இறைவா! உன்னிடம்…
இருகரம் ஏந்துவதும்
உன்னிடம்
என் இன்னல்களை
இயம்புவதும்
உன்னிடம்…
துன்பத்தில் மிகைத்தாலும்
உன்னிடம்
நான் இன்பத்தில்
திளைத்தாலும்
உன்னிடம்…
அகிலப் படைப்பும்
உன்னிடம்
என் ஆத்ம துடிப்பும்
உன்னிடம்…
அன்பு ஓங்குவதும்
உன்னிடம்
என் ஆசைகள் வளர்வதும்
உன்னிடம்…
அபலைகள்
அழுவதும் உன்னிடம்
என் கவலைகள் கூறுவதும்
உன்னிடம்…
ஆறுதல் தேடுவதும்
உன்னிடம்
எனக்கு
மாறுதல் கிடைக்கும்
உன்னிடம்…
‘’தக்பீர்’’ கட்டுவதும்
உன்னிடம்…
என்
‘தக்தீரின்’ நிர்ணயம்
உன்னிடம்…
தலை வணங்குவதும்
உன்னிடம்
நான் தலை சாயும் போது
உன்னிடம்…!
பிரிவு…
கருவறையைப்
பிரிந்தபொழுது
நான் அழுதேன்…
பள்ளிக்கு அனுப்பி விட்டுத்
தாய் அழுதாள்…
கல்லூரிப் படிப்பு முடிந்து
காதலர்கள் அழுகிறார்கள்…
கணவனைப் பிரியும் பொழுது
மனைவி அழுகிறாள்…
உயிர் பிரியும் பொழுது
உறவு அழுகிறது…
பிரிவு என்பது
காலமும் தூரமும்
செய்த நிர்ணயம்…
எண்ணத்திலும்
உள்ளத்திலும்
நினைவு
வாழுகின்ற பொழுது
எது பிரிந்தது…?
உடல்
காற்று ஊதப்பட்ட
பந்து _ அது
ஆன்மாவால்
அலங்கரித்துக்
கொண்டிருக்கிறது.
எங்கிருந்து
புறப்பட்டோமோ
அங்கே
சேர வேண்டுமென்பது
நியதி…!