பலஸ்தீனம் – பயாஸ்கோப்பு….
ஈரான் – ஆக்கிரமிப்பு…..
– வழக்கறிஞர் வெ. ஜீவகிரிதரன்
உலகெங்கும் உள்ள ஊடகங்களில் மிக அதிகமாக கையாளப்பட்ட செய்தி “இஸ்ரேல்-பலஸ்தீன பேச்சு வார்த்தை தான். செப்டம்பர் 2-ம் தேதி அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் இந்த பேச்சுவார்த்தை துவக்கப்பட்டது. அமெரிக்கா, ஐ.நா. ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ரஷ்யா ஆகியவை இணைந்து மேற்கொண்ட முடிவின் படி இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நேதன்யாஹும், பலஸ்தீன தலைவர் மஹ்மூத் அப்பாஸ் -ம் அப்பம் பங்கிட்ட குரங்காக அமெரிக்காவை நடுவராக வைத்துக் கொண்டு பேச்சுவார்த்தைகளை துவக்கி விட்டன. இது சுமார் ஒரு வருடம் நீடிக்கும் என அமெரிக்கா கருத்து தெரிவித்துள்ளது. ஒரு சுதந்திரமான, ஜனநாயக, குடியரசாக பலஸ்தீனம் இப்பேச்சு வார்த்தையின் முடிவில் மலர்ந்து விடும் என ஜிகினாக்கள் தூவப்பட்டுள்ளன.
பல ஆண்டு காலமாக மத்திய கிழக்கு பகுதியிலே இருந்து வந்த மிகப் பெரிய சவாலை இஸ்ரேல் – பலஸ்தீன பதட்டங்களை தணிக்க அமெரிக்கா முன் நின்றுள்ளதாக சில அரபு நாடுகளும் பெருமை கொள்கின்றன. காரணம் அமெரிக்காவுக்கும் இந்த அரபு நாடுகளுக்கும் உள்ள நெருக்கம் நியாயப்படுத்தப்பட வேண்டிய நிலை தற்போது உள்ளது என்பதுதான்.
ஈரான் மீதான இராணுவ நடவடிக்கை எடுக்கும் முன்னர் அமெரிக்கா தன்னை ஒரு சமாதான விரும்பியாக, சமாதானத்துக்கான நேர்மையான தூதுவனாக காட்டிக் கொள்ளவே இந்த நாடகம் ஆரம்பமாகியுள்ளது. இந்த பேச்சுவார்த்தையில் எந்த உண்மை தன்மையும் இல்லை. கிழக்கு ஜெருசலேமில் ய+தர்களை குடியேற்றும் இஸ்ரேலின் நடவடிக்கைகள் குறையவில்லை. மேற்குக் கரையிலும், கிழக்கு ஜெருசலேமிலும் புதிய யூத குடியிருப்புகளை நிறுவுகின்ற இஸ்ரேலின் நடவடிக்கைகளை நிறுத்தாமல் பேச்சு வார்த்தை துவங்க முடியாத என பலஸ்தீனம் அறிவித்தது.
ஆனால், கடந்த மார்ச் மாதம் மேலும் 1,600 யூத குடியிருப்புகளை கட்டுவதற்கான திட்டத்தை இஸ்ரேல் அறிவித்தது. பேச்சுவார்த்தைக்கான அடிப்படை சூழல் கூட இல்லாத நிலையில் பலஸ்தீனத்தின் கழுத்திலே கை வைத்து தள்ளி கொண்டு வந்து பேச உட்கார வைத்துள்ளது அமெரிக்கா. தன்னை ஒரு பக்கம் ஜனநாயகவாதியாக காட்டிக் கொண்டே, இன்னொரு பக்கம் ஈரானை விழுங்குவதுதான் அமெரிக்காவின் சதித்தனம். இதில் அரபு நாடுகளில் சிலவற்றையும் தன்னுடன் இணைத்து கொள்வதே அதன் நரித்தனம். இதற்கு சுன்னத்தி-ஷியா அரசியலை பகடைக்காயாக உருட்டுகிறது.
ஈரான் மீது ராணுவ தாக்குதல் தொடுக்க வேண்டிய அவசியத்தை இஸ்ரேல் பல ஆண்டுகளாகவே வலியுறுத்துகிறது. அதற்கு அரபு நாடுகளின் துணையும தேவை என்பதை உணர்ந்தே உள்ளது. சன்னி முஸ்லிம் அரபு நாடுகள் அனைத்தையும் ஒருங்கிணைத்து, ஷியா முஸ்லிம் நாடான ஈரானுக்கு எதிராக களத்தில் இறக்க அமெரிக்கா அனைத்து ஆயத்தங்களையும் செய்துள்ளது. அதற்காக அந்நாடுகளிலெல்லாம் அபரிமிதமாக ஆயுதங்களை சப்ளை செய்துள்ளது.
சவூதி அரேபியாவுடன் 60 பில்லியன் டாலர் பெறுமான ஆயுத பேரத்தை முடித்துள்ளது அமெரிக்கா. இந்த வருடம் மட்டும் ரேடார் மற்றும் ஏபுகணை எதிர்ப்பு வசதிகளுடன் உள்ள 84 நவீன எஃப்.-15 ஜெட் விமானங்கள், 70 யூ.எச்.-60 பிளாக்ஹாக் ஹெலிகாப்டர்கள், 60 லாஸ்பௌ அபாச்சே ஹெலிகாப்டர்கள், 2742 டாங்கி எதிர்ப்பு ஏவுகணைகள் ஆகியவற்றுடன் பல்வேறு உபகரணங்களையும் சவ+திக்கு அமெரிக்கா விற்றுள்ளது.
சென்ற ஒரு வருடத்தில் மட்டும் ஜோர்டான் நாட்டுக்கு 220 மில்லியன் டாலர்கள் பெறுமான 80 நவீன ரக ராக்கெட் லாஞ்சர்கள் சப்ளை செய்யப்பட்டுள்ளது. இதுதவிர 338 மில்லியன் டாலர்கள் பெறுமான 1808 டாங்கி எதிர்ப்பு ஏவுகணைகள், இருட்டிலும் இயங்கக் கூடிய 162 லாஞ்சர்கள் ஆகியவற்றையும் விற்றுள்ளது.
அமீரகத்துடன் 290 மில்லியன் டாலர் பெறுமான ஆயுத விற்பனைக்கு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இதன் முலம் 1600 லேசர் வெடிகுண்டுகள், 800 ஒரு டன் எடை கொண்ட வெடிகுண்டுகள், 400 பதுங்கு குழி வெடிகுண்டுகள் ஆகியவை சப்ளை செய்யப்படும்.
எகிப்துடன் இந்த வருட ஆரம்பத்தில் ஏற்பட்ட ஒப்பந்தப்படி 3.2 பில்லியன் டாலர்கள் பெறுமான 24 எஃப்.16 ஜெட் விமானங்கள், போர்க்கப்பல்களை தகர்க்கும் அதிநவீன ஹார்ப்ப+ன் பிளாக் -2 ஏவுகணைகள், ஏவுகணைகளை தாங்கி அதிவேகமாக செல்லும் 4 நவீன படகுகள், 450 டாங்கி எதிர்ப்பு ஏவுகணை களையும மற்றும் 750 மில்லியன் டாலர் பெறுமான எஃப்.16 ஜெட் விமானங்களுக்கான 156 ஜெட் என்ஜின்களும் விற்கப்பட்டுள்ளன. சூயஸ் கால்வாய் வழியாக செல்லும் எண்ணெய் கப்பல்கள் மற்றும் போர்க்கப்பல்கள் எகிப்து அனுமதி இருநதால் மட்டுமே செல்ல முடியும். கடந்த ஜூன் மாதம் ஒரு இஸ்ரேலிய போர்க்கப்பலும், 11 அமெரிக்க போர்க் கப்பல்களும் சூயஸ் கால்வாய் வழியாக செல்ல எகிப்து அனுமதித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இது ஈரானுக்கு வைக்கப்பட்டுள்ள குறி என்பதில் சந்தேகமில்லை.
இவ்வாறு அரபு நாடுகளுக்கு நவீன ஆயுதங்கள் வழங்குவது குறித்து அமெரிக்க ராணுவ தலைமை அமெரிக்க காங்கிரசில் அறிக்கை தாக்கல் செய்யும் போது “இது மத்திய கிழக்கு பகுதியிலே வலுவான தளத்தை ஈரானுக்கு எதிராக உருவாக்க அவசியமான ஒன்று”- என தெரிவித்துள்ளது.
இஸ்ரேல் அரபு நாடுகளுக்கான ஆயுத பேரங்களை எதிர்த்துள்ளது. தன்னை விட ராணுவ ரீதியில் பலமான மத்திய கிழக்கு பகுதியிலே இன்னொரு நாடு உருவாகி விடக் கூடாது என்பதிலே அது உறுதியாக உள்ளது. இதனால் அமெரிக்கா இஸ்ரேலை சமாதானப்டுத்தும் முகமாக அரபு நாடுகளுக்கு விற்கப்பட்ட ஆயுதங்களை விடவும் நவீன ஆயுதங்களை இஸ்ரேலுக்கு வழங்கியுள்ளது. உலக பேட்டை ரவுடி அமெரிக்கா மத்திய கிழக்கு பகுதியின் பேட்டை ரவுடியாக இஸ்ரேல் நீடிக்க தேவையான உறுதியை இஸ்ரேலுக்கு தந்துள்ளது.
சவூதி அரேபியாவுக்கு விற்கப்பட்ட எஃப்-15 போர் விமானத்தில் நீண்ட தூரம் சென்று தாக்கும் ஏவுகணைகளோ, மற்ற நவீன ஆயுதங்களோ கிடையாது. ஆனால் இஸ்ரேலுக்கு வழங்கப்பட்டுள்ள எஃப்-35 என்ற மிக நவீன போர் விமானம் ரோடர் கண்களிலேயே மண்ணைத் தூவி, விமான எதிர்ப்பு ஏவுகணைகளையும் ஏமாற்றி விட்டு இலக்கு நோக்கி சென்று திரும்பும் வசதிகள் கொண்டதாக உள்ளது. இது மட்டுமல்லாது இஸ்ரேலின் ஏரோஸ்பேஸ் நிறுவனமும், போயிங் நிறுவனமும் இணைந்து உருவாக்கி வரும் ஏரோ-3 ஏவுகணை எதிர்ப்பு குறுக்கீட்டு தொழில்நுட்ப வளர்ச்சிக்கு 100 மில்லியன் டாலர்கள் நிதியுதவி அளித்துள்ளது. ராக்கெட் எதிர்ப்பு ஏவுகணை உருவாககும் இஸ்ரேலின் அயர்ன் டோம்-க்கு 205 மில்லியன் டாலர்கள் நிதியுதவியும் வழங்கப்பட்டுள்ளது.
கடந்த 12-06-2010 அன்று லண்டனில் இருந்து வெளியாகும் டைம்ஸ் செய்தி இதழ் அமெரிக்க ராணுவ அதிகாரி அளித்துள்ள செய்தி ஒன்றினை வெளியிட்டுளளது. அதில் ரியாத் – தன் நில எல்லை மீது இஸ்ரேல் போர் விமானங்கள், வெடிகுண்டு வீச்சு விமானங்கள் பறந்து செல்ல அனுமதி அளித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. ஈரானின் அணு உலை நிலைகளின் மீது குண்டு வீச இஸ்ரேலுக்கு இந்த அனுமதி ரியாத்தால் அளிக்கப்பட்டுள்ளதாகவும் இதற்கு அமெரிக்காவின் ஒப்புதல் பெற்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
‘ஈரான் ஆக்கிரமிப்பு| என்பது அமெரிக்காவின் திடீர் திட்டமல்ல. உலகிலேயே அதிக எண்ணெய் வளம் கொண்ட நாடுகளில் ஈரான் 3-வது இடத்தில் உள்ளது. இதை விழுங்க அமெரிக்கா 1995-லேயே திட்டம் தீட்டி விட்டது. அமெரிக்க ராணுவத்தின் மத்திய படைப் பிரிவின் ஆவணத்தில் குறிப்பிட்டுள்ள தகவலின்படி 1995லேயே முதலில் ஈராக் பின்னர் ஈரான் என ஆக்கிரமிப்புகள் திட்டமிடப்பட்டு விட்டன. முதலில் குறிப்பிட்ட பிராந்தியத்தில் ஒரு பதட்டத்தை – ராணுவரீதியிலான பதட்டத்தை – உருவாக்கி, பின்னர் ராணுவ துருப்புகளை குவித்து ராணுவ தீர்வே வழி எனக் கூறி உள்ளே நுழைவது அமெரிக்காவின் திட்டம். முதலில் ஈராக் பின்னர் ஈரான் அதைத் தொடர்ந்து சிரியா மற்றும் லெபனான் அதனுடைய உடனடி இலக்குகள், வட கொரியா, சீனா, கிய+பா மற்றும் ரஷ்யா ஆகியவை அமெரிக்காவின் நீண்ட கால இலக்குகள்.
2005-ம் ஆம் வருடத்திலிருந்தே அமெரிக்கா, நேட்டோ நாடுகள் மற்றும் இஸ்ரேல் ஆகியவை மிக நவீன ஆயுதங்களை குவிப்பதும், இவை வான் வழி பாதுகாப்பிலே ஒருங்கிணைந்து செயல்படுவதும் நடந்து கொண்டிருக்கிறது. நேட்டோ நாடுகளுடன் நட்புறவுடன் உள்ள அரபு நாடுகள் ஜப்பான், தென்கொரியா, இந்தோனேஷியா, சிங்கப்ப+ர், இந்தியா, ஆஸ்திரேலியா ஆகியவையும் இதில் பங்கு பெறுகின்றன.
சூயஸ் கால்வாய் வழியாக போர்க் கப்பல்களின் நடமாட்டத்தை எகிப்து கவனித்துக் கொள்கிறது. பெர்சிய வளைகுடாவின் தென்மேற்கு கரைப்பகுதி, ஓமன் வளைகுடா பகுதிகளை சவூதி அரேபியாவும், மற்ற அரபு நாடுகளும் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளன. ‘பயங்கரவாதத்துக்கு எதிரான போர் – என்ற பெயரிலே அரபு நாடுகளில் மிக நவீன ஆயுதங்கள் அமெரிக்காவால் குவிக்கப்பட்டு விட்டன.
கடந்த ஜூன் மாதம் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் ஈரான் நாட்டுக்கு எதிராக பல்வேறு தடைகளை – கடுமையான பொருளாதார தடைகள் உட்பட- விதித்துள்ளது. காசாவுக்கு நிவாரணப் பொருள் கொண்டு சென்ற படகை சர்வதேச கடல் எல்லையில் தாக்கி அதில் சென்ற சமூக ஆர்வலர்களை கொலை செய்த இஸ்ரேலை கண்டித்து தீர்மானம் இயற்ற மறுத்த சில நாட்களுக்குள்ளாகவே ‘ஈரானுக்கு எதிரான பொருளாதார தடைகள்’ தீர்மானத்தை இக் கவுன்சில் நிறைவேற்றியுள்ளது என்பது கவனிக்கப்பட வேண்டிய ஒன்று. இதன் மூலம் ஈரான் மீதான அமெரிக்காவின் ஆக்கிரமிப்பு போருக்கு ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் பச்சைக் கொடி காட்டியுள்ளது.
எந்த ஒரு ஆக்கிரமிப்பு போரில் அமெரிக்கா ஈடுபட்டாலும், அமெரிக்க மக்கள் அரசுக்கு எதிரான மிகப் பெரிய போராட்டங்களை முன்னெடுப்பது வழக்கம். வியட்நாம் போர், ஆப்கன் போர், ஈராக் போர் என அனைத்து போர்களையும் அமெரிக்க மக்கள் எதிர்த்தே வந்துள்ளனர். 2006-ல் எடுத்த கணக்கெடுப்பின்படி ஈரான் மீதான ராணுவ நடவடிக்கைக்கு எதிராக அமெரிக்க மக்களில் மூன்றில் இரண்டு பங்கினர் கருத்து தெரிவித்தனர் – எதிர்ப்பு தெரிவித்தனர். அமெரிக்க அரசு ஊடகங்களின் மூலம் தொடர்ந்து ஈரான் பற்றிய விஷமப் பிரச்சாரத்தை கட்டவிழ்த்து விட்டது. ஈரானின் அணு ஆயுதங்களால் சராசரி அமெரிக்காவின் வாழ்வு பறிபோகப் போவதாக தன் மக்களை நம்ப வைத்தது. ராணுவ தீர்வு ஒன்றே வழி என கருத்து திணிப்பை நடத்தியது. அதன் பலனாக கடந்த பிப்ரவரி மாதம் ராய்ட்டர் – ஜோக்பி நடத்திய கருத்துக் கணிப்பில் 56 சதவிகிதம் அமெரிக்கர்கள் ஈரானுக்கு எதிராக அமெரிக்காவும், நேட்டோ நாடுகளும் இணைந்து ராணுவ தாக்குதல் நடத்த வேண்டும் என கருத்து தெரிவிததுள்ளனர். ஈராக், ஜப்பான் ஆக்கிரமிப்பு களுக்கெதிராக குரல் கொடுத்தவர்கள் இன்று ஈரான் விஷயத்தில் நழுவுகின்றனர். யுத்த எதிர்ப்பு இயக்கங்களும் கூட அமெரிக்க அரசின் பொய் பிரச்சாரத்துக்கு பலியாகி விட்டன.
ஈரான் ஆக்கிரமிப்பு யுத்தத்துக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு விட்டன. இஸ்ரேல் – பலஸ்தீன பேச்சுவார்த்தைக்கு தரகனாக தன்னை முன்னிறுத்தி சமாதான தூதுவனாக அரிதாரமிடுவது மட்டுமல்லாமல், ஈரானை தாக்குவதற்கு அரபு நாடுகளையே தயார் செய்து வைத்துள்ளது அமெரிக்கா. உலகத்தின் ஊடகங்கள் எல்லாம் அமைதி தவழும் பூங்காவாக பலஸ்தீனம் மலரப் போகிறது என பயாஸ் கோப்பு காட்டிக் கொண்டிக்கும் வேளையில் சத்தமில்லாமல் மொத்தமாக ஈரானை விழுங்கப் போகிறது அமெரிக்கா. இந்த ஏகாதிபத்தியத்தின் யானைப் பசிக்கு ஈரான் ஒரு சோளப் பொறி மட்டுமே. இன்று ஈரான்……நாளை ….????
Thanks : Manisudar Tamil Daily