பிரிவு

கவிதைகள் (All)

வாழ்வின் விடியலை
நோக்கி
விரைந்திட்ட நாங்கள்
இன்று
கும்மிருளில்
சிக்கி தவித்தபடி…

வசந்தத்தின் வருகையை
நாடி
பறந்திட்ட நாங்கள்
இன்று
வழியில்
நிம்மதியை தொலைத்தபடி…

பிரிவின் துக்கத்தில்
வேதனையின் விளிம்பில்
வீழ்ச்சி என்றறிந்தும்
வெற்றியாய் தொடர்கிறது
எங்கள் வாழ்க்கைப் பயணம்…

நஞ்சென்று நெஞ்சுணர்ந்தும்
தீயென்று சுயமறிந்தும்
நலமென்று நகர்கின்றோம்
நாடோடிக் கும்பலாய்…

கரையை எட்டிப்பிடித்துத்
தொட்டு விளையாடும்
கடலலைகளையும்
கடந்து…
எம்பி எம்பி
எண்ணிய எலக்கை
எட்ட இயலாத
எங்கள் உணர்வலைகள்…

மாக் கோலத்தில்
புன்னகைக்கும்
மகரந்தம் உலர்ந்த
மலர்களை போல
வசந்தமிழந்த
வரண்ட வாழ்க்கையில்
விரக்தியை சுவாசித்து
வெறுமனே பூத்திருக்கிறோம்..!

தினம் தினம்
கானல் நீரில்
கனவு தோணியில்
காலத்தை கடக்கிறோம்
கசங்கிப்போன
காகிதப் பூக்களாய்…

ஒவ்வொரு முறையும்
நாடு செல்ல நாள் குறித்து
மெல்ல நகரும் பொழுதை
விறைவு மெயிலேற்றி
வேகம் கடத்த நினைக்கிறோம்
விமான வேகத்தில்
பறந்து மறையும்
வாலிபத்தை உணராமலே!

மணக் கோலம் கண்ட
மலர் மாலை வாடும்
முன்னே
மணையாளின்
மனதறியக்கூட
வாய்ப்பில்லாது
விடைப்பெறச் செய்யும்
விடுமுறை நாட்கள்….

பிஞ்சு இதழசைத்து
கொஞ்சு மொழி பேசி
கேட்டறிந்து அறிமுகமாகும்
கேளிக்கை உறவுகளாய்
பெற்ற குழந்தைகள்..

பெற்று போற்றி
உயிர் காத்து வளர்த்திட்ட
அன்னைக்கு
இறுதிக் கடமையைக் கூட
முழுதாய் செய்ய இயலாத
இழி நிலை அவகாசம்…

பொருள் திரட்ட
சுகமிழந்து
சுதந்திரமிழந்து
பிரிவின் பிடியில்
சூனியமாய் கழிந்தது
பாதி வாழ்க்கை!

வறண்டு போன
வசந்தத்தின் வடிகாலில்
ஆயுளின் கடைசி அத்தியாயமாய்
அல்லாடும்
மீதி வாழ்க்கை!

’சிறை வாழ்க்கை
இனி வேண்டாம்’  எனக் கருதி
சிலிர்த்திடும் சிறகுகளை
கத்தரித்துக்
கட்டிப் போடும்
எண்ணற்ற கடமைகள்…

சுருங்கச் சொன்னால்…
குடும்ப தொடர்பருந்த
நாங்கள்…
’’உள்ளுக்குள் உணர்வுகளை எரித்து
வெளியே பிரகாசிக்கிறோம்’’
ஒரு வரி கவிதையாய்!

வசந்தவாசல்
அ.சலீம் பாஷா.துபாய்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *