திலங்கிய மரபுகள்
மங்குகிறதே!
தெய்வீக கலாசாரம்
கசங்குகிறதே!
பெண்களே… நாம்
எங்கிருந்து கற்றோம்!
விழி திறந்தே
மதியுறங்கி…
வழி தெரிந்தே – புதை
குழியிறங்க…
கண்களே… நாம்
எங்கிருந்துகற்றோம்!
கொலுசொலியோ சலசலக்க…
உதட்டுச் சாயம் செஞ்சிவக்க…
முகங்களெல்லாம் மினுமினுக்க…
நகங்கள் கூட பளபளக்க
பூமியே கிடுகிடுக்க,
பாவியாய் நடக்கின்றோம்!
முகப் பூச்சும் நகப் பூச்சும்
நமக்கெதற்கு கண்ணியரே…
இது தொடர்ந்தால் இறைவனிடம்
நாமெல்லாம் அந்நியரே…!
மறையை மறந்து
திரையில் குதிக்க…
மங்கையரே…! நாம்
எங்கிருந்து கற்றோம்!
காலைக் கதிர் கண்டதில்லை…
பஜ்ர் தொழுதே பழக்கமில்லை…
நடு நிசிவரை தொலைக்காட்சி
தொடர் எதையும் விடுவதில்லை…!
பள்ளி செல்லும் நம் பிள்ளைகளின்
கல்வி நிலை அறிவதில்லை…
மார்க்கங்களை கற்றுத்தர
மணமிருந்தும் நேரமில்லை!
ஒளியிருந்தும் இருளில் மூழ்க…
அன்னையரே…! நாம்
எங்கிருந்து கற்றோம்!
ராகமாய் குரலெடுத்து
ரம்யமாய் தலைசாய்த்து
குர்ஆனை ஓதிட்ட
காலங்கள் போயாச்சு…
சிடியும் வாக்மேனும்
செவியில் நாம் பொருத்திட்டு
ஓலங்கள் கேட்பதே
வாழ்வென ஆயாச்சு…!
விண்ணோங்கி பறந்திட்ட – நம்
மரபெல்லாம் மண்ணாச்சு…
பொன்னென மின்னிய – நம்
பெண்ணினமோ முரணாச்சு!
வெகுமதியை உதறிவிட்டு
சகதியில் நாம் புரள்வதற்கு
மெல்லினமே…! நாம்
எங்கிருந்து கற்றோம்!
போனவரை போகட்டும்…
பொன்னாள் இனியாகட்டும்!
புதுப்பொலிவோ புலரட்டும் – இனி
பொற்காலம் தொடரட்டும்!
இறை வேதம் மனம் ஏற்போம்!
இறைஞ்சியே அருள் கேட்போம்!!
மறை ஓதி கறை கலைவோம்!!!
ஒளி தூவும் மதியாவோம்!!!!
வசந்தவாசல் அ.சலீம் பாஷா – துபாய்.