உறக்கமிழந்த
அதிகாலையில்
உற்சாகம் வந்து
தொற்றிக் கொள்ள…
ஒருங்கிணைய மறுக்கும்
உள் மணசு..!
ஒற்றை இரவில்
ஏதோ ஒன்று
தொலைந்து கிடைத்த
குதூகலத்தில்
புத்துணர்வு..!
சாய்ந்த ஒன்றை நிமிர்த்தி
நிலை நாட்ட
சபதங்களும்
லட்சியங்களுமாய்
புதுப்பிக்கப் படும் பதிவான
தீர்மாணங்கள்..!
பிரிக்கப்பட்ட
புது டைரியின்
மோகங்களால்…
நாட்குறிப்பில் ஏற்றப் படாத
எத்தனையோ
மலர்ந்த
உதிர்ந்த நிகழ்வுகளிருக்க…
எழுதப்பட்ட ஐந்தோ
ஆறோ பக்கங்களோடு
’பழையன’ என
வீசப்படும்
சென்ற ஆண்டு டைரிகள்..!
பரவசத்தில்
துள்ளியோடும்
எண்ண அலைகளை
தடுத்து நிறுத்தி…
இன்னும்
நீ சந்திக்கப் போகும்
புத்தாண்டுகள்தான்
எத்தனை..?
சந்தித்த ஆண்டுகளில்
சாதித்தவைதான்
என்னென்ன?
அடுக்கடுக்காய்
மனம் தொடுக்கும்
கேள்விக்கணைகளை
அலட்சித்து…
தொலைத்துவிட்ட
வாழ்க்கையின் நகலுமாய்…
காணா தூரத்தில்
இல்லா ஒன்றைத் தேடி
நீள்கிறது
நம்
எண்ணத் தொலைவுகள்!
வசந்தவாசல் அ.சலீம் பாஷா
vasanthavaasal@yahoo.com