் என்ன? நம் மீதும், நம் பிள்ளைகள் மீதும் நமக்கிருக்கும் ‘நம்பிக்கையில்லாமை’தான் காரணம். “நாமதான் படிக்கலே குடும்பத்த பிரிஞ்சு கஷ்டப்படறோம்.. நம்ம குழந்தைகளாச்சும் நல்ல படிச்சு, கஷ்டப்படாம இருக்கணும்..”  என்று கஷ்டப்பட்டு உழைத்து, படிக்கவைத்து… பின்னர், நம் பிள்ளைகளே.. நம்ம நாட்டிலேயே ஏதாவது வேலைதேடிக்கொள்வதாய் சொன்னாலும்… “இங்கிருந்து ஒரு மண்ணும் செய்யமுடியாது நீ போ…” என அதே வனவாசத்துக்குத்தானே அனுப்பிவைக்கிறோம். என்ன.. நாம் செய்தது வீட்டுவேலை, சுமைதூக்கும் கூலிவேலை. ஆனால்.. அவன் படித்ததால் ஏதோ ஒரு அலுவலகதில் வேலை செய்கிறான்! ஆனால், துறவரம் துறவரம்தானே! இப்போது படித்த தலைமுறை என்று பீற்றிக்கொள்ளும் நம்மில், எத்தனைப்பேர் இங்கு குடும்பத்துடன் வசிக்கிறோம். அதான் பார்த்தோமே சங்கமம் நிகழ்ச்சியில் எத்தனைப்பேர் குடும்பத்துடன் வந்திருந்தார்கள் என்று!
 
ஒன்று சொல்லட்டுமா ஹபீப்ராஜா அவர்களே! ஓரளவு போதுமான அளவு பொருளாதாரமும், திறமையும், தன்நம்பிக்கையும் உள்ள நம்போன்றவர்களே.. நம் நாட்டிற்கு சென்று செட்டிலாக ஆலோசிக்கவும் தயங்கவும் உள்ள நிலையில்.. பொருளாதாரத்தில் பின்தங்கிய, பாமர மக்கள் மிகவும் யோசிக்கத்தான் செய்வார்கள். பிரிக்கப்படாத மடலுடன் புறப்பட்ட பயணத்தைச் சொன்ன நாம்… ஊர் சென்றப்பின், உழைத்து.. சாதித்து.. வெற்றிப்பெற்று.. நம் வெற்றியையும், வளர்ச்சியையும் பறைச்சாற்றும் விதமாக எழுதுவோம்! ஏனெனில் எத்தனை வெற்றியாளர்கள் தன்னம்பிக்கை கட்டுரை எழுதினாலும்.. சுயசரிதை எழுதினாலும் மனதில் பதியாத நம் சமுதாயத்தினருக்கு… ’ வெளிநாட்டில் கஷ்டப்படும் நம் போன்றோர்.. நம் தாய் மண்ணில் சாதித்து சரித்திரம் படைத்ததை’ சொல்லும்போது மனதில் பதியும். அமீரகத்தில் வாழும் கவிஞனும், எழுத்தாளனும்.. பொதுவாய் தான் அனுபவிக்கும் கஷ்டங்களைதான் தன் படைப்புகளில் சொல்கிறானேயன்றி அதற்கான தீர்வை யாரும் சொல்வதில்லை!
 
நாம் சொல்வோம். இங்கிருந்தல்ல… நம் சொந்தநாட்டிலிருந்து..!
 
இனிவரும் நம் சமுதாய சந்ததிகளும், தலைமுறைகளேனும்.. துறவரமற்று, தம் குடும்பங்களுடன் மகிழ்ச்சியாகவும்
சிறப்பாகவும் வாழ ஏக இறைவன் வழிவகுப்பானாக! ஆமீன்!!
 
தங்களின் முயற்சிக்கும், நல்ல சிந்தனைக்கும் மீண்டும் என் வாழ்த்துக்கள்! நிறைய கருத்தாழமிக்க ஆக்கங்களை உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறேன்.
 
அன்புடன் நேசமிகு “களத்தூரான்”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *