http://www.vkalathur.com/story.php
பிரிக்கப்படாத கடிதம்
வளைகுடாவில் வாழும் சிலபேர் தன்னை சுற்றி என்ன நடக்கிறது என்று அறிந்திருந்தாலும்,. தாடிவெலுப்பதும் நாடி தளர்வதும் கூட அறியாதவர்களாகவே பலபேர் தனக்குள்ளே உள்ள மாற்றங்களை கூட அறியாதவராகவே வெளிநாட்டு வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றனர். இரவுவருவது எதற்காக என்று கேட்டால் “ ஓய்வு எடுப்பதற்காகவும்,மறுநாள் காலை பணிக்கு செல்வதற்காகவும்”. என்கிற அளவுக்கு வாழ்ந்து வருவது வருதத்திற்க்கு உரியதாக
இருக்கிறது. இதற்கெல்லாம் என்ன காரணம் என்று யோசித்தால்………….
“மகன் வாப்பாவுக்கு …. ..
“அன்புள்ள வாப்பாவுக்கு பிள்ளை எழுதும் மடல்…இங்கு யாவரும் நலம் அங்குள்ளவர்கள் நலமாய் வாழ வல்ல இறைவனை பிரர்த்தனை செய்தவனாக ஆரம்பம் செய்கிறேன் நான் துபாய்க்கு வந்து 5 வருடம் ஆகிறது. இந்த 5 வருடத்தில் வந்த விசா கடனை அடைத்துவிட்டேன்,நான் கண்ட சுகம் ஒரு முறை ஊர் வந்து சென்றுள்ளேன் எனக்கு துபாய் பிடிக்கவில்லை வாப்பா!, நான் ஊர் வந்து கூலி வேலை செய்தாவது குடும்பத்தை காப்பாற்றுகிறேன்.”
வாப்பா மகனுக்கு ….
அன்புள்ள பிள்ளைக்கு வாப்பா எழுதுவது இங்கு யாவரும் நலமே! நீ ஊர் வருவதாக எழுதி இருந்தாய் நம்வீட்டு கூரையில் ஓடுகள் உடைந்து மழை நீரால் வாரையும் கெட்டுவிட்டது, மேலே விழுந்துவிடுமோ என்ற பயத்தால் நாங்கள் இருக்கிறோம், மேல் கூரை சரி செய்யவேன்றுமென்றால் மரத்திற்கும் ஓட்டிற்கும் நிறைய செலவாகும் அதற்கு பதிலாக சிமெண்ட் வாங்கி காங்கிரெட் போட்டுவிடலாம் என்று நினைக்கிறேன் நீ ஊருக்கு வந்துவிட்டால் இதை செய்ய முடியுமா?
அதற்குமேல் உன் விருப்பம்.
அடுத்த 5 வருடம் கழித்து 10ஆம் ஆண்டு மீண்டும் மகன் வாப்பாவுக்கு
அன்புள்ள வாப்பாவுக்கு பிள்ளை எழுதுவது, தாங்கள் சொன்னதைப்போல் வீட்டுவேலை நல்லபடியாக முடிந்துவிட்டது. நான் விசாவை முடித்துவிட்டு ஊர் வரலாம் என்று இருக்கிறேன்.
வாப்பா மகனுக்கு……
அன்புள்ள பிள்ளைக்கு வாப்பா எழுதுவது, நீ விசாவை முடித்துவிட்டு ஊர் வருவதாக எழுதி இருந்தாய். ரொம்ப சந்தோசம். இதோ உம்மா எழுதுறாங்க படிச்சி பாரு..
அன்புள்ள மகனே நீ ஊர் வருவது சந்தோசம் தான் ஆனால் உன்தங்கை வளர்ந்து கொண்டே வருகிறாள் அவள் கல்யாணத்திற்கு உண்டான ஒன்றுமே நம்மிடம் இல்லை அதற்குமேல் உன் விருப்பம்.
11 வருஷம் கழித்து பிள்ளை உம்மாவுக்கு ….
அன்புள்ள உம்மாவுக்கு, தங்கையின் கல்யாணம் நாம் எதிர்பார்த்ததை விடவும் நன்றாகவே 50 பவுன், இரண்டு லட்சம் செலவில் சிறப்பாக முடிந்தது எனக்கு இந்த துறவறம் பிடிக்கவில்லை 6 அடி இடம் கூட சொந்தம் இல்லாத இந்த வாழ்க்கை போதும், நான் ஊரோடு வந்துவிடுகிறேன்.
பிள்ளைக்கு உம்மாவிடமிருந்து..
அன்புள்ள பிள்ளைக்கு உம்மா எழுதுவது, நீ ஊர் வருவதாக எழுதிஇருந்தாய் சந்தோசமாக உள்ளது. உன்மனைவி என்ன சொலகிறாள் என்று கேளு
அன்புள்ள மச்சானுக்கு மனைவி நிஷா எழுதுவது நீங்கள் முடித்துக்கொண்டு ஊரோடு வந்து விடுகிறேன் என்று சொன்னதாக மாமி சொன்னாங்க,சந்தோசம்!!!! உங்க உம்மாவுக்கு மருத்துவ செலவு மற்றும் குடும்ப செலவு 10000 ஆகிறது அதற்குமேல் உங்கள் விருப்பம்….
20 வருடம் கழித்து கணவன் மனைவிக்கு….
அன்புள்ள மனைவி நிஷாவுக்கு மச்சான் எழுதிகொள்வது, எனக்கு துபையில் இரண்டு தச (20 )
வருடங்களுக்கு மேல் ஆகி விட்டது என்னால் முடியவில்லை ஊரோடு வந்துவிடுகிறேன்..
கணவனுக்கு மனைவியிடமிருந்து…
அன்புள்ள மச்சானுக்கு தாங்கள் முடித்துக்கொண்டு ஊர் வருவதாக எழுதி இருந்தீர்கள்
மிக்க சந்தோசம்..உங்க பிள்ளை என்ன சொல்றான்னு கேளுங்க
அன்புள்ள வாப்பாவுக்கு பிள்ளை நிஷார் அஹ்மத் எழுதுவது. நான் இன்ஜினியரிங் படிக்க கோயமுத்தூரில் விண்ணப்பித்திருந்தது நீங்கள் அறிந்ததே நான்கு வருட படிப்பு வருசத்துக்கு குறைந்தது ஒரு லட்சம் செலவு ஆகும்
25 வருடம் கழித்து …
நீரழிவு நோயும், ரத கொதிப்பும்,அல்சர் போன்ற பல நோய்களை சுமந்துவனாக பறந்தான், தனது தாயகம் நோக்கி, அன்றும் அவனது பாக்கெட்டில் ஒரு கடிதம் இருந்தது ஆனால் அது “ பிரிக்கப்படாமல்” அவனது பாக்கெட்டில் பாத்திரமாய்…..
ஆக்கம் -வி.களத்தூா் ஹபீப்ராஜா
உங்கள் கருத்துக்களை vkalathur.com@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்
http://www.vkalathur.com/story.php