தீண்டாமை

இலக்கியம் கவிதைகள் (All) முதுவைக் க‌விஞ‌ர் ம‌வ்ல‌வி அல்ஹாஜ் ஏ. உம‌ர் ஜ‌ஹ்ப‌ர் ஆலிம் பாஜில் ம‌ன்ப‌யீ

தீண்டாமை :

        கொன்றுவிடு வேற்றுமையை !

          ஆக்கம் ; முதுவைக்கவிஞர், ஹாஜி A. உமர் ஜஹ்பர் மன்பயீ

”தீண்டாமை” என்கிற தீயதொரு வார்த்தைக்குத்

 “தீ” யென்ற சூடான ஓரெழுத்தே முதலெழுத்து !

வேண்டாத உணர்வுகளை விதைத்திட்ட தீண்டாமை

 வேண்டாமே ! வேண்டாமே ! என்கிறது அனைத்துலகு !

ஆண்டாண்டு காலங்கள் அகிலமெல்லாம் ஒன்றிணைந்து

 ஆற்றுகிற பணிகளிலும் முளைக்கிறது தீண்டாமை !

தோன்றுகிற நாகரீகம், துளிர்விட்ட விஞ்ஞானம்

 தலையெடுத்த உலகினிலும் வாழ்கிறது தீண்டாமை !

மண்பிறந்த மனிதயினம் விண்சென்று கால்பதித்தும்

 மகிழ்வுடனே திரிகிறது மானங்கெட்ட தீண்டாமை !

புண்பட்ட மனதுடனே பாருலகே அழுதாலும்

 பண்பட்டுப் போகாமல் அலைகிறது தீண்டாமை !

தீண்டாமை ஒழிக்கவந்த திறமையுடை அறிஞர்களும்

 தீயகுல மனிதரினால் மாண்டேதான் போய்விட்டார் !

மாண்டோரின் கொள்கையிலே தீண்டாமை எதிர்ப்பிருந்தால்

 மறுபடியும் வருபவர்கள் நெருப்பூட்டி எரிக்கின்றார் !

கருப்பான தோலுக்குள் , வெளுப்பான தோலுக்குள்

 கட்டாயம் ஓடுவது சிவப்பான ஓரிரத்தம் !

கரும்பாக வெள்ளையையும் வெறுப்பாகக் கருப்பினையும்

 கருதுவது மானிடரில் யார் குற்றம்? யார் குற்றம் ?

படித்தாலும் அறிவில்லை ; பண்பாட்டில் தரமில்லை !

 பாருலகில் மேல்நாடு (?) என்பதிலும் முறையில்லை !

இடித்தாலும் சுரணில்லை ; எதிர்த்தாலும் சூடில்லை !

 இப்படியே இருந்திட்டால் இதற்குத்தான் ஏதெல்லை !

நாட்டினிலே தீண்டாமை ! நிறத்தினியே தீண்டாமை !

 நாபேசும் மொழியினிலும் நாசமுள்ள தீண்டாமை !

ஏட்டினிலே தீண்டாமை ! எழுத்தினிலும் தீண்டாமை !

 ஏற்றமுள்ள கல்வியிலும் ஏணிந்தத் தீண்டாமை !

தீண்டாமை ஒழிப்பதற்குத் தரணியிலே வழியில்லையோ ?

 தீண்டாமை இல்லாமல் வாழ்வதற்கு வழியில்லையோ ?

தீண்டாமை எனுஞ்சொல்லை அழிப்பதற்கு வழியில்லையோ ?

 தீண்டாமை என்பதனை மறப்பதற்கு வழியில்லையோ ?

வழியுண்டு ! வாழ்வுண்டு ! தீண்டாமை ஒழிவதற்கு !

 வழியில்லை என்பதற்கு வழியில்லை மானிடர்க்கு !

பழிசொல்லி நழுவிவிடப் பாருலகில் நாமெதற்கு ?

 புறட்டுங்கள் சரித்திரத்தை ! படியுங்கள் இஸ்லாத்தை !

கருப்புநிற ‘ஹபஷி’க்கும் சிவப்புநிறக் குறைஷிக்கும்

 கடுமையென நின்றிருந்த தீண்டாமை எங்கேயோ ?

மறுப்பதற்கு ஏதுமில்லை ; மறைப்பதற்கு வேலையில்லை …

 மாநபிகள் வழிநடந்தால் மறைந்துவிடும் தீண்டாமை !

கலிமாவை நெஞ்சினிலே ஏந்தி நின்றால் மறைந்துவிடும் !

 குர்ஆனை வாழ்வினிலே கொண்டுவந்தால் பறந்துவிடும் !

வலிமைதரும் நபிவழியில் நடந்து சென்றால் ஓடிவிடும் !

 வாழ்வினிலே தீண்டாமை இல்லாமல் ஆகிவிடும் !

ஒன்றுயிறை ஒன்றுமறை ஒன்றுகுலம் ஒன்று மனம்

 என்று மனம் ஏற்றுவிட்டால் ஏதுயிங்கு தீண்டாமை ?

நின்றுயிதை நிதானித்துக் கொன்றுவிடு வேற்றுமையை

 நன்று நன்று என்று சொல்லி வென்றுவிடு நானிலத்தை !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *