கல்விப் பெருந்தகை ஜமால் முகமது சாகிப்

கட்டுரைகள்

ஜனாப். ஜமால் முகமது சாகிப் இளமைப் பருவம்.

சீர்மிகு கல்விப் பணிகள், மக்கள் நலப்பணிகள் பலவற்றை சிறப்பாக செய்த ஜனாப் ஜமால் முகமது அவர்கள், 1882ம் வருடம் ஜனவரி மாதம் இப்பூவுலகில் அவதரித்தார். அவருடைய தந்தையார் ஜமார் முகையதீன் சாகிப் ஆவார்கள். இளமைப்பருவத்தில் திருகுர்ஆனை மனப்பாடம் செய்து ஓதுவதில் ஆர்வம் காட்டினார்கள். ஆரம்பக் கல்வியினை மண்ணடி முத்தியால் பேட் பள்ளியில் ஆர்வமுடன் கற்ற அவர், ஆங்கிலம், கணிதம், பூகோளவியல் ஆகிய பாடங்களில் அதிகம் மதிப்பெண்களைப் பெற்று சிறந்து விளங்கினார். தம் உயர்நிலைப் பள்ளிப் படிப்பினை சென்னை கிருத்துவ உயர்நிலைப்பள்ளியில் தொடர்ந்தார். வகுப்பு நண்பர்களுடனும் பொது விசயங்களையும், மத விசயங்களையும் விவாதிப்பதில் ஆர்வம் காட்டினார்கள். உடல் நலக் குறைவின் காரணமாக பள்ளிக் கல்வி தடைபட்டது. எனினும், அவர்தம் தந்தையார் அவர்களுடன் வியாபாரத்தை பெருக்குவதிலும், வியாபார நுணுக்கங்களை அனுபவரீதியாக தெரிந்து கொள்வதிலும் மிக்க ஆவலுடன் ஈடுபட்டார்கள்.
வியாபாரமும் கல்வியும்:

தோல் பதனிடும் தொழிலே அவர்தம் பூர்விக குடும்ப வியாபாரமாக இருந்தது. எனவே அவர் வியாபாரத்தில் ஈடுபட்ட போதும் கல்வியினை நடைமுறையில் கற்றுக் கொள்வதில் அவர் முனைப்புக் காட்டினார். அதன் காரணமாக மெட்ராஸ்யுனைடெட்கிளப்-ல் உறுப்பினராகத் தம்மை ஆக்கிக்கொண்டு, அங்கே வருகின்ற ஆங்கில பிரசுரிப்புகளான, பத்தொன்பதாம் நூற்றாண்டு ரிவீயூவ் தீ ஸ்பெக்டேட்டர் ஆகிய ஆங்கில வார, மாத இதழ்களை விருப்பத்துடன் படித்து வந்தார். அது மட்டுமன்றி, வரலாற்று நூல்கள் புகழ் பெற்றவர்களின் வாழ்க்கை வரலாற்று நூல்கள், இதர பல்வேறு பயனுள்ள நூல்களையும், அவ்வப் போது சுயமாகவே வாங்கி படித்து தன்னுடைய ஆங்கில அறிவை நன்கு வளர்த்துக் கொண்டார். அதன் காரணமாக ஆங்கிலத்தில் வியாபார ரீதியான கடிதங்களை அமெரிக்கா, ஐரோப்பா, ஜப்பான் போன்ற நாடுகளுடன் எழுதி வியாபாரத்தை வளர்ச்சியடைய செய்தார்.
நவீன கல்வியும், ஐரோப்பிய பயணமும் :

பெரம்பூரில் இயங்கி வந்த ஜமாலியாப் பள்ளியில், அரபி மொழிக் கல்வியைத் தவிர ஏனைய நவீன பாடத்திட்டத்தினை மாணவருக்கு பயிற்று விக்க முடியுமா? என்ற சர்ச்சைக்கு முடிவுகளான ஜனாப் ஜமால் முகமது சாகிப் ஏப்ரல் 1910-ல் இருந்து ஜனவரி 1911 முடிய    10 மாதங்கள் இடைவிடாது, பயணம் மேற்கொண்டு எகிப்து, வியட்னாம், ஜெர்மனி, பிரான்ஸ், இங்கிலாந்து துருக்கி, (மீண்டும் எகிப்து, மக்கா மதினா, சவூதி அரேபியா ஆகிய நாடுகளை பார்வையிட்டு அவைகளின் அடிப்படையில் உறுதியான முடிவுக்கு வந்தார். குறிப்பாக கான்ஸ்டாண்டி – நோபிளில் அமைந்துள்ள பழமையான காலிபா, நகரத்தில் – செய்குல் இஸ்லாம் என்ற அமைப்பின் கருத்துக்களை பதிவு செய்வதில் கண்ணும் கருத்துமாக இருந்த ஜமால் அவர்கள், மத ரீதியான அரபு கல்வியுடன், இதர நவீனப் பாடங்களையும், இஸ்லாமிய மத கல்வி நிறுவனங்களில் மாணவர்களுக்குக் கற்றுத் தரலாம் என்ற கருத்தினை எழுத்து மூலமாகப் பெற்றுக் கொண்டார். இதன்மூலம் நவீனக் கல்வியினை இஸ்லாமிய மாணவர்களுக்கு இந்தியாவிலுள்ள கல்வி நிறுவனங்களில் ஏற்படுத்தி தருவதற்குரிய அடிப்படைக் கோட்பாட்டை வடிவமைத்து தந்த கல்வித் தந்தையாக ஜனாப், ஜமால் முகமது சாகிப் அவர்கள் விளங்குகிறார்கள்.

பிரிட்டிஷ் நாணயத்தில் (பவுண் ஸ்டிடர்லிங்க்) இந்திய ரூபாயின் மதிப்பு ஜமால் சாகிப்பின் பொருளாதார கண்ணோட்டம் :

ஜனாப் ஜமால் சாகிப் அவர்கள் பொருளாதாரப் படிப்பில் பட்டம் பெற்றவர் இல்லை. எனினும், பொருளாதார சிந்தனையில் குறிப்பாக அந்நிய செலவாணி நிர்ணய விகிதத்தில் கூர்மையான அறிவும், அவற்றில் ஏற்படும் மாற்றம் எவ்வாறு ஒரு நாட்டின் பொருளாதாரத்தை, இறக்குமதி ஏற்றுமதியின் வழியாக பாதிக்கும் என்பதை நன்கு அறிந்தவராக விளங்கினார்.

1920 முதல் 1930 முடிய உள்ள 10 ஆண்டுகளில் மூன்று முக்கிய பொருளாதார நடவடிக்கைகளை அன்றைய பிடிட்டிஷ் அரசாங்கம் மேற்கொண்டது 1.ராயல் கமிசன் அமைப்பு, 2. இந்திய பணத்திற்கும் தங்கத்திற்கும் உள்ள விலை நிர்ணய மாற்றம், 3. இந்திய ரூபாய்க்கும் பிரிட்டிஷ் பவுண்ட் ஸ்டெர்லிங்க்கும் இடையே உள்ள விலை நிர்ணயம், இம்மூன்று முக்கிய முடிவுகளும் இந்திய பொருளாதாரத்தை குறிப்பாக இந்திய பாமர மக்களைப் பாதிக்கக் கூடியவையாக இருந்தன. நாடு முழுவதும் இப்பொருளாதார முடிவுக்கு தீவிர எதிர்ப்பு கிளம்பின. இவைகள் சம்பந்தப்பட்ட பாதிப்பான பொருளாதார அம்சங்களை தன்னுடைய எழுச்சிமிக்க பேச்சுக்கள் மூலம் தென்னிந்திய மக்களுக்கு எடுத்துரைத்தவர் ஜனாப். ஜமால் முகமது ஆவார்கள். இத்தகைய நிலைப்பாட்டை மாற்றுவதற்கும், 1931-32ல் ஜனாப். ஜமால் சாகிப் அவர்கள் இங்கிலாந்து சென்று அவ்வரசிடம் முறையிட்டு பின் நாடு திரும்பினார். இத்தகைய பொருளாதார சிந்தனை மிக்க ஜமால் சாகிப் அவர்களை தென் இந்திய சாம்பர் ஆப் காமர்ஸ்-ன் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதில் வியப்பு ஒன்றுமில்லை. இதன் காரணமாக ஜமால் காசிப் அவர்களை படிக்காத பொருளாதார மேதை என்று உறுதியாகக் கூறலாம்.

வட்டமேஜை மகா மாநாட்டில் ஜமால் முகமது அவர்களின் பங்கு:

பிரிட்டிஷ் பிரதம மந்திரி அவர்களால் 1931-ல் லண்டனில் நடைபெற்ற இரண்டாவது வட்டமேஜை மாநாட்டிற்கு ஜமால் முகமது சாகிப் அவர்கள் அழைக்கப்பட்டார்கள். அப்போது அவர்கள் இந்திய சாம்பர்ஸ் ஆப் காமர்ஸ் கூட்டமைப்பின் தலைவராக இருந்தார்கள். வட்டமேஜை மகா மாநாட்டில் பங்கு பெற்று பொருளாதார கருத்துக்களை சிறப்புற வலியுறுத்தினார்.

மேலும், அவர் செயற்கையான முறையில், நிர்வாக உத்தரவுகள் மூலம் பிரிட்டிஷ் நாணயத்திற்கும் இந்தியாவின் ரூபாய்க்கும் உள்ள மதிப்பு விகிதாச்சார முறையின் சமநிலைப்பாட்டை தோற்றுவிப்பது, இந்தியாவின் பொருளாதாரத்தைப் பாதிக்கக்கூடிய அம்சம் எனக் குறிப்பிட்டார். மேலும் இந்தியா பிரிட்டிஷ்க்கு செலுத்த வேண்டிய கடனை அதிகரித்துக் கொண்டே செல்லும் எனக் குறிப்பிட்டார். வியாபார வளர்ச்சி குன்றினால், இந்தியாவின் பொருளாதாரம் வெகுவாகப் பாதிக்கும் என வலியுறுத்தினார். இத்தகைய கருத்துகள் அப்போது உள்ள காலத்திற்கு மட்டுமின்றி, இப்போது உள்ள காலத்திற்கும் பொருந்தும். இது அவர்தம் தொலை நோக்குப் பார்வையை எடுத்துக்காட்டுகிறது.

மேலும் அவர் பேசுகையில், இந்தியாவுடைய இராணுவ செலவை அன்றைய பிரிட்டிஷ் அரசாங்கம் அதிகரித்துக் கொண்டே சென்றது பொதுமக்கள் மீது வரிச்சுமையை ஏற்படுத்திற்று. மகாண சட்ட மன்றங்களில் அத்தகைய இராணுவ செலவு அதிகரிப்பு ஒப்புக் கொள்ளப்படவில்லை யென்றாலும், அவற்றிற்கு மேல முடிவு எடுத்த திணிப்பது போன்ற நிர்வாக சட்டதிட்டங்கள் அகற்றப்பட வேண்டு மென்று உரையாற்றினார்.

விவசாயம், தொழில்-மேம்பாடு, வியாபாரம், தொழிலாளர்கள் பயன்பாடு ஆகியவற்றில் இந்திய மக்களின் பிரதிநிதிகளுக்கு மத்திய அரசில் தீர்மானிக்கும் உரிமை வேண்டும் என்று கூறியது மட்டுமல்லாமல் மாநில அரசாங்கத்திற்கும் மக்கள் பிரதிநிதிகளுக்கு சுயாட்சி முறை அமைப்பு வேண்டுமென்று ஆணித்தரமாகக் கருத்துக்களை எடுத்து வைத்தார். இத்தகையக் கருத்துக்களின் அடிப்படையில் பின்னால் ஏற்படுத்தப்பட்ட இந்திய அரசியலமைப்புச் சட்டம் ஓரளவு அமைந்தது என்றால் மிகையாகாது. எனவே இரண்டாவது வட்டமேஜை மகா மாநாட்டில் மாநில சுயாட்சிக்கு வித்திட்டவர் ஜனாப் ஜமால் முகம்மது அவர்களே.

வட்டமேஜை மாநாட்டில் பங்குபெற்ற பல்வேறு சமயத்தை சார்ந்தவர்களை ஒற்றுமையை ஏற்படுத்தி அதன்மூலம் இந்தியாவில் உள்ள பல்வேறு சமயம், இனத்தைச் சார்ந்த மக்களிடையையும், மத நல்லிணக்கத்தையும், சமுதாய ஒற்றுமையையும் ஏற்படுத்த நல்ல முயற்சி மேற்கொண்டார். இதன் காரணமாக மகாத்மா காந்தி அவர்களுடன் அடிக்கடி உரையாற்றும் வாய்ப்பு கிட்டியது. மகாத்மா காந்தி அவர்களும் இதர தலைவர்களும் ஜமால் சாகிப் அவர்கள் மீது முழு நம்பிக்கையும், மரியாதையும் வைத்திருந்தனர். இரண்டாவது வட்டமேஜை மாநாட்டில் பங்குப் பெற்றவுடன் ஜனவரி 1932 –ல் ஜனாப் ஜமால் சாகிப் அவர்கள் இந்தியா திரும்பினார்கள்.

ஜமால் சாகிப் அவர்களின் மெச்ச தக்க குணநலன்கள் :

ஜமால் முகம்மது அவர்கள் ஒரு செல்வாக்கு மிக்க வியாபாரி எந்த அரசியல் கட்சியையும் சாராத உண்மையான தேசியவாதி; பிரிட்டிஷ் அரசாங்கத்தின் அடிவருடியாக இல்லாதவர்; இந்திய பொருளாதார விசயங்களிலும், அதன் நிதிநிலை அமைப்பிலும் பாண்டித்தியம் பெற்ற திகழ்ந்தவர்; ஆதலின் சுதந்திர இந்தியாவில் நிதி மற்றும் வணிக அமைச்சராக விளங்குவதற்கு முற்றிலும் தகுதி படைத்தவர்; சிறந்த கொடை வள்ளல்; புகழ்மிக்க கல்வியாளர்; அதனாலேயே தென் இந்திய முஸ்லிம் கல்விச்சங்கத்தின் தலைவராக போட்டியின்றி ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்; அவர்தம் பெயரில் திருச்சியில் உள்ள ஜமால் முகம்மது கல்லூரி தோன்றுவதற்கு வித்திட்டவர்; பல தரப்பினரும் பாராட்டிய சிறந்த மேடைப் பேச்சின் வித்தகர்; அப்பழுக்கற்ற ஆன்மீகவாதி; அகிம்சையில் அசையா நம்பிக்கை கொண்டவர்; பூக்களைக் கண்டு மகிழ்ந்தவர்; பூக்களைப் பறித்தல் கூட நோவினை ஏற்படுத்தும் என்று உணர்ந்தவர்; மத நல்லிணக்கத்திற்காகப் பாடுபட்டவர்; வன்முறையில் துளியும் நம்பிக்கை இல்லாதவர்; இறைவன் மீது பூரண நம்பிக்கை வைத்தவர்; சுதேசி பொருள்களை விரும்பியவர்; – இத்தகைய ஈடு இணையற்ற பண்பின் காரணமாய், ஜனாப் ஜமால் முகம்மது சாகிப் அவர்கள், இருபதாம் நூற்றாண்டின், ஒப்பற்ற மனிதராக விளங்குகின்றார்.

இந்தியா முழுமையிலும் அலிகள் முஸ்லிம் பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல்வேறு கல்வி நிறுவனங்களுக்கு வாரி வழங்கியவர் தமிழகத்தில் பல்வேறு கல்வி நிறுவனம் உருவாக காரணமாக இருந்தவர்.

விடுதலை போரில் செலவுக்காக மகாத்மா காந்தி மூதறிஞர் ராஜாஜியிடம் ( Blank Cheque ) தொகை எழுதப்படாத காசோலை வழங்கிய இத்தகைய வள்ளல் ஜமால் முகம்மது அவர்களுடைய சிறந்த மறுமை வாழ்விற்கு சமவுரிமை இறைவனை இறஞ்சிகிறது.

கட்டுரை எழுதியவர்

டாக்டர். கே.எஸ்.உதுமான் முகைய்தீன்
பேராசிரியர் மற்றும் துறைத்தலைவர் (ஓய்வு)
பொருளாதாரத்துறை, சென்னை பல்கலைகழகம்,
சென்னை – 600 005.

நன்றி : சம உரிமை மாத இதழ்– ஜுன் 2010
samaurimail@gmail.com

ஆண்டுச் சந்தா : ரூ.144/-
தொடர்பு எண் : சென்னை : 044 4510 810
அமீரகத் தொடர்பு எண் : 050 51 96 433

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *