ஒட்டுமொத்த உறவுகளையும்
சுருக்கி நினைவுகளாக இதயத்தில்
சுமந்து பாலைவனத்திற்கு வந்துவிட்டேன்
சிறைவாசியாக!
இறுக்கிப் பிடித்த
இதயம் மட்டும்
இரவினில் கொப்பளிக்கும் உறவுகளை எண்ணி!!
தனிமையில்
தலையணை மட்டுமே துணையாக!
ஈரம் காத்துக் கொண்டிருக்கும் கண்கள்
தூரத்தில் உள்ள உறவுகளை எண்ணி!!
ஆறுதலாக என்
அழுகை சப்தம் மட்டும்
சப்தமே இல்லாமல்!!
குரல்களில் மட்டுமே
குடும்பம் நடத்தும் கொடுமை!!
கட்டிய மனைவியும்
தொட்டிலில் குழந்தையும்!
நடக்க ஆரம்பித்துவிட்டான் என்பதையே
நடுவில் ஒருவர் கூற;
நனைந்த கண்களை துடைத்துவிட்டு
சிரிக்க மட்டுமே முடிந்தது!!
மெல்லிய உதடுகளை
ஈரம் கொண்டிருக்கும் எச்சிலின் உதறலோடு
தட்டிய கைகளோடு ஒரு முறை சொன்னான் அத்தா என்று!
அணைத்து முத்தமிட்டேன் கைபேசியை!!!
– யாசர் அராஃபத்
itzyasa@gmail.com