புல்லென்று நினைத்தனையோ
பூட்ஸ் காலால் நீ மிதிக்க?
கல்லென்று கருதினையோ
காலமெல்லாம் நிலங்கிடக்க?
பொல்லாத சூழ்ச்சியினால்
புனித பூமி அபகரித்த
புல்லியனே உனக்கெதற்கு
புறாக்களின் சின்னமினி?
வல்லமைகள் உண்டென நீ
வாய்ச் சவடால் அடித்தபோதும்
கல்லெறியும் சிறார் முன்னே
கால்தூசாய்ப் பறந்தனையே!
வில்லத்தனம் புரியுமுந்தன்
வீண்செயலை உலகறியும்
நில்லொருநாள் மீண்டு(ம்) வரும்
நீணிலமே திரண்டு எழும்
அன்றைய நாள் உன்கொட்டம்
அடங்கிவிடும் பார்த்திரு நீ
வன்முறையின் வல்லரசுன்
வலியொடுங்கும் காத்திரு நீ
நன்றிகொன்ற உன்செயற்காய்
நனிவருந்தப் போகின்றாய்
ஒன்றியெழும் பேரலைமுன்
ஒருதுரும்பாய் நீயாவாய்!
ஆக்கம்: லறீனா அப்துல் ஹக்
ahlareena@yahoo.com