வேண்டாம் இனி வரவுகள்..

இலக்கியம் கவிஞர் மலிக்கா கவிதைகள் (All)

 
அம்மா என்றால் அகிலமும் போற்றுகிறது
அன்பொழுக நேசிக்கிறது-ஆனால் 
எங்களால் மட்டும் முடியவில்லையே!
உங்களை நேசிக்க  உங்களோடு சுவாசிக்க
ஐந்துநிமிடம் யோசிக்கமறந்த உங்களால்
அசிங்கமாகிப் போனேமே! 
அனாதையாக ஆனோமேயிந்த உலகத்தில்.
 
கள்ளத்தனம் செய்துவிட்டு
கருவில் கலைக்க வழியின்றி
பத்துமாதம் எப்போது கழியுமென
பயந்துப் பதுங்கிச் சுமந்து
பாசமே இல்லாமல்
பரிதவிக்கவிட்டுச் சென்றவர்களே!
பச்சோந்தியாக ஆனவர்களே!
 
ஊதாறித்தனம் செய்துவிட்டு
உயிருள்ள எங்களை உயிரற்ற ஜடமாக்கி 
உதறிவிட்டுபோவது நீங்கள்
உம்போன்றோர்களின் செயல்களால்
ஊரடிபடுவதும் உருக்குலைவதும்
ஒன்றுமறியாத எம்போன்ற 
உள்ளம் ஊமையான பிஞ்சுகள்.
 
கூடிக்கூடி குலாவி -உடல்களை
கூட்டுக் கொள்ளையடித்து
கும்மாளமிட்ட நீங்கள்
கொஞ்சமும் இரக்கமில்லாமல்
கூளத்தோடு கூளமாக எங்களை
குப்பைதொட்டியை நிரப்பிய
கொடும்பாவிகள்.
 
இரக்கமற்ற அரக்கர்களாய் 
உங்களுக்கெல்லாம் 
இதயமில்லாது போனது ஏனோ?
எங்களைவிட
இச்சைகளின் இன்பங்களை நீங்கள்
ஏற்றுகொண்டதாலா?
 
சூழ்நிலைகள் காரணமென
சூத்திரம் செய்யாதீர்கள்
சூடுபட்ட ரணங்களோடு-உங்கள்
சிசுக்களை உயிரோடு வதைக்காதீர்கள்
எங்களோடு முடியட்டுமே! 
அனாதைகளென்ற வரவுகள்
எத்தனைபேர்கள் ஆதரவளித்தபோதும்
அவர்களெல்லாம் ஆகமாட்டார்களே!
எங்களை ஆரத்தழுவும் அம்மாக்களாக…
 
  
 
அன்புடன் மலிக்கா
http://niroodai.blogspot.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *