இறையற்புதம்

அதிரை கவியன்பன் கலாம் இலக்கியம் கவிதைகள் (All)

தூணின்றி வானத்தை அந்தரத்தில் நின்றிடவேத் தாங்கும் நீதான்
*ஆணின்றிக் குழந்தையை உருவாக்கிக் காட்டியதி னாற்றல் நீதான்
நாணின்றி அம்பெய்திட முடியாது; உன்னன்பின்(றி) நானு மில்லை
ஊணின்றி வாடுகின்றப் பயிரைப்போ லானேனே உன்னை நாடி
 
 
பாலையில் வாழுகின்ற ஒட்டகத்தி லுன்னருளைப் பார்த்துக் கொண்டேன்
சோலையில் விளைகின்ற பூக்களிலே யுன்னருளைச் சோதித் தேனே
காலையில் எழுகின்றச் சூரியனி லுன்னாற்றல் காண லானேன்
மாலையில் திரும்புகின்ற பட்சிகளி லுன்னன்பின் மாண்பைக் கண்டேன்
 
 
பாதங்கள் மேலேயும் தலைகீ  ழாயுமாய்ப்பல் லாண்டு வேண்டி
ஓதிதவஞ் செய்தாலும் போதாது போதாது ஓரி றைவாச்
சோதனைகள் வந்தாலும் தாங்கிடவே என்னிடமுள்(ள)ச் சோம்பல் போக்கு
நீதமுள்ள உன்னருளால் சாதிக்க என்னாயுள் நீள மாக்கு
 
 
குறிப்பு:*ஆணின்றிக் குழந்தையை உருவாக்கிக் காட்டியதி னாற்றல் நீதான்
= தந்தையின்றி நபி ஈசா(அலை)/ ஏசு நாதர் அவர்களைப் படைத்தவன்
 

(காய், காய், காய், காய், மாச்சீர், தேமா வாய்பாட்டில் அமையும் விருத்தம்)
 
 
“கவியன்பன்” கலாம், அதிராம்பட்டினம்
எனது வலைப்பூத் தோட்டத்திற்கு உலா வர வழி:
http://www.kalaamkathir.blogspot.com/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *