துபாயில் இந்திய சமூக நல அமைப்பு கூட்டம்

தற்போதைய செய்திகள்

துபாய் : துபாய் இந்திய கன்சுலேட் ஆதரவுடன் செயல்பட்டு வரும் இந்திய சமூக நல அமைப்பின் ( Indian Community Welfare Committee ) பொதுக்குழுக் கூட்டம் 15.09.2010 புதன்கிழமை மாலை இந்திய கன்சுலேட்டில் நடைபெற்றது.

கூட்டத்திற்கு  இந்திய கன்சல் ஜெனரல் திருமிகு சஞ்சய் வர்மா தலைமை வகித்தார். அவர் தனது உரையில் இந்திய சமூக நல அமைப்பின் சேவைகள் குறித்து பெருமிதம் கொண்டார். இத்தகைய பணிகள் தொடர அனைத்து இந்திய அமைப்புகளும் தங்களது நல்லாதரவினைத் தொடர்ந்து நல்கிட கேட்டுக் கொண்டார். மேலும் ஆக்கபூர்வ ஆலோசனைகளையும் வழங்கிடவும் வலியுறுத்தினார்.

இந்திய சமூக நல அமைப்பின் கன்வீனர் கே. குமார் நிகழ்வில் துவக்கவுரை நிகழ்த்தினார்.  அவர் தனது உரையில் இந்திய சமூக நல அமைப்பு ( www.icwcdubai.com ) கடந்த ஓராண்டில் செய்த பணிகளைப் பட்டியலிட்டார். அமீரக சிறைகளில் வாடும் இந்தியர்களை விடுவிக்க மேற்கொண்டு வரும் முயற்சிகள், வேலைக்காக அழைத்து வரப்படும் பணிப்பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்துவதிலிருந்து விடுவித்தல், ரத்ததான முகாம், இலவச சட்ட உதவி உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகிறது. அமீரக சிறைகளில் குற்றச்சாட்டுக்கு ஆளாகிய சிலரை ’தியா’ எனப்படும் Blood Money ஆக ஒவ்வொருவருக்கும் திர்ஹம்,200,000 கொடுத்து மீட்கவும் இந்திய சமூக நல அமைப்பு முயற்சி மேற்கொண்டுள்ளது. இதுவரை இதுபோன்ற 25 வழக்குகளை கையாண்ட் வெற்றி கண்டுள்ளது. இதற்காக நிதிஉதவி அளித்து வரும் புரவலர்களைப் பாராட்டினார்.

அபுதாபி இந்திய தூதரகத்தின் கன்சுலர் டாக்டர் இளங்கோவன் நிகழ்வில் கலந்து கொண்டு பல்வேறு ஆலோசகனைகளை வழங்கினார்.

பிரவஸி பந்து டிரஸ்ட் நிர்வாகி கே.வி. சம்சுதீன் ஷார்ஜா தொழிலாளர் முகாமில் தொழிலாளர்கள் பலர் உணவின்றி வாடுவதாகவும் அதற்கு உதவிட கேட்டுக் கொண்டார். வேலி ஆஃப் லவ் அமைப்பின் நிர்வாகி கோமா நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோருக்கு உதவிட வேண்டுகோள் விடுத்தார்.

ஈமான், துபாய் தமிழ்ப் பெண்கள் சங்கம், உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் நிர்வாகிகள் தங்களது கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளை வழங்கினர். புதிதாக பொறுப்பேற்றுக்கொண்ட இந்திய கன்சுலேட் அதிகாரிகள் அறிமுகம் செய்து வைக்கப்பட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *