இஸ்லாமிய வரலாற்றில் இந்த மாதம் : ஸஃபர்

இலக்கியம் இஸ்லாமியக் கட்டுரைகள் மவ்லவி அ.சீனி நைனார் முஹம்மது தாவூதி

இஸ்லாமிய வரலாற்றில் இந்த மாதம்
                                                                         ஸஃபர்

              நபி (ஸல்) அவர்களின் காலத்திலும், அவர்களின் தோழர்களாகிய சஹாபாக்களின் காலத்திலும் இந்த ஸஃபர் மாதத்தில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள் இங்கு சுருக்கமாக கொடுக்கப்படுகிறது.
கதீஜா (ரழி) அவர்களுடன் திருமணம்:
              நபி(ஸல்) அவர்களின் 25-ஆம் வயதில் ஸஃபர் மாதத்தில், கதீஜா(ரழி) அவர்களுடன் திருமணம் நடைபெற்றது.
“அல் அப்வா” படையெடுப்பு:
              ஹிஜ்ரி 2-ஆம் ஆண்டு ஸஃபர் மதம் நபி(ஸல்) அவர்கள் முஹாஜிரீன்களுடன் குரைஷி வியாபாரக்கூட்டத்தை வழி மறிக்கச் சென்றார்கள். இப்படையின் கொடி ஹம்ஸா(ரழி) அவர்களிடம் இருந்தது. இப்படையெடுப்பில் எதிரிகள் யாரும் கைது செய்யப்படவில்லை. இப்படையெடுப்பில் “ழம்ரா” கிளையினருடன் நட்பு ஒப்பந்தம் செய்தார்கள். இது தான் நபி(ஸல்) அவர்கள் கலந்து கொண்ட முதல் படையெடுப்பாகும். அச்சமயம் ஸஃது இப்னு உபாதா(ரழி) அவர்களை மதீனாவின் பிரதிநிதியாக ஆக்கியிருந்தார்கள். இதற்கு “வத்தான்” படையெடுப்பு என்றும் மற்றொரு பெயர் சொல்லப்படுகிறது.
“ரஜீஉ” சம்பவம்:
                ஹிஜ்ரி 4-ஆம் ஆண்டு ஸஃபர் மாதம், இரு வேறு கூட்டத்தினர்கள் நபி(ஸல்) அவர்களிடம் வந்து, அவர்கள் இஸ்லத்தை ஏற்க இருப்பதாகவும், இஸ்லத்தை கற்றுக்கொடுக்க எங்களுடன் சிலரை அனுப்ப வேண்டும் என்றும்  கோரிக்கை விடுத்தார்கள். இதனை ஏற்ற நபி(ஸல்) அவர்கள், தங்களின்  தோழர்களில்  மர்ஸத் இப்னு மர்ஸத் அல்கனவி(ரழி), குபைப் இப்னு அதீ(ரழி), ஆஸிம் இப்னு ஸாபித்(ரழி), ஜைது இப்னு தசின்னா அல்பயாழி(ரழி), அப்துல்லாஹ் இப்னு தாரிக்(ரழி), காலித் இப்னு அல்புகைர்(ரழி) ஆகிய ஆறு தோழர்களை (மற்றொரு அறிவிப்பில் 10- தோழர்கள் என்றுள்ளது) அவர்களுடன் அனுப்பி வைத்தார்கள். அவர்கள் செல்லும் வழியில் “ரஜீஉ” என்ற  இடத்தை அடைந்தவுடன், அப்பகுதியில் வசிக்கும் “லஹ்யான்” என்னும் கிளையினரை சஹாபாக்களுக்கு எதிராக தூண்டிவிட்டு அனைவரையும் கொலை செய்துவிட்டனர்.
“பிஃரு மஊனா” சம்பவம்:
            ‘ரஜீஉ’ சம்பவம் நடந்த சில நாட்களில் அது போன்ற மற்றொரு துயரச் சம்பவமும் நிகழ்ந்தது. அபூ பராஉ இப்னு மாலிக் என்பவன் நபி(ஸல்) அவர்களிடம் வந்து, நஜ்து பகுதி மக்களை இஸ்லாத்தின் பக்கம் அழைக்க தன்னுடன் உங்கள் தோழர்களை அனுப்புங்கள் என்று வேண்டுகோள் விடுத்தான். அப்பகுதி மக்கள் தனது தோழர்களுக்கு ஆபத்து விளைவிக்கலாம் என அஞ்சுவதாக நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அவர்களை பாதுகாப்பது எனது பொறுப்பு என்று உறுதியளித்தான்.
            எனவே, நபி(ஸல்) அவர்கள் முன்திர் இப்னு அம்ர்(ரழி) என்ற தோழரின் தலைமையில் எழுபது தோழர்களை அனுப்பி வைத்தார்கள். இவர்கள் அனைவரும் ’பிஃரு மஊனா’ என்ற இடம் வந்ததும் அங்கு தங்கிக் கொண்டனர். அப்பகுதி தலைவனுக்கு நபி(ஸல்) அவர்கள் எழுதிய கடிதத்தை ஒரு தோழர் மட்டும் எடுத்துச் சென்றார். ஆமிர் இப்னு துஃபைல் என்ற அத்தலைவன் நபியவர்களின் கடிதத்தை மதிக்காமல் தோழரையும் கொலை செய்து விட்டான். மேலும் அதன் சுற்று வட்டாரத்திலுள்ள கூட்டத்தினரை முஸ்லிம்களுக்கு எதிராக தூண்டிவிட்டான். இதனால் அவர்கள் முஸ்லிம்களை சுற்றி வளைத்து தாக்கி அனைவரையும் கொலை செய்து விட்டார்கள். இதில் கஅபு இப்னு ஜைது என்ற தோழர் மட்டும் படுகாயங்களுடன் உயிர் பிழைத்தார்.
           இதில் உயிரிழந்த அனைத்துத் தோழர்களுமே குர்ஆனை நன்கு கற்றறிந்தவர்கள். இவர்களின் இழப்பு நபி(ஸல்) அவர்களுக்கு அளவு கடந்த வருத்தத்தை ஏற்படுத்தியது. தங்களின் தோழர்களுக்கு துரோகம் செய்த கூட்டத்தினருக்கு எதிராக நபி(ஸல்) அவர்கள் முப்பது நாட்கள் ஃபஜ்ரு தொழுகையில் குனூத் ஓதி துஆச் செய்தார்கள். பின்னர் இறைவனின் கட்டளைப்படி நிறுத்திக் கொண்டார்கள்.
வாதில் குரா :
              ஹிஜ்ரி ஏழாம் ஆண்டு கைபர் யுத்ததிலிருந்து திரும்பியதும் ஸஃபர் மாதத்தில் “வாதில் குரா” என்னும் பகுதியில் வசிக்கும் யூதர்களுக்கு இஸ்லாமிய அழைப்புக் கொடுக்கச் சென்றார்கள். முஸ்லிம்கள் மீது யூதர்கள் திடீர் தாக்குதல் நடத்தியதால் ஒரு தோழர் கொல்லப்பட்டார். இதனால் அவர்களுடன் போரிடும் சூழல் ஏற்பட்டு, முஸ்லிம்கள் போரிட்டார்கள். சிறிது நேரத்தில் யூதர்கள் சரணடையவும் முஸ்லிம்கள் வெற்றி பெற்றார்கள்.
குரைஷி தளபதிகள் இஸ்லாத்தை ஏற்றல்:
           ஹிஜ்ரி 8-ஆம் ஆண்டு ஸஃபர் மாதத்தில், குரைஷிகளின் முக்கியத் தளபதிகளான அம்ரு இப்னு அல்ஆஸ்(ரழி), காலித் இப்னு அல்வலீத்(ரழி), உஸ்மான் இப்னு தல்ஹா அல்ஹஜபீ(ரழி) ஆகியோர் இஸ்லாத்தை ஏற்றார்கள்.
சிஃப்பீன் யுத்தம்:
            ஹிஜ்ரி 37-வது வருடம் ஸஃபர் மாதம் பிறை 7-10 ஆகிய நான்கு நாட்களில் அமீருல் முஃமினீன் அலி(ரழி) அவர்களுக்கும், முஆவியா இப்னு அபூசுஃப்யான்(ரழி) அவர்களுக்கும் மத்தியில் இப்போர் நடைபெற்றது. இப்போரில் இருதரப்பிலும் சுமார் 70,000 முஸ்லிம்கள் (மற்றொரு அறிவிப்பில் 7,000 நபர்கள்) கொல்லப்பட்ட பின், இருவரும் சமாதானமாகி போர் முடிவுக்கு வந்தது.
                                                                                  *************************************************
மவ்லவி அ.சீனி நைனார் முஹம்மது தாவூதி துபாய்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *