( பொற்கிழிக் கவிஞர் மு. சண்முகம், இளையான்குடி )
இறைவாக
உண்மையாக
உன் பெயரென்ன …?
வடிவென்ன ….?
உன் விலாசந்தான்
என்ன….?
நீ
ஒன்றென்கிறார்கள் !
பல என்கிறார்கள் !
நீ
ஒன்றா..?
அதற்கும் மேலா ?
இறைவா ….!
சுட்டமண் பாத்திரமான
மனித உடம்பில்
ஒன்பது ஓட்டைகள் !
இந்த ஓட்டைப் பாத்திரத்திலும்
உயிரூற்றி வைத்திருக்கிறாயே..!
இதெப்படி ….?
நீ
கடவுள் ஆனால்
எதைக் கடந்திருக்கிறாய் ?
எதில் கலந்திருக்கிறாய் ?
நீ
உருவமா …?
அருவமா …?
உண்மையா ? பொய்யா ?
சிலர்
அன்பே சிவம் என்கிறார்கள் !
அறிவே கடவுள் என்கிறார்கள் !
இன்னும் சிலர்
செய்யும் தொழிலே
தெய்வம் என்கிறார்கள் !
நீ
அன்பா ? அறிவா ?
வேறு எதுவாக
நீயிருக்கிறாய் ..?
உன்னை
ஞானியும் தேடுகிறான் !
விஞ்ஞானியும் தேடுகிறான் !
எத்தனையோ யுகங்களாகியும்
உன்னைக்
காணமுடியவில்லையே ..!
எங்கள் மக்கள் கவிஞன்
பட்டுக்கோட்டை
கல்யாண சுந்தரம்
கடவுள் இருப்பதும்
இல்லையென்பதும்
கதைக்குதவாத வெறும்பேச்சென
விளாசிவிட்டுப் போயிருக்கிறான் !
நாங்கள் …. எதை நம்ப …?
நீ இருப்பதையா …?
இல்லையென்பதையா …?
விஞ்ஞானத்தின்
வெகுமதியாய்
விதவிதமாக
எதையெதையோ
கண்டுபிடித்துள்ளோம் !
ஆனால்
உன்னைப்பற்றிய
மர்மத்தை மட்டும்
எங்களால் …
கண்டுபிடிக்க முடியவில்லை !
இறைவா !
எங்கள் இயலாமையில்
உட்கார்ந்து
நீ சிரிக்கிறாய் …?
உன் படைப்புகளில்
பேசும், சிரிக்கும் பெருமை
மனிதர்களுக்குத் தானே…!
எங்கள் மரணத்தையும்
குறித்து வைத்திருப்பது
நீதானே …!
இறைவா ….! உன்
கண்ணாமூச்சி ஆட்டத்திற்கு
அளவேயில்லை !
புல்லும்
பனிக்குடம் சுமக்க வைப்பாய் !
பூவிலும்
வாசம் தேக்கி வைப்பாய் !
உப்புக் கடலிலும்
மின் வளர்த்துக் காட்டுவாய் !
இன்னொரு அதிசயம்
தெரியுமா ..?
உன்னை இல்லையென்பார்க்கும்
சுவாசம் தருகிறாய் …!
இந்தவுன் ஈரம்
எந்த எடைக்குள்ளும்
அடங்காது !
இறைவா…!
காற்றாய், மழையாய்
கடலாய், நதியாய்
மனிதர்களுக்கு
இயற்கையை தோழமையாக்கிய
நீ
எங்களில் யாரிடமாவது
எவரிடமாவது
உன் இருப்பைச் சொல்லாமே ….!
சொல்லி உன்
மௌனத்தை கலைக்கலாமே …!
எங்கள் மயக்கத்தை
தீர்க்கலாமே ….!
உன்னை
மதவாதிகள் கூறுபோடுகிறார்கள்
உன்னைக் கல்லாகவும்
மண்ணாகவும் பார்க்கிறார்கள் !
ஆனால் … நீ
நெல்லுக்குள்ளும்
அரிசி வைத்தும் நிற்கிறாய்
கோழிக்குள் முட்டைவைத்தும்
முட்டைக்குள்
கோழி வைத்தும் புன்னைக்கிறாய்
நீ எங்கிருந்தாலும் சரி !
எங்கள் திசைகளுக்குத்
தென்றலைக் கொண்டு வா !
இதுபோதும்
அதுவரை இப்போது
இடைவேளை !
( பொற்கிழிக் கவிஞர் விருது பெற்ற கவிஞர் மு சண்முகம் சிவகெங்கை மாவட்டம் இளையான்குடி டாக்டர் ஜாஹிர் உசேன் கல்லூரியில் அலுவலக பணியாளராகப் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். தொடர்பு எண் : 99763 72229 )
www.mudukulathur.com