மிகக்குறுகிய காலப் பயணத்தில் துபை வந்திருந்த முதுகுளத்தூர் திடல் பள்ளிவாசல் முஸ்லிம் ஜமாஅத் தலைவரும், முதுகுளத்தூர் & கமுதி வட்டார ஜமாஅத்துல் உலமா சபைச் செயலாளருமான முதுவைக் கவிஞர், மவ்லவி ஹாஜி உமர் ஜஹ்பர் ஆலிம் பாஜில் மன்பயீ அவர்கள் 30.05.2009 சனிக்கிழமை மாலை துபையிலிருந்து தாயகம் புறப்பட்டார். புறப்படும்போது அவர் அளித்த அறிக்கையில் தான் மன நிறைவுடன் தாயகம் திரும்புவதாக குறிப்பிட்டிருக்கிறார்.
”14 நாட்கள் குறுகிய காலப் பயணத்தில் இலக்கிய நிகழ்வை ஒட்டி நான் துபை வந்திருந்தபோது தமிழ் இலக்கியத்திலும், சன்மார்க்க மேடைகளிலும், சமுதாய அக்கரையிலும் தமிழ் இஸ்லாமியப் பெருங்குடி மக்கள் துடிப்பான ஆர்வத்துடன் கலந்து சிறப்பிப்பதைக் கண்டு பெருமைப்படுகிறேன்.
”ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அனைத்து நிகழ்ச்சிகளிலும் தமிழ் இஸ்லாமியப் பெருங்குடி மக்கள் திரளாகக் கலந்து கொள்வதோடு நிகழ்ச்சி முடியும் இறுதி நேரம் வரை ஆர்வத்தோடும், அமைதியோடும் அமர்ந்திருக்கும் ஒழுக்கமும் அழகும் நல்ல பண்பாட்டை உணர்த்துகிறது. கருத்துச் சொல்லும் பெருமக்களும் இது மன உற்சாகத்தைத் தருகிறது.”
”குறிப்பாக முதுகுளத்தூர் – தேரிருவேலி முஸ்லிம் ஜமாஅத்தார்கள் குடும்பத்தோடு வருகை தந்து குதூகலத்துடன் மனம் மகிழ்ந்து செல்வதைக் காணும் போது உண்மையிலேயே மனம் நெகிழ்ச்சி அடைகிறது.”
”மஸ்ஜிதுகளில் ஆனாலும், அரங்கங்களில் ஆனாலும் சந்திப்பு நிகழ்ச்சிகளில் ஆனாலும் வெகுதூரத்திலிருந்து மக்கள் வந்து கலந்து கொள்வது நல்லதொரு முன்னேற்றத்திற்கு அறிகுறியாகும்.”
சமுதாயக் கவிஞர் என்ற பொருளில் “ஷாயிருல் மில்லத்” என்ற விருதை முதுகுளத்தூர் – ஐக்கிய அரபு அமீரக ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் எனக்கு அளித்து கவ்ரவித்தது அவர்களின் பெருமனதையும், என் மீதுள்ள பாசத்தையும் எடுத்துக் காட்டுகிறது. மென்மேலும் இந்த உயர்வும் ஒற்றுமையும் ஏற்றம் பெற வேண்டும் என இதயம் குளிர்ந்த நன்றியுடன் இறைவனை வேண்டுகிறேன்.
எனக்கு இந்த உற்சாக வரவேற்புகளை அளித்த முதுகுளத்தூர், தேரிருவேலி, கீழக்கரை, திட்டச்சேரி மற்றும் அனைத்துப் பிரமுகர்களுக்கும் என் உளக்குளிர்ச்சியான நன்றியைக் காணிக்கை ஆக்குகிறேன்.
எனக்கு இந்த நல்ல வாய்ப்பினை ஏற்படுத்தித்தந்த வல்ல அல்லாஹ்வுக்கும், ஐக்கிய அரபு அமீரக ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத்தினருக்கும் நன்றி கூறுகிறேன்.
அமீரக முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத்தார்களின் தூய சேவையை அல்லாஹ் கபூல் செய்து மேலும் பல உயர்வுகளையும், குறைவில்லாச் செல்வத்தையும் அருள துஆச் செய்கிறேன்.
மன நிறைவுடன் தாயகம் திரும்புகிறேன்.
அனைவருக்கும் நன்றி ‘அஸ்ஸலாமு அலைக்கும்’
இவ்வாறு அவர் தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.