விழிப்புணர்வின் முதல் ‘படி’

இலக்கியம் கவிதைகள் (All)

கனவு மெய்ப்பட வேண்டும் – உயர்

கல்வி வசப்பட வேண்டும்!

கற்க நினைப்ப தெல்லாம் – நாம்

கற்று நிறைவுற வேண்டும்.
கற்றவ ரெல்லாம் வென்றார் – இதை

கருத்தினில் ஏற்றிட வேண்டும்

கல்லாதோரே தோற்றார் -என

கவனத்தில் கொண்டிட வேண்டும்!

பட்டம் படித்திட வேண்டும் – அதில்
பதக்கம் கிடைத்திட வேண்டும்
விட்ட உரிமைக ளெல்லாம் – நாம்
மீட் டெடுத்திட வேண்டும்!

தொழிலுக் கென்று கல்வி – நாம்
தேடிக் கற்றல் வேண்டும்
பதவிக் கென்று படிப்பை – இனி
பார்த்துப் படித்திட வேண்டும்!

ஆட்சி அதிகாரம் வேண்டும் – நமக்கு
அரசாங்க வேலையும் வேண்டும்
அன்றாடங் காய்ச்சியேயாயினும்-நாம்
வென்றாள கல்வியே வேண்டும்.

அதிக மதிப்பெண் வேண்டும் – அதை
அடைய முனைப்பு வேண்டும்
சிகரம் தொடும் வித்தை – நாம்
சேர்ந்து பயில வேண்டும்

கல்லாமை வெளியேறவேண்டும்-உடன்
அறியாமை புறந்தள்ள வேண்டும்
கற்றுத் தெளிந்து நாமும் – எதிர்
காலத்தை வென்றிட வேண்டும்!

மகத்துவம் மிக்க மருத்துவம் – கற்று
மக்களைக் காத்திட வேண்டும்
மடைமை போக்கிடும் அறிவியல் -படித்து
மாட்சிமை பெற்றிட வேண்டும்

சதிகளை எதிர்த்திட சட்டம் – நம்

விதியென படித்திட வேண்டும்

சமூகம் காத்திட அரசியல் – முழு
சாஸனம் கற்றிட வேண்டும்!
கல்வி விழிப்புணர்வு வேண்டும் – அது

பல்கிப் பெருகிடவும் வேண்டும்!
கற்ற மூத்தவ ரெல்லாம் – வந்து
கைதூக்கி கரையேற்ற வேண்டும்!
 
— சபீர்
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *