தலை முடி மூலம் மாரடைப்பை கண்டறியலாம்!

மருத்துவக்குறிப்புகள் மருத்துவம்

தலை முடி மூலம் மாரடைப்பை கண்டறியலாம்!

நமது தலை முடியில் உள்ள ஹார்மோனை வைத்து மாரடைப்பு வருமா என்பதை கண்டறிய முடியும் என கனடா ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். தலைமுடியில் ஹார்மோன் கார்டிசால் அதிக அளவில் இருந்தால் மாரடைப்பு ஏற்படும் என்று அவர்கள் கூறியுள்ளதாக ஸ்டிரஸ் என்ற பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது. வேலை, குடும்பம் மற்றும் பணப் பிரச்சனைகளால் மாரடைப்பு உள்ளிட்ட இதயநோயகள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது. 
ஆனால், மாரடைப்பு எப்போது ஏற்படும் என்பதை முன்கூட்டியே கணிக்க முடியாது. இந்த நிலையில்தான் தலைமுடியில் உள்ள கார்டிசாலின் அடர்த்தியை வைத்து இதை கணிக்க முடியும் என ஆய்வு முடிவு தெரிவித்துள்ளது. 
வழக்கமாக ரத்த நிணநீர், சிறுநீர் மற்றும் உமிழ்நீரில் தான் கார்டிசாலின் அளவு கண்டறியப்பட்டது. இவற்றில் சில மணி நேரத்தில் இருந்து சில நாட்கள் வரை உள்ள கார்டிசாலைத் தான் அளக்க முடியும். இதனால் நீண்ட காலமாக உள்ள அழுத்தத்தைக் கண்டறிய முடியாது. ஆனால் தலைமுடியில் உள்ள கார்டிசாலை வைத்து பல மாதங்களுக்கு முன்பே மாரடைப்பை கணிக்க முடியும் என்பது ஆய்வாளர்களின் கருத்து. சாதாரணமாக நமது தலை முடி ஒவ்வொரு மாதமும் 1 செமீ வளர்கிறது. 6 செமீ நீளம் உள்ள முடியை பரிசோதனை செய்வதன் மூலம் நெடுங்காலமாக இருந்து வரும் அழுத்த அளவை அறியலாம்.
 இதுதொடர்பாக இஸ்ரேலில் உள்ள மெய்ர் மெடிகல் சென்டரில் அனுமதிக்கப்பட்ட, மாரடைப்பு ஏற்பட்ட 56 ஆண்களின் முடி மாதிரியையும், இதய நோயாளிகள் அல்லாத 56 ஆண்களின் முடி மாதிரியையும் பரிசோதித்தனர். இதில் மாரடைப்பு நோயாளிகளின் முடியில் கார்டிசால் அதிக அளவில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டதாம்.
 
-தட்ஸ்தமிழ்

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *