வீடியோக்களின் விபரீதங்கள்

இலக்கியம் இஸ்லாமியக் கட்டுரைகள் கட்டுரைகள்

        மெளலவி J.S.S. அலி பாதுஷா மன்பயீ பாஜில் ரஷாதி

  அளவிலா அருளும் நிகரில்லாத அன்பும் நிறைந்த அல்லாஹ்வின் திருநாமம் போற்றி துவங்குகிறேன்.

  எங்கள் இறைவனே ! எங்கள் மனைவிமார்களையும், எங்கள் குழந்தைகளையும், எங்கள் கண்களுக்கு குளிர்ச்சி அளிக்கக் கூடியவர்களாய் விளங்கச் செய்வாயாக ! மேலும் எங்களை இறையச்சமுடையோருக்குத் தலைவர்களாய் திகழச் செய்வாயாக     (அல்குர் ஆன் 25 ; 74 )

  இஸ்லாத்தில் திருமண நிகழ்ச்சி என்பது மிக எளிமையாகவே வரையறுக்கப்பட்டிருக்கிறது என்பதை ஈமான் கொண்ட அனைவர்களுக்கும் தெரிந்த விஷயம். இறைக்கட்டளை, நபி வழித்திருமணம் எப்படியிருக்க வேண்டும் என்பதை ஆலிம் பெருமக்கள் அவ்வப்போது தன் எழுத்துக்களாலும் தன் சொற்பொழிவின் மூலமும் ஜும்மா மேடை உள்பட அனைத்துக் கூட்டங்களிலும் இது குறித்து தெளிவுபடுத்திக் கொண்டே இருக்கின்றார்கள். ஆனால் நமது சமுதாயத்திலும் குடும்பப் பாரம்பர்யங்களிலும் இன்றுவரை ஒழிக்கப்படாத ஒழிக்கப்பட முடியாத எத்தனையோ அனாச்சாரங்கள் நிறைய அறங்கேறி வருகின்றன.

  ஒருபுறம் வரதட்சனை என்ற கொடிய நோய் பலவடிவங்களில் திருமண ஒப்பந்தத்தில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. நகைகள், பாத்திரபண்டங்கள், தோட்டம், துரவுகள், மோட்டார் சைக்கிள்கள், கார் பங்களாக்கள் என்று பல முகங்களில் வெளிப்படையாகவும், மறைமுகமாகவும் இந்த வரதட்சனைத் தீமையை அவரவர் சக்திக்கேற்றவாறு சமுதாயத்தில் அரங்கேற்றி வருகிறார்கள். மேலும் இன்று புதிய நாகரீகத்தின் தாக்கத்தினால் நடந்து வரும் ஒரு வழக்கம் திருமண நிகழ்ச்சிகளில் போட்டோக்கள் எடுப்பது வீடியோக்களின் மூலம் நமது சமுதாயப் பெண்களை படம் பிடிப்பது. மேலும் வீடியோக்களின் மூலம் வரவிருக்கும் விபரீதங்களை அறியாமல் படம் எடுப்பதில் மிதமிஞ்சி செயல்படுவது, மணப்பெண்ணையும் அவளின் குடும்பத்தையும் காலையில் பல்துலக்குவது முதல் பாத்திரம் விளக்கும் வரை விதவிதமாக படம் எடுக்கும் கொடுமை நமது சமுதாயத்தில் நடந்து வருகின்றன. இன்னும் ஒரு படி மேலே சென்று யோசித்துப்பார்த்தால் வீடியோக்காரனை முன்தினமே வரச் சொல்லி மணப்பெண் மருதாணியிடுவது முதல் விதவிதமான ஆடை அலங்காரங்களை அணிந்து கொண்டு வீடியோவுக்கு போஸ் கொடுக்கும் கொடுமை நமது சமுதாயத்தில் தடுக்க முடியாத ஒரு சுமையாக ஆகிவிட்டது. என்பதை அறிவுடைய மக்கள் புரிந்து கொள்ள முடியும். ஒரு அன்னியப் பெண்ணை ஒரு தடவைக்கு மேல் பார்ப்பது கண்கள் செய்யும் விபச்சாரம் என மார்க்கம் எச்சரிக்கின்ற போது தன் குடும்பப் பெண்களை மற்றவர் கண்கள் பலமுறை பார்க்க வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கும் பெற்றோர்களை என்னவென்று சொல்வது.

  நாமும் நமது குடும்பங்களும் சுவர்க்கம் செல்லவேண்டும் உலக மக்கள் அனைவர்களும் நரகத்திலிருந்து காப்பாற்றப்பட வேண்டும் நமது குடும்ப வாழ்வு அன்புடனும் அமைதியுடனும் இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் இறைவன் சில கட்டுப்பாடுகளை மார்க்கமாக்கியுள்ளான். இறைவனின் இறுதித் தூதர் (ஸல்) அவர்களும் ஒரு உன்னதமான வாழ்க்கை வழியை வாழ்ந்து காட்டிச் சென்றுள்ளார்கள். இன்றைய திருமணங்கள் நபிகளாரின் வழியை பின்பற்றியா நடைபெறுகிறது. நபிகளாரின் வழியை விட்டு விட்டு, அவர்களின் தோழர்களின் வழியை உதறி விட்டு, வீடியோக்கள் இல்லாமல் அதுவும் இன்றைய நவ நாகரீக உலகத்தில் டெக்னாலஜி

 மேலோங்கியிருக்கும் இன்று இதுவெல்லாம் சாத்தியமற்ற ஒன்று, என்று சொல்பவர்கள் அவைகளின் தீமைகளையும் தயவு செய்து அலசி ஆராய்ந்து செயல்படுங்கள்.

  இறைநம்பிக்கை கொண்டவர்களே ! நரக நெருப்பிலிருந்து உங்களையும் உங்கள் மனைவி மக்களையும் காப்பாற்றிக் கொள்ளுங்கள். (அல்குர்ஆன் 66: 6) என்ற இறைவசனம் நமது உள்ளத்தில் பதிந்து இருக்குமேயானால் நமது சமுதாயம் இது போன்ற செயல்களில் ஈடுபட்டிருக்கவே செய்யாது.

  எனதருமை முஸ்லீம் சகோதரர்களே திருமண நிகழ்ச்சிகளில் எடுக்கப்படும் வீடியோக்கள் பல குடும்பங்களை குழப்பத்திலும் மன வருத்தத்திலும் கொண்டு போய் விட்டிருக்கின்றன. அன்னிய ஆண்களுக்கு முன் திரை (ஹிஜாப்) யில்லாமல் தோன்றுவது கூடாது. அது பெண்களுக்கு அழகல்ல என்று கண்ணியமான வழிமுறையை கற்றுத்தருகிறது இஸ்லாம். ஆனால் திருமண நிகழ்ச்சிகளில் எவனோ ஒருவன் மின் விளக்கையும், கேமராவையும் தூக்கிக் கொண்டு படம் எடுக்கின்றான். அவன் இஸ்லாமியனா அல்லது இஸ்லாத்திற்கு விரோதமான செயலில் ஈடுபடக்கூடியவனா என்றெல்லாம் பார்க்காமல் பணம் கொடுத்து அழைத்து வருகிறோம். வீடியோக்களின் மூலம் நன்மைகளைவிட தீமைகளே அதிகம் என்பதை ஏற்றுக் கொள்ளுங்கள்.

  மனிதன் கூறுகிறான் இன்றைய உலகம் விஞ்ஞான உலகம் புதிய புதிய கண்டுபிடிப்புகள், பூமியில் எவ்வளவு தூரத்தில் உள்ளவர்களையும் இணையதளம் என்ற சர்வதேச பண்பலைகள் மூலம் குறிப்பிட்ட பட்டனை அழுத்தினால் யாரையும் எந்த நேரத்திலும் தொடர்பு கொண்டு பேசவும் உரையாடவும் முடியும் என்கிறான். அதிலும் கைபேசி என்கின்ற செல்போன் இருக்கின்றதே அதில் தான் எத்தனை வகை ரகம், அந்த செல்போன்களில் பாடல்கள், செய்திகள், புகைப்படங்கள் எடுக்கவும் அதை மற்ற செல்போனுக்கு பரப்பவும் முடிகிறது என்பதையும் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். இந்த செல்போன்களில் மூலம் ஆண்களும் பெண்களும் தன் வாழ்க்கையை தானே அழித்துக் கொண்ட சம்பவங்கள் ஏராளம் என்பதை தினசரி பத்திரிகை மற்றும் செய்திகளின் மூலம் அறிய முடிகின்றது. ஒரு நல்லதின் மூலம் பல தீயவைகள் உண்டாகின்றன.

  இஸ்லாத்திற்கு விரோதமானவர்கள் இஸ்லாமை எப்படியாவது இழிவுபடுத்த வேண்டும் என்ற நோக்கத்தோடு பல கண்டிக்கத்தக்க அக்கிரமச் செயல்களில் ஈடுபட நினைக்கின்றார்கள் அவர்களுக்கு கிடைத்த ஆயுதமே நமது சமுதாயப் பெண்கள்தான். நமது பெண்களை எப்படியாவது தன் வலையில் சிக்கவைத்து நமது சமுதாயத்தையே இழிவுபடுத்த வேண்டும் என்று நேரிடையாகவும் மறைமுகமாகவும் கயவர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள் அப்படிப்பட்டவர்களிடமிருந்து நமது சமுதாயம் பாதுகாப்பைப்பெற வேண்டுமானால் வீடியோ எடுப்பதை முற்றிலும் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

  வீடியோக்களின் மூலம் ஏற்படும் விபரீதம் என்னவென்றால் பெண்களை படம் எடுக்கும் அவர்கள் அதில் அழகான பெண்களை தேர்வு செய்து, தான் பணம் சம்பாதிக்க வேண்டும் அதே வேளையில் முஸ்லிம் சமுதாயம் அவமானப்படவேண்டும் என்ற எண்ணத்தில் அப்படத்தை இண்டர்நெட்டில் பரவ விடுகின்றனர். மேலும், இன்று இலவச இணையதளங்கள் பெருகிவிட்டன. யாரும் யாருடைய போட்டோவையும், வீடியோக்களையும் பதிவு செய்ய முடியும். இதில் தவறான தளங்களே மேலோங்கி நிற்கின்றது. இன்டியன் கேர்ள்ஸ், பேமிலி கேர்ள்ஸ், மாடர்ன் கேர்ள்ஸ் என்று ஆயிரக்கணக்கான டாட்காம்கள் பல்கி பெருகி மனிதர்களை அழிவின் பக்கம் இழுத்துச் சென்று கொண்டிருக்கிறது. மேலும், இது மாதிரியான தவறான போட்டோக்கள் மற்றும் வீடியோக்களை தன் கைபேசியில் (செல்போனில்) டவுன்லோடு செய்து கொள்ள பல சாஃப்ட்வேர்கள் உள்ளன. அரசாங்கம் ஒரு வழியை அடைத்தால், அயோக்கியர்கள் பல வழிகளைக் கொண்டு எந்த நாட்டினுடைய தவறான பாலுறவு வீடியோக்களையும், போட்டோக்களையும் தன் கைபேசியில் சில நிமிடங்களிலேயே டவுன்லோடு செய்ய முடியும் என்றளவுக்கு இன்று சாஃப்ட்வேர் நிறைந்து விட்டது. நாம்தான் எச்சரிக்கையோடு செயல்பட வேண்டும்.

  தனது ஞாபகத்திற்காகவும் அரசு சாட்சிக்காகவும் ஒரு சில போட்டோக்களை எடுப்பது தவறல்ல. அல்லாஹ்விடத்தில் தவ்பா செய்து கொள்ளலாம். விரோதிகளை விலை கொடுத்து வீட்டிற்குள் அழைத்து வந்து படம் எடுப்பதைத் தான் மார்க்கம் வன்மையாகக் கண்டிக்கிறது.

  இஸ்லாமிய சமுதாயம் நேரான வழியை அடைய வேண்டும் என்ற எண்ணத்தில் ஆலிம்கள் அவ்வப்போது சில வேண்டுகோளை விடுப்பது வழக்கம் அதன் வரிசையில் செல்போன் உபயோகப்படுத்தும் சமுதாய மக்களுக்கும் சில வேண்டுகோள் வைக்கின்றனர். காரணம், இன்று செல்போன் இல்லாதவர்களே கிடையாது அதுவும் விதவிதமான கேமரா செல்போன்கள் தான் பல வண்ணங்களில் நமது கைகளில் வலம் வந்து கொண்டிருக்கிறது எனவே தயவு செய்து உங்கள் செல்போனில் மனைவி மற்றும் குழந்தைகளையோ, அல்லது உங்கள் குடும்பப் பெண்களையோ, யாரையும் படம் எடுப்பதை முற்றிலும் தவிர்த்து விடுங்கள் அப்படியே தேவைக்காக படம் எடுத்தால் உங்களின் மெமரி கார்டுகளை கலட்டி ஸ்டூடியோக்களில் கொடுத்து விடாதீர்கள். மேலும், செல்போனை பழுது பார்க்க கடைகளில் கொடுத்தால் அதில் எச்சரிக்கையோடு செயல்படுங்கள். காரணம்  நாம் அழித்து விட்ட போட்டோக்களையும் தோண்டி எடுக்கும் திறமை பெற்ற ஷைத்தான்கள் அதிகம் உண்டு. அதற்கு உண்டான சாஃப்ட்வேர்களும் அவர்களிடத்தில் உண்டு என்பதை கவனத்தில் கொண்டு செயல்படுங்கள் என்று தான் ஆலிம்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.

 இறைநம்பிக்கை கொண்டவர்களே ! நீங்கள் அல்லாஹ்வுக்காக வாய்மையில் நிலைத்திருப்போராகவும், நீதிக்கு சான்று வழங்குவோராகவும் திகழுங்கள். (அல்குர்ஆன் 5:8)  இது சாமானிய கட்டளை அல்ல, இதனால்தான் நமது நாயகம் (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள் நன்மை என்பது நற்பண்புகள்தான். எந்தச் செயல் உங்கள் மனசாட்சியை உறுத்துகிறதோ ! எந்தச் செயல் மக்களுக்கு தெரியக்கூடாது என நினைக்கின்றீர்களோ அந்தச் செயல் தீமையாகும் . (முஸ்லிம்) என்றார்கள். எனவே நன்மை என்பது நல்ல செயல்தான். அதில்தான் அல்லாஹ்வின் உதவியும் உண்டு. நமது வாழ்க்கையில் அமைதியும், நிம்மதியும் நல்ல செயல்களின் மூலமே கிடைக்கும்.    யா அல்லாஹ் எங்களின் எண்ணமும் செயலும் உன் கட்டளைக்கு அடிபணிந்தே இருக்கவும், இன்பமான இனிய வாழ்க்கை வாழவும் எங்களுக்கு அருள் புரிவாயாக ! ஆமீன் !…

தேரிருவேலி மெளலவி ஆலீம்  J.S.S. அலி பாதுஷா மன்பயீ பாஜில் ரஷாதி

050/ 5471543

ஷார்ஜா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *