கருமமே ……..

சிறுகதைகள்

-(ஷேக் சிந்தா மதார்)

அதிகாலை நாலரை மணிக்கு ‘·பஜர்’ தொழுகைக்காக வீட்டிலேயே ‘உளூ’ செய்துகொண்டு, நடுங்கும் குளிரையும் பொருட்படுத்தாமல் பள்ளிக்குப் புறப்பட்டார் முஸ்தபா.

தெருவிளக்குகள்  சரியாக எரியாத காரணத்தாலும் சமீபத்தில் பெய்த மழையாலும் ஓரிடத்தில் கால்தவறிச் சேற்றுக்குள்  விழுந்துவிட்டார்.

உடைகள் முழுக்கச் சேறாகிவிடவே, வீடு திரும்பி அவற்றை  மாற்றிக்கொண்டு மீண்டும் ‘உளூ’ செய்துகொண்டு புறப்பட்டார்.

அந்த இடத்தை மிகக் கவனமாகக் கடந்துவிட்டபோதிலும், சற்றுத் தள்ளி வேறொரு இடத்தில் அதேமாதிரிக் கால்தவறி  மீண்டும் சேற்றில் விழுந்துவிட்டார்.

திரும்பவும் வீடு சென்று உடைகளை மாற்றிக்கொண்டு, மிகவும் தாமதமாகிவிட்டதை உணர்ந்து அவசரமாகப் படியிறங்கியபோது, கையில் ‘லாந்தர்’ விளக்குடன் ஒரு பெரியவர் நின்றுகொண்டிருந்தார். “பள்ளிக்குத்தானே போறீங்க பாய்? வாங்க, நான் கூட்டிட்டுப் போறேன்” என்றவாறு முஸ்தபாவின் கையைப் பிடித்து அழைத்துச் சென்றார்.

ஜாக்கிரதையாக நடக்கும் கவனத்தில் எதுவும் பேசிக்கொள்ளாமல்  வந்த முஸ்தபா, பள்ளிவாசலை நெருங்கியதும், “நீங்க யாரு, தெரியலையே?” என்றார், அந்த முதியவரிடம்.

“நான்தான் ஷைத்தான்” என்று சிரித்தார் அவர்.

அதிர்ச்சியுடன்  நோக்கிய முஸ்தபாவிடம் அமைதியாகத்  தொடர்ந்தார் அவர். “உங்களைச் சேற்றிலே விழவச்சது நான்தான். ஆனா நீங்க திரும்பவும் வந்திட்டீங்க. ரண்டாவது தடவையும் விழச் செஞ்சேன். அப்படியும் விடாமே நீங்க மூணாவது தடவையும் வந்திட்டீங்க. முதல் தடவை சேற்றிலே விழுந்திட்டு நீங்க திரும்பவும் கிளம்பினப்பவே அல்லாஹ் உங்க பாவங்களை மன்னிச்சிட்டான். மீண்டும் ஒருதடவை நீங்க புறப்பட்டதும் உங்க குடும்பத்தார் பாவங்களையும் மன்னிச்சிட்டான். இன்னோரு தடவையும் உங்களை விழவச்சு அதுக்கப்புறமும் நீங்க கிளம்பிட்டா, ஊர்க்காரங்க எல்லாரோட பாவங்களையும் மன்னிச்சிடப் போறானேன்னு பயந்துதான் நானே பத்திரமாக் கூட்டிட்டு வந்தேன்” என்றவாறே நடக்கத் தொடங்கினார் அவர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *