அவர்கள்…
என் விழிகளின் ஒளியினை
அபகரித்த பொழுதிலும்
நான் மௌனித்திருந்தேன்.
நரம்பிடைக் குருதியை
உறிஞ்சிய போழ்திலும் -நான்
தலை கவிழ்ந்தே இருந்தேன்.
பரம்பரை வீட்டின்
கூரை கழற்றி, சுவர்கள் சிதைத்து
தோட்டத்தில் வளர்ந்த
திராட்சைக் கொடிகளை, ஜைத்தூன் மரங்களை
அறுத்தனர் தரித்தனர்
பொறுத்தே இருந்தேன்.
என்றாலும் இனி…
மௌனத்தை மௌனித்தும்
பொறுமையைப் பொறுத்தும்
இருக்குமாறு நான் பணித்துவிட்டேன்.
கவிழ்ந்த சிரசினை
சிலிர்த்து நிமிர்த்தினேன்!
தாயே! பலஸ்தீனே!
விழியின் ஒளியினும்
நரம்பிடைக் குருதியினும்
ஐசுவரியங்கள் அனைத்திலும் மேலாய்
நீதான் எந்தன் காதலுக்குரியவள்
நீயே உயிர்க்கு மிக உவப்பானவள்
உன்னை அரக்கர்கள்
அழிக்கின்ற வேளையில்
வாளாவிருந்திடல் இனிமுடியாது.
என்னுள் உறையும்
சீற்றமே எழுக!
என் மண் மீதான
காதலே பெருகுக!
காதலும் சீற்றமும்
கலந்தே வெறியரை
துவம்சம் செய்திடும்
புயலென மாறுக!
இனியென் மண்ணில்
வீசுக புயலே!
விடுதலை பிறந்திட
வீசுக புயலே!