பச்சைவண்ண சிட்டுக் குருவியின் மனு
ஹெச்.ஜி.ரசூல்
மனுநீதிச் சோழனிடம் நேரிடையாக மனுதரவந்த
பச்சைவண்ண சிட்டுக் குருவி
பெருந்திரள்கூட்டத்தைப்பார்த்து அதிர்ச்சியுற்றது.
பத்துவருட நீளமுள்ள வரிசையில்
தன்னிடத்தை தக்கவைத்துக் கொள்ள அலைதலுற்றது.
முன் நின்ற செண்பகப்பறவையிடம் கேட்ட போது
இருபதாண்டு காத்திருப்பு முடிவுற்றதாகக் கூறி
கேவலை பதிலாய் சொன்னது.
உதவித்தொகை கேட்டு விண்ணப்பிக்கவந்த
பார்வையற்ற வண்ணத்துப் பூச்சி
பேரிடர் சுழலில் சிக்கிய கதையை
தலைவிரிகோலத்தோடு
ஒப்பாரியாய் எழுப்பியது.
தன் இருப்பிடம் நிர்மூலமாக்கப்பட்டதன் வலியை
ஒரு துளி கண்ணீரால்
நனைத்துக் கொண்டது சிட்டுக் குருவி.
ஏசியரங்கில் தூங்கியவாறிருந்த
கசங்கலற்ற சட்டைகள் மீது மூத்திரம் பெய்து
விழிக்கச் செய்த தந்திரத்தால்
சிரித்தது காகம் ஒன்று.
ஒவ்வொன்றின் அலகிலும்
மூன்று நான்கு மனுக்கள் இருந்தன.
ஒவ்வொரு மனுவையும்
பொறுப்புணர்வோடு வாங்கி வாசித்தபின்
மூன்று மூன்று துண்டாய் கிழித்து
வாயில் போட்டு மென்று
துப்பிக் கொண்டிருந்தான் மனுநீதிச் சோழன்.
நன்றி
திண்ணை 02-10-2010
mylanchirazool@yahoo.co.in