-கமால்-
”நள்ளிரவில் பெற்றோம் – இன்னும்
விடியவில்லை” என்றான் கவிஞனொருவன்
வெள்ளையர்கள் போய்விட்டார்கள் காந்தி
கொள்ளையர்கள் போகவில்லையே எப்போது
சாந்தி
பாருக்குள்ளே நல்ல நாடு என்றான் பாரதி
இன்று நாடு முழுவதும் பார் (டியச) களை திறந்து
பாருக்குள்ளே பொல்லா நாடு என்றாக்கிவிட்டார்கள் எங்கள் சாரதி(கள்)
இந்திய குடிமக்கள் என்பதை –
எம் ஆட்சியாளர்கள் தவறாய்ப் புரிந்து கொண்டு
இந்தியர்களை ‘குடி’-மாக்களாக மாற்றிவிட்டார்கள்.
(ஏ)மாற்றிவிட்டார்கள்
பல இனங்களுக்குத் தலைவர்கள் இங்கே
மக்களைக் கூறுபோட்டும் –
இரத்த ஆறு ஓட்டும் இனத்தலைவர்களெல்லாம்
இனத்தலைவர்களா… இல்லை ஈனத்தலைவர்கள்
அரசியல்வாதிகளா இவர்கள்;- இல்லை
அரசியல்வியாதிகள்.
கூட்டணி அமைத்து ஆட்சியைப் பிடிக்க
கூத்தணி அமைக்கிறார்கள்
கூட்டணிகளா அவை இல்லை
கேட்டணிகள்
சாதிக்கொரு கட்சி
மதத்திற்கொரு கட்சி
இனத்திற்கொரு கட்சி
ஐயோ கொடிய காட்சி
அரசுயியல் தோற்றுப்போனதால்
நாடுமுழுக்க அரிசியியல் வந்துவிட்டது
ஓட்டுவங்கி வீழ்ந்து போனாதால்
காசு கொடுத்து செயிக்கும்
ஓட்டுவாங்கிகள் வந்துவிட்டனர்
சில செல்லாக்காசுகளெல்லாம் இங்கே
எம்எல்ஏ எம்பி ஆகி
சொல்லாக் காசுகளையும்
எல்லாக் காசுகளையும்
பொல்லாக் காசுகளையும்
நல்லா காசு பண்ணுகிறார்கள் காந்தி
எப்போது கிடைக்கும் சாந்தி
அய்ஏஎஸ் ஆக அதிகமதிகம் படிக்க வேண்டும்;
அமைச்சர் ஆக – அதிகமில்லை
ஐந்தோ அதற்கு குறைவோ போதும்
இந்தியா சனநாயக நாடு என்றார்கள்.
ளுழகெளே அடுத்த நாயகர்களாக ஆட்சிக்கு வருவதால் இந்தியா ளுழனெநாயக நாடு தான்.
ஊழல் செய்துவிட்டு ஒய்யாரமாகப் பவனி வருகிறான்
பதவியோடு அவனி வருகிறான்.
லஞ்சம் வாங்கிக்கொண்டு லஜ்ஜை இல்லாமல்
லாவகமாப் பேசுகிறேன்.
கமிஷன் வாங்கியதற்கு
கமிஷன் போடுகிறான்
அமெரிக்காவில் இரு கட்சி
சைனாவில் ஒரு கட்சி
இந்தியாவில் தான் எத்தனை கட்சி
அரசியலே இங்கே பெரும் காட்சி
விபசாரி கூட உடலைத் தான் விற்கிறாள்
எங்கள் அரசியல்வாதிகளில் சிலர்
உண்மையே விற்கிறார்கள.
ஊரை அடித்து உலையில் போடுவது – பழமொழி
எங்கள் அரசியல்வாதிகளில் சிலர்
இந்தியாவையே அடித்து ஸ்விஸ்ஸில் போடுகிறார்கள்.
பாட்டிலே எழுதினேன் படுபாவி இந்தியன் நான்
எழுந்து வா காந்தி இன்னொருமுறை
இன்னொரு சுதந்திரம் வேண்டும் கொள்ளையரிடமிருந்து
உன்னிடமிருக்கும் கண்டிப்பாக மருந்து.