இறை மன்னிப்பு நிறைந்த இனிய ரமளான்

இலக்கியம் கட்டுரைகள்

இறை மன்னிப்பு நிறைந்த இனிய ரமளான்

               (  J.S.S அலி பாதுஷா மன்பயீ பாஜில் ரஷாதி் )

                               புகழ் அனைத்தும் அல்லாஹ் ஒருவனுக்கே உரித்தாகுக ! அவன் அருளாளன், அன்புடையோன். அவன் மனித இனத்தை படைப்பினங்களிலேயே மிகச்சிறந்த உன்னத படைப்பாக படைத்ததுடன் அம்மனிதர்களுக்கு அளப்பரிய அருள்வளங்களை அள்ளி வழங்கியிருக்கிறான். அதில் ஒன்று தான் தன் அடியார்களுக்கு நானே கூலி வழங்குவேன் என்று அல்லாஹ்வே நம்மிடத்தில் நேரிடையாக பேசுகிறானே அப்பேர்ப்பட்ட அருள்வளங்களும், இறைமன்னிப்பும் நிறைந்த புனித ரமளான் மாதம் தான் இது.

                               இம்மாதத்தில் இறைவனுக்காகவே நோன்பிருந்து அதில் கேட்கப்படும் தன்னுடைய தேவைகளை இறைவனே நேரிடையாக நிறைவேற்றித் தருகிறான். இதில் ஒரு வழிமுறையை ஏற்படுத்தி மூன்று பிரிவுகளாக பிரித்து தன் கருணையை அடியார்கள் மீது அள்ளி வழங்குகிறான்.

                                இக்கண்ணியமிக்க புனித மாதத்தின் முப்பது நாட்களைப்பற்றி நபிகளார் (ஸல்) அவர்கள் கூறுகையில் அல்லாஹ் மூன்று முக்கிய அம்சங்களைக் கொண்ட பத்து நாட்கள் எனும் விதத்தில்  வைத்திருப்பதாக அடையாளம் காட்டியுள்ளார்கள். ரமளானின் முதல் பத்து நாட்கள் அல்லாஹ்வின் ரஹ்மத் எனும் அருட்கொடையாகவும் நடுப்பத்து நாட்கள் மக்ஃபிரத் எனும் பாவமன்னிப்புக்குரியதாகவும் கடைசிப் பத்து நாட்கள் நரகத்திலிருந்து விடுதலை அளிக்கக் கூடியதாகவும் உள்ளது என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறுகிறார்கள்   (ஸஹ்ல் (ரலி) இப்னு குஜைமா)

                                 மனிதர்கள் வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் எல்லாத் தருணங்களிலும் அனைத்து விதமான நற்செயல்களிலும் ஈடுபட்டுக் கொண்டுதான் இருக்கின்றனர் என்றாலும் அருள், இறை கருணை,  மற்றும் பாவமன்னிப்பை அள்ளித்தருகின்ற இப்புனித மாதத்தில் ஒரு இறை நம்பிக்கையாளரின் சிந்தனையில் தனிக்கவனம் செலுத்த வேண்டியுள்ளது. ஏனெனின் இந்த மாதத்தில் அல்லாஹ்வின் நெருக்கத்தை பெருகின்ற நோக்கத்துடன் எந்த ஒரு நன்மையை செய்தாலும் அது பர்ளுக்கான அந்தஸ்தை பெற்று விடுகின்றது என்பது அண்ணல் நபிகளாரின் வாக்கு. எனவே நன்மைகளை அதிகமாக ஈட்டுவதில் முனைப்புடன் செயலாற்றி முதல் பத்தில் அல்லாஹ்வின் அருளையும், கருணையையும் பெற்றுக்கொள்வதுடன் இரண்டாவது பத்தில் அதிகமாக பாவமன்னிப்பு கோர வேண்டும் நம்முடைய இறைவன் ஒவ்வொரு இரவும் கீழ்வானத்திற்கு இறங்கி இரவில் மூன்றில் ஒரு பகுதி இருக்கும்போது, என்னிடம் யாரேனும் பிரார்த்தித்தால் அதை நான் அங்கீகரிக்கின்றேன். யாரேனும் பாவமன்னிப்பு கேட்டால் அவரை நான் மன்னிக்கின்றேன் (புகாரி) என்று பெருமானார் (ஸல்) அவர்கள் சொல்கிறார்கள் என்றால், நோன்பாளிகளாக இருக்கும் நாம் நம் தேவைகளை அவனிடம் முன் வைக்கின்ற போது இறை அருளாலும், நோன்பின் பரக்கத்தாலும் அல்லாஹ்வே நேரிடையாக அடியார்களுக்கு அவர்களின் தேவைகளை நிறைவேற்றிக் கொடுக்கின்றான். அது மட்டுமல்ல அடியார்கள், தான் செய்த (ஷிர்கைத்தவிர) சிறிய பெரிய தவறுகளுக்காக இறைவனிடம் பாவமன்னிப்பு கேட்கும்போது தன் கருணையினால் மன்னிப்பையும் வழங்குகிறான்.

                                 இறைவன் கூறியதை பெருமானார் (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள். ரமளானில் நம்பிக்கையுடன் நன்மையை எதிர்பார்த்து (தொழுது) வணங்குகிறவரின் முன் செய்த பாவங்கள் மன்னிக்கப்படும் (புகாரி) என்றும் ரமளானில் நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்தும் நோன்பு நோற்கிறவனின் முன் செய்த பாவம் மன்னிக்கப்படுகிறது (புகாரி) என்றும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொல்கிறார்கள். முன் செய்த பாவங்களை அல்லாஹ் தன் கருணையைக் கொண்டு மன்னிக்கின்றான் என்பதன் பொருள் மனிதர்கள் கடந்த காலத்தில் பாவச்செயல்களில் ஈடுபட்டுயிருந்திருப்பார்கள் ரமளான் மாதத்தில்  நோன்பு வைத்திருக்கும் அடியார் நோன்பின் மூலம் அல்லாஹ் என்னைப் பார்த்துக் கொண்டிருக்கிறான் என்ற எண்ணத்தில் கடந்த காலத்தில் செய்த பாவங்களை நான் மீண்டும் செய்தால் அவன் என்னை தண்டிப்பான் என்ற எண்ணம் தன் மனதில் வந்துவிடும் பொழுது நோன்பின் பரக்கத்தால் அந்த அடியாரை அல்லாஹ் உடனே மன்னித்து கிருபை செய்கிறான்.

                                 பொதுவாக மனிதர்கள் அல்லாஹ்விடம் முறையாக மனமுறுகி பாவ மன்னிப்புக் கேட்க வேண்டும். அறிந்தும் அறியாமலும் நம்மால் நிகழ்ந்த அமல்களின் குறைபாடுகள், சிறிய பெரிய பாவங்களை நினைவு கூர்ந்து, அவற்றைப்பற்றி மனம் வருந்தி மீண்டும் அப்பாவத்தில் ஈடுபடாமல் இருக்க இந்த ரமளான் மாதத்தில் உறுதி எடுத்துக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு தொழுகையிலும் அதிலும் குறிப்பாக இருபது ரக்காஅத் தராவீஹ் தொழுத பின்பும், தஹஜ்ஜத் தொழுத பின்பும் அல்லாஹ்விடத்தில் பாவமன்னிப்பை கோர வேண்டும். மேலும் நம்முடைய ஒவ்வொரு செயலும் தனிமையிலோ, அல்லது கூட்டத்திலோ, இரவிலோ, பகலிலோ எங்கு நிகழும் போதும் அது அல்லாஹ்வின் பார்வைக்கு மறைந்தது அல்ல, அவன் எந்நேரமும் நம்மை கண்காணித்துக் கொண்டு இருக்கிறான், மேலும் நாம் நிச்சயமாக அனைத்து செயல்களுக்கும் பதில் சொல்லியே ஆக வேண்டும், நன்மையான செயல்களுக்கு பரிசும், தீமைகளுக்கு (இறை மன்னிப்பு இல்லையெனில்) தண்டனை நிச்சயம் உண்டு என்ற எண்ணத்தில் உறுதியாகவும், அல்லாஹ் என்னைப் பார்த்துக் கொண்டிருக்கிறான் என்ற எண்ணத்தையும் மனதில் உள்வாங்கி நாம் நோன்பிருப்போமானால் கண்டிப்பாக அல்லாஹ் அந்த நோன்பை ஏற்றுக் கொண்டு ரஹ்மத் எனும் கருணையை பொழிவதுடன் நாம் செய்த சிரிய பெரிய தவறுகளை அவனிடம் முறையிடுவதினால் நமக்கு மன்னிப்பையும் வழங்கி நரகத்திலிருந்து ஈடேற்றம் பெறச் செய்து சுவர்க்கத்தில் நிச்சயமாக நுழையச் செய்வான் என்பதை  கீழ்காணும் ஹதீஸ் நமக்கு உறுதியளிக்கின்றது

                                 நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள் சொர்க்கத்தில் “ரய்யான்” என்று கூறப்படும் ஒரு வாசல் இருக்கிறது. மறுமை நாளில்  அதன் வழியாக நோன்பாளிகள் நுழைவார்கள். அவர்களைத் தவிர வேறு எவரும் அதன் வழியாக நுழைய மாட்டார்கள். நோன்பாளிகள் எங்கே என்று கேட்கப்படும் உடனே, அவர்கள் எழுவார்கள் (அவர்களைத் தவிர) வேறு எவரும் அதன் வழியாக நுழைய மாட்டார்கள். அவர்கள் நுழைந்ததும் அவ்வாசல் அடைக்கப்பட்டு விடும்.(ஸஹ்ல் ரலி : புகாரி) என்று நபிகளார் கூறினார்கள்.

  கருணை உள்ளம் கொண்ட இறைவனே ! உன் அளவில்லா கருணையை எங்கள் மீதும் பொழிந்து உன் மன்னிப்பை மட்டுமே ஆதரவு வைத்துள்ள எங்களின் குற்றம் குறைகளை மன்னித்து நோன்பாளிகளான எங்கள் அனைவர்களையும் ரய்யான் என்ற வாசல் வழியாக சுவர்க்கத்தில் சேர்த்து விடுவாயாக ஆமீன் வஸ்ஸலாம்

மெளலவி

J.S.S. அலி பாதுஷா மன்பயீ பாஜில் ரஷாதி

050/ 5471543

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *