நேரம் கெட்ட நேரம்.
—————————–
( தாஜ் )
என் பயணங்களை
இரவில் தான் தேர்வு செய்கிறேன்
நீண்டதூரம் இருளில் பயணிப்பது
தவிர்க்க முடியாத அனுபவம்
சின்னச் சின்ன நட்சத்திரங்கள்
வெள்ளையாய் கண்சிமிட்டுகின்றன
முந்தாநாள் பார்த்த முழுநிலவு
இன்றைக்கு தேய்ந்து கொண்டிருக்கிறது
கண்ணுக்கெட்டிய தூரமெல்லாம்
கவிழ்ந்து கிடக்கிறது மையிருட்டு
இருள் பெருக்குமது சுகமானது
யாருக்கும் யார்முகமும் பிடிபடாது
இருளில் எல்லோருக்கும் உண்டு
இன்னொரு முகம்
தடங்கள்களுக்கும் பதற வேண்டியிராது
நித்திரை மனிதர்களோ
எதையும் அறியமாட்டார்கள்
வெளிச்சத்தைப் பாய்ச்சியபடி
என் வாகனம் விரைகிறது
எல்லோரும் கனவுகளில்
சஞ்சரிக்கும் நேரம்
மறுபடியும் பிறக்கலாம்
திரும்ப திரும்ப இறக்கலாம்
வானுக்கும் பூமிக்குமான வெளியில்
அத்தனையையும் நிம்மதியாக
நீண்டு போகம் செய்யலாம்
கலவியில் கசியும் பூரணம் உணர்ந்து
பூரித்துப் போகலாம்
தூங்கியவர்களும்
கனவுகளின் பக்கம் திரிந்தவர்களும்
புதிய விடியலில் அவரவர் திக்கில்
எழுந்து முந்தி விரைய
உறங்கநான் அமைதியானதோர்
இடம் தேடி அலையக்கூடும்.