செரிமானத்திற்கும் உடல் நலத்திற்கும் முக்கியப் பங்கு உண்டு. செரிமானத்தில் பாதிப்பு ஏற்பட்டால் வயிற்றுவலியில் துவங்கி அடுத்தடுத்து பல வியாதிகள் பற்றிக் கொள்ளும்.
மருத்துவர்கள் கூறும் மற்றொரு விஷயம் என்னவென்றால், ஒரு மனிதனின் வயிற்றில் ஏராளமான கிருமிகள் வாழ்ந்து கொண்டு தான் இருக்கின்றன. அதற்கேற்ற தீணி போடும்போது அந்த நோய் வளர்ந்து நம்மைத் தாக்குகிறது. எனவே, நாம் உண்ணும் உணவும், அது செரிமானம் ஆவதும்தான் நமது உடல் ஆரோக்கியத்திற்கு அடிப்படையான விஷயங்கள் ஆகின்றன.
அதனால்தான் பெரும்பாலான வியாதிகள் வயிற்றில் ஏற்படும் கோளாறுகளால் வருகின்றன என்று மருத்துவர்கள் குறிப்பிடுகிறார்கள். எனவே செரிமானத்தைப் பற்றி மேலோட்டமாகவாவது தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.
பொதுவாக நாம் சாப்பிட்ட உணவு 3 முதல் 4 மணி நேரத்துக்குள் ஜீரணமாகிவிட வேண்டும். நாம் முதலில் சாப்பிட்ட உணவு ஜீரணமாகி பசி என்ற உணர்வு ஏற்பட்ட பிறகுதான் அடுத்த உணவை உண்ண வேண்டும்.
சாப்பிட்ட பின்பு அதிகமாக நீர் அருந்துவது நல்லது. ஆனால் சாப்பிடும் முன் நீர் அருந்துவது ஜீரண இயக்கத்தை கெடுத்துவிடும். நடுநடுவேயும் நீர் அருந்துவது கூடாது. ஆனால், பசி எடுத்த பிறகு, சாப்பிட இன்னும் சிறிது நேரமாகும் என்று தெரிந்தால் நீர் அருந்துவது வயிற்றைக் காப்பாற்றும் விதத்தில் அமையும்.
ஒவ்வொருவரும், தங்களது செரிமானத் திறனைப் பற்றி அறிந்திருக்க வேண்டாம். ஒரு சிலருக்கு சில உணவுப் பொருட்கள் செரிக்க நேரமாகும். அவைகளை உண்ணும்போது, அடுத்த உணவை நேரம் தாழ்த்தியே உண்ண வேண்டும்.
பொதுவாக நாம் சாப்பிட்ட உணவு 3 முதல் 4 மணி நேரத்துக்குள் ஜீரணமாகிவிட வேண்டும். அப்படி இருந்தால் நம் உடல் நல்ல நிலையில் இருக்கிறது என்று அர்த்தம்.
பரோட்டா போன்ற சில கடினமான உணவுகள் ஜீரணமாக கால தாமதம் ஆகலாம். பரோட்டா போன்ற உணவுகளை உண்டால் அதிகமாக நீர் அருந்த வேண்டியது ஜீரணத்திற்கு அவசியமாகிறது.
இயல்பாக நான்கரை மணி நேரம் அல்லது 5 மணி நேர இடைவெளிக்குப் பிறகே மீண்டும் பசிக்கத் தொடங்கினால் உடலின் ஜீரண உறுப்புகள் நல்ல நிலையில் செயல்படுகிறது எனலாம்.
இரவு உணவுக்கும், காலை உணவுக்குமான இடைவெளியானது சற்று வித்தியாசப்படும். இரவு உணவு உண்ட பிறகு வெகு நேரம் கழித்த அடுத்த உணவை உண்பதால், காலை உணவு சற்று எளிய உணவாக இருக்க வேண்டும் என்று கூறப்படுகிறது. காலையிலேயே, அசைவ உணவுகளை ஒரு பிடி பிடித்தால், வயிற்றின் செரிமாணத் திறன் வெகுவாக பாதிக்கும்.