விடியலுக்கு காத்திருப்போம்!

கட்டுரைகள்

( வழக்கறிஞர் வெ. ஜீவகிரிதரன்
மாநில வழக்கறிஞர் அணி அமைப்பாளர்
தமிழ் மாநில இந்திய யூனியன் முஸ்லிம் லீக்
9444114208 )

கடந்த வெள்ளிக்கிழமை விடியலில் சூரியன் உதித்த போது இந்த பூவுலகம் முழுவதுமே அமைதிப் பூங்காவாக  மாறிப் போனது கண்டு வியந்து போனது. நாடுக ளிடையே எல்லைக் கோடுகள் அழிந்து போயிருந்தன. ராணுவ டாங்கிகள் பொதி சுமக்கும் கழுதைகள் போல பொருட்களை ஏற்றிச் செல்லும் வண்டிகளாக மாறி விட்டது. துப்பாக்கிகளை உருக்கி எடுத்த இரும்பில் பாலங்கள் கட்டப்பட்டிருந்தன. மதம், இனம், மொழி, தேசம் என்ற வேறுபாடுகள் மறந்து மக்கள் சகோதரர்களாக ஒருவரை ஒருவர் ஆரத் தழுவியவாறு, வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டு மகிழ்ச்சியில் துள்ளித்திரிந்தன்ர.  நதிகளிளெல்லாம் பாலும், தேனும் பெருக்கெடுத்து ஓடின. பசி, பஞ்சம், பட்டினி, வறுமை, ஊழல், அடக்குமுறை, அதிகாரம், ஆக்கிரமிப்பு என்ற வார்த்தைகளெல்லாம் எல்லா மொழிகளின் அகராதிகளி லிருந்தும் சட்டென மறைந்து போயிருந்தன.

இந்த பூவுலகம் மாயாலோகமாகிப் போனதன் காரணம் என்ன தெரியுமா? உலக சாவு வியாபாரி அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் அதிபர் பராக் ஒபாமா அவர்கள் உலக சமாதானத்திற்காக உழைத்ததற்காக உலகின் மிக உயர்ந்த விருதான `நோபல் சமாதான பரிசு’ – கடந்த வெள்ளிக்கிழம அவருக்கு அறிவிக்கப்பட்டது தான் காரணம். உலக அமைதிக்கான நோபல் பரிசு அமெரிக்க அதிபருக்கு தரப்பட்டால், பூவுலகம் மாயாலோகமாக மாறிப் போகும்.

இந்த சாவு வியாபாரிக்கு உலக சமாதான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது குறித்து உலகத்தின் அனைத்து தரப்பிலிருந்தும் விமர்சனங்கள், சந்தேகங்கள், கண்டனங்கள், எதிர்ப்புக் குரல்கள் நாள்தோறும் ஊடகங்களில் காண்கிறோம். பராக் ஒபாமா இவ் விருதுக்கு தகுதியானவரா என பார்ப்பதற்கு முன்னர் இவ் விருதை தருகின்ற `நோபல்’ அமைப்பு பற்றிய சில உண்மைகளை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

இந்த நோபல் பரிசை தருவது `நோபல் பவுண்டேசன்’ – என்ற சுவீடன் நாட்டைச் சேர்ந்த ஒரு அமைப்பாகும். இந்த அமைப்பு 1900-வது ஆண்டில் ஆல்பிரட் நோபல் என்பவரின் உயில் சாசனத்தின்படி ஏற்படுத்தப்பட்டது.  ஆல்பிரட் நோபல் என்பவர் பல கோடிக்கணக்கான தன் சொத்துக்களை இந்த `நோபல் பவுண்டேஷன்’க்காக  எழுதி வைத்துள்ளார். அந்த சொத்துக்களிலிருந்து வருகின்ற வருமானத்தைக் கொண்டு ஒவ்வொரு ஆண்டும் இயற்பியல், வேதியியல், மருத்துவம், இலக்கி யம், பொருளாதாரம் மற்றும் சமாதானம் ஆகிய துறைகளில் மிகச் சிறந்த சேவை செய்தவர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு அந்தந்த துறைக்கான `நோபல் பரிசு’ வழங்கப்படும்.

பரிசு வழங்குவது `நோபல் பவுண்டேஷன்’ என்ற அமைப்பாக இருந்தபோதிலும் பரிசுக்குரியவர்களை அது தேர்ந்தெடுப்பதில்லை. ’தி ராயல் ஸ்வீடிஷ் அகாதெமி ஆப் சயின்சஸ்’ – என்ற அமைப்பு இயற்பியல், வேதியி யல் மற்றும் பொருளாதாரத் துறையில் பரிசுக்குரிய வர்களைத் தேர்வு செய்யும். கரோலின்ஸ்கா இன்ஸ்டி டியூட்டில் உள்ள `தி நோபல் அசெம்பிளி’ – என்ற அமைப்பு மருத்துவத் துறையிலும் `தி சுவீடிஷ் அகாதெமி’ – என்ற அமைப்பு இலக்கியத் துறையிலும் பரிசுக்குரியவர் களை தேர்ந்தெடுக்கும். அமைதிக்கான பரிசுக்குரியவரை மட்டும் நார்வே பாராளுமன்றத்தால்  தேர்ந்தெடுக்கப் பட்டு அமைக்கப்பட்ட ஐவர் குழு முடிவு செய்யும்.

நோபல் பவுண்டேஷனை ஏற்படுத்திய ஆல்பிரட் நோபல் இதற்காக பல கோடிக்கணக்கான சொத்துக் களை தந்துள்ளாரே. அவர் மிகப் பெரிய செல்வந்தர் குடும்பத்தில் பிறந்தவரா? இல்லையெனில் இந்த சொத்துக்களெல்லாம் அவருக்கு எப்படி வந்தது?

ஆல்பிரட் நோபல் 1833-ம் வருடம் சுவீடன் நாட்டி லுள்ள ஸ்டாக்ஹோம் என்ற நகரத்தில் இம்மானுவேல் நோபல் என்பவரின் மகனாகப் பிறந்தார். அவர் பிறந்த நேரம் அவருடைய தந்தையின் வியாபார நிறுவனம் நொடிந்து திவாலாகிப் போனது. எனவே நோபலின் தந்தை ரஷ்யாவின் பீட்டர்ஸ்பர்க் என்ற நகருக்கு சென்று அங்கே ஒரு சிறிய பட்டறையை ஆரம்பித்தார். 1842-ல் தன் குடும்பத்தினரையும் தன்னோடு சேர்த்துக் கொண்டார். அதன்பின் தன்னுடைய 17-வது வயதில் ஆல்பிரட் நோபல் பாரிஸ் நகரின் ஒரு ஆய்வுக்கூடத்திலே பணிக்கு சேர்ந்தார். பின்னர் தன் தந்தையின் பட்டறை யிலேயே பணிக்கு சேர்ந்தார். இந்தப் பட்டறையில் முக்கியமாக ஆயுதங்கள் உற்பத்தி செய்யப்பட்டன. 1853 லிருந்து 1856 வரை `கிரிமியன் போர்’ – நடைபெற்ற காலத்தில் ரஷ்ய ராணுவத்திற்கு ஆயுத சப்ளை செய்த வகையில் நோபல் நிறுவனம் நல்ல வளர்ச்சியடைந்தது. பின்னர் போர் முடிந்து விட்டதால் வியாபாரம் மந்தமாகி மீண்டும் நோபல் கம்பெனி திவாலாகி விட்டது. ஏதேனும் ஒரு வழியில் வியாபாரத்தை மீண்டும் தூக்கி நிறுத்த நோபல் முயற்சி செய்து கொண்டிருந்தபோதுதான் அவருடைய இரசாயனத் துறை ஆசிரியர் நிக்கொலா ஜெனின் நோபலுக்கு `நைட்ரோ கிளிசரின்’ என்ற இரசாயனம் பற்றி எடுத்துச் சொன்னார்.

1862-ல் நோபல் நைட்ரோகிளிசரின் மூலமாக வெடி மருந்து தயார் செய்து அதன் மூலம் `டிடோனேட்டர்’ என்ற வெடிகுண்டை கண்டு பிடித்தார்.  1863-ல் நைட்ரோகிளிசரின் வெடிமருந்துக்கான காப்புரிமையை  பெற்றார். 1865-ல் ஜெர்மனியிலும், 1866-ல் அமெரிக்கா விலும் தன்னுடைய வெடிமருந்து தொழிற்சாலையை ஆரம்பித்தவர் அதே ஆண்டில் `டைனமைட்’ என்ற சக்தி வாய்ந்த வெடிகுண்டை வடிவமைத்தார். ரஷ்யா, சுவீடன், ஜெர்மனி, அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ்,  இத்தாலி ஆகிய நாடுகளிலெல்லாம் தன் தொழிற் சாலைகளை ஆரம்பித்து ஆயுதங்களையும், வெடி மருந்துகளையும் தயாரித்து பல ஆயிரம் கோடிகளை சம்பாதித்தார்.  1887-ல் மிகச் சக்தி வாய்ந்த வெடிமருந் தான `பாலிஸ்டைட்’ – என்ற வெடிமருந்தை கண்டு பிடித்து அதற்கு காப்புரிமையும் பெற்றார். 1894-ல் போபர்ஸ் நிறுவனத்தை விலைக்கு வாங்கினார்.  இந்த போபர்ஸ் நிறுவனம் உலகளவிலே மிகப் பெரிய ஆயுத உற்பத்தி செய்யும் நிறுவனம் ஆகும்.

ஆயுதங்கள், வெடிபொருட்கள், வெடிகுண்டுகள் என்பவை ராணுவம், தீவிரவாதிகள், பயங்கரவாதிகள் என யார் கையில் இருந்தாலும், யாரால் உபயோகப் படுத்தப்பட்டாலும் அதனால் மடிவது மக்களே. மனித குலத்துக்கு எதிரான, மனிதநேயத்துக்கு எதிரான, மனி மாண்புகளுக்கு எதிரான படுகொலைப் பாதகங்களை செய்வது இந்த ஆயுதங்கள் தான். உலகில் பல கோடி மனித உயிர்களை கொன்று குவித்து, அந்த அழுகிப் போன பிணங்களை தோண்டி எடுத்து பிழிந்து பெற்றது தான் நோபல் நிறுவனத்தின் பல கோடி சொத்தக்கள். இந்த பிண வாடை வீசும் சொத்துக்கள் தான் நோபல் பரிசு தர உபயோகப்படுத்தப்படுகிறது. பிண வாடை வீசும் அந்த கரங்கள், இரத்தக் கறைகள் கொண்ட கரங்கள், பிணக் குவியலின் மீதேறி இன்று தருகின்ற `உலக சமாதானத்துக்கான நோபல் பரிசை’ பெறுவது யார்? அமெரிக்க அதிபர்.

உலகம்  முழுவதும் தன் கட்டுப்பாட்டிற்குள் வர வேண்டுமென்பதற்காக பல்வேறு நவீன ஆயுதங்களை தன்னிடம் குவித்து வைத்திருக்கும் அமெரிக்க ஏகாதிபத்தியம் உலக நாடுகள் ஒற்றுமையுடன் இருப்பதை விரும்புவதேயில்லை. இரு நாடுகளுக்கிடை யில் பிரச்சினைகளை தானே உருவாக்கிவிட்டு, அவை போரில் இறங்குமளவிற்கு நிலைமையை தீவிரப்படுத்தி விட்டு, பின்னர் இரு நாடுகளுக்கும் ஆயுத சப்ளை செய்வது, அதையும் வியாபார தர்மம் எனக் கூறிக் கொள்வது போன்ற கேடு கெட்ட செயல்களை செய்யும் நாடுதான் அமெரிக்கா. உலகின் எந்த மூலையில் இயற்கை வளங்கள் இருந்தாலும் அதைக் கொள்ளை  யடிக்க முயல்வது, பல லட்சம் மக்களை கொன்று குவித்தாவது அந்த செல்வங்களை கொள்ளையடித்து வருவது என்பதுதான் அமெரிக்காவின் கொள்கை. இஸ்ரேல் என்ற வேட்டை நாயை வளர்த்து விட்டு அப்பாவி பலஸ்தீனர்களை ஆயிரக்கணக்கில் கொன்று  குவிப்பது இன்றும் தொடர்கிறது. பெட்ரோலிய வளங்களை கொள்ளையடிப்பதற்காகவே வளைகுடா நாடுகளுக்கிடையில் படையை உருவாக்கி ஒன்றோ டொன்று மோதிக் கொள்ள வைத்து, இரு தரப்பிற்கும் ஆயுத சப்பையும் செய்கின்ற நாடுதான் அமெரிக்கா. ஈராக்கில் எண்ணெய் கிணறுகளுக்காகவே அந்த நாட்டின் மீது ஒரு ஆக்கிரப்பு போரை நடத்தி பல லட்சம் அப்பாவி மக்களைக் கொன்றதோடல்லாமல் அந்த நாட்டின் அதிபர் சதாம் உசேன் அவர்களையும் அவசரமாக தூக்கிலேற்றி படுகொலை செய்தது அமெரிக்கா.

இரட்டை கோபுரத் தாக்குதலை காரணமாக்கி, `இஸ்லாமிய பயங்கரவாதம்’  என்ற ஒரு புதிய ஆயுதத்தை கையிலெடுத்து உலகின் முஸ்லிம் மக்களெல்லாம் பயங்கரவாதிகள் தானோ என்ற அச்சத்தையும, ஐயப்பாட்டையும் மக்கள் மனதில் திணித்து தான் செய்யும் படுகொலைகளையெல்லாம் `பயங்கரவாதத்துக்கு எதிரான போர்’ – என நாமகரணம் சூட்டி நியாயப்படுத்துகிறது அமெரிக்கா. கியூபாவில் குவெண்டனாமோ என்ற சிறு தீவில் அமெரிக்கா அமைத்துள்ள சித்திரவதை முகாமில் நடைபெற்ற ஈவிரக்கமற்ற, மனிதத் தன்மையற்ற, மிருகத்தனமான சித்ரவதைக் காட்சிகள் வெளியே கசிந்து ஊடகங்களில் ஒளிபரப்பப்பட்டபோது அதைக் கண்டு உலகமே பதை பதைத்தது. மக்களின் பார்வைக்கு மறைக்கப்பட்ட இதுபோன்ற நூற்றுக்கணக்கான சித்ரவதை முகாம்களில் இன்றைக்கும் அமெரிக்க ஏகாதிபத்திய எதிர்ப்பாளர்கள் விசாரணை என்ற பெயரில் கொடும் சித்ரவதைகளுக்கு ஆளாக்கப்படுகின்றனர்.

ஆப்கனிஸ்தானில் அமெரிக்க படைகளின் அத்துமீறல் களும், அடாவடித்தனங்களும் உலகின் எதிர்ப்பை சந்தித்து வருகிறது. சமீபத்தில் ஈரான் அணு ஆயுத உற்பத்தியில் ஈடுபடுவதாகக் கூறி அதன் மீது படையெடுக்கப் போவதாக மிரட்டிக் கொண்டிருக்கிறது அமெரிக்கா. ஈரான் அணு ஆயுதம் தயாரிப்பதல்ல அமெரிக்காவின் கவலை. ஈரானின் பூமிக்கடியில் புதைந்து கிடக்கும் அபரிமிதமான எண்ணெய் வளத்தை கொள்ளையடிப்பதே அதன் நோக்கம். சதாம் உசேன் பேரழிவு ஆயுதங்களை ஏராளமாக குவித்து வைத்துள்ளார் என்று குற்றம் சாட்டி ஈராக் மீது போர் தொடுத்த அமெரிக்கா இன்று அப்படிப்பட்ட ஆயுதங்கள் ஈராக்கில் இல்லை என்பதை தவிர்க்க இயலாமல் ஒத்துக் கொண்டுள்ளது. ஆனாலும், பல லட்சம் ஈராக்கியர்களை கொன்றொழித்து விட்டு இன்று அனைத்து பெட்ரோல் கிணறுகளையும் தன் வசமாக்கிக் கொண்டது.

இப்படிப்பட்ட சாவு வியாபாரியான அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் அதிபருக்குதான் ’உலக சமாதான நோபல் பரிசு’ அறிவிக்கப்பட்டுள்ளது. ஒபாமா அப்படியென்ன சாதித்து விட்டார்?

இந்த விருதுக்கானவர்களை தேர்ந்தெடுக்கும் தேர்வுக் குழுத் தலைவர் நோர்ப் குஜார்ன் ஜக்லாண்ட் கூறும் போது, `சர்வதேச அளவிலே மக்களுக்கிடையிலும், அரசுகளுக்கிடையிலும் நல்லிணக்கத்தை உருவாக்கும் முயற்சியை ஒபாமா தொடங்கியுள்ளார்’ – என்கிறார். `இது ஒபாமா சாதித்த செயல்களுக்கானதல்ல. அவருடைய முயற்சிகளுக்கு உற்சாகம் கொடுப்பதற்காக தரப்படுகிறது’ – என்கிறது தேர்வுக்குழு.

ஒபாமா அப்படி என்ன முயற்சிகளை செய்துள்ளார்? குவாண்டனாமோ சித்ரவதைக் கூடத்தை இழுத்து மூடப் போவதாக கூறியுள்ளார். இதுவரை அது மூடப்பட வில்லை. மேலும், இதுபோன்ற நூற்றுக்கணக்கான சித்திரவதை முகாம்கள் ரகசியமாக இன்றைக்கும் நடத்தப்படுகின்றன.

ஈராக்  போரை முடிவுக்கு கொண்டு வந்து, அங்கிருக்கும் அமெரிக்க துருப்புகளை வாபஸ்  பெற்றுக் கொள்வதாக அறிவித்துள்ளார். இன்றுவரை அமெரிக்க துருப்புகள் அங்கேயே நிலை கொண்டுள்ளன. துருப்புகளை வாபஸ் பெறுவது இருக்கட்டும். ஈராக்கின் எண்ணெய் கிணறுகளிலிருந்து வெளியேற அமெரிக்கா தயாரா?

ஈரானுடன் மோதல் போக்கை கைவிட்டு பேச்சு வார்த்தைகள் மூலம் பிரச்சினையை தீர்க்க முடிவு செய்துள்ளதாக கூறுகிறார். மத்தியக் கிழக்கு நாடுகளில் அமைதி நிலவ வேண்டும் என கெய்ரோவில் எழுச்சிகர மான உரையை படித்தார். ஆப்கனிஸ்தானில் போரை நிறுத்துவதாக அறிவிக்கிறார். இவையெல்லாம் வெறும் வார்த்தை ஜாலங்கள்தான். ஏன் எனில் அமெரிக்க ராணுவ தலைமை ஆப்கனிஸ்தானில் இதுவரை இல்லாத அளவுக்கு புதிய நூதன முறைகளில் தம்முடைய பலத்தை பிரயோகிக்கப் போவதாக அறிவித்துள்ளது. மத்திய கிழக்கு நாடுகளில் அமைதி, சமாதானம் பற்றி பேசும் ஒபாமா பலஸ்தீனத்தின் மீதான இஸ்ரேல் தாக்குதல் பற்றி வாய் திறப்பதில்லை. சமீபத்திய இஸ்ரேல் தாக்குதலில் ஏற்பட்ட சேதங்கள் குறித்து ஆய்வு செய்த ஐ.நா. ஆய்வுக்குழு தலைவர் நீதிபதி ரிச்சர்ட் கோல்ட் ஸ்டோர் தன்னுடைய அறிக்கையில் இந்த ஆக்கிரமிப்பு போரில் இஸ்ரேலின் ராணுவமும, அரசியல் தலைமை யும் பல்வேறு போர்க் குற்றங்களை செய்திருப்பதாக கூறுகிறார். இந்த போர் குற்றவாளிகளை கண்டித்து இதுவரை ஒபாமா எந்த நடவடிக்கையும் எடுக்க துணிய வில்லை. ஒபாமா பதவியேற்ற புதிதில் இஸ்ரேல் ஆக்கிரமித்துள்ள பலஸ்தீன் பகுதிகளில் யூதர்களை குடியேற்றம் செய்வதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என கூறினார். ஆனால், இஸ்ரேல் அதை உடனடியாக நிராகரித்தது. ஒபாமா இஸ்ரேல் மீது எந்த நடவடிக்கை யும் எடுக்காமல் `அமைதி’ காத்தார். அதற்குதான் இந்த `அமைதி பரிசு’ போலும்.

ஈரானுடன் மோதல் போக்கை கைவிட்டு அமைதி பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினைகளை தீர்க்கப் போவதாக ஒபாமா கூறியிருப்பதை நோபல் தேர்வுக் குழு பாராட்டுகிறது. பேச்சுவார்த்தை பற்றி ஒபாமா பேசிக் கொண்டிருக்கும் போதே சந்தடியில்லாமல் ஈரான் மீதான மிகப் பெரிய தாக்குதலுக்கு அமெரிக்கா தயாராகிக் கொண்டிருக்கிறது என்பதும் உண்மை. ஈரானின் அணு உலைகள் மீதான தாக்குதலை தொடுக்க தேவையான `பங்கர் பஸ்டர்ஸ்’ எனப்படும் நிலத்தடியி லுள்ள கட்டிடங்களை தகர்க்கும் ஆயுதங்களை குவித்துக் கொள்வதற்கான அனுமதியை அமெரிக்க ராணுவம் அதிபரிடம் பெற்றுள்ளது. `பாலுக்கும் காவல் – பூனைக்கும் தோழன்’ – என்பதுதான் அமெரிக்காவின் தாரக மந்திரம்.

இந்த நேரத்தில் இந்திய நாட்டின் குடிமக்களாகிய நாம் ஒன்றை கவனத்தில் கொள்ள வேண்டும். அமைதி, சமாதானம் என்பது இந்தியாவின் நிரந்தரமான நிலைப்பாடு. இங்குள்ள பல்வேறு கலாச்சாரங்களும், மதங்களும் அதைத்தான் போதிக்கின்றன. உலகமே அண்ணாந்து பார்க்கும் உயரத்தை நாம் அடைந்தது `அகிம்சை’ – என்ற கொள்கையினை பேசிய போதுதான்.  பிரிட்டிஷ் காலனி ஆதிக்கத்தை எதிர்க்க அகிம்சை என்ற தத்துவத்தையே தன் ஆயுதமாக எடுத்தவர் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி. அதனாலேயே அவர் உலக மக்களால் `மகாத்மாகாந்தி’ – என அழைக்கப்பட்டார். 1937, 1938, 1939, 1947 மற்றும் 1948 ஆகிய வருடங்களில் மகாத்மா காந்திக்கு `உலக சமாதானத்திற்கான நோபல் பரிசு’ – வழங்க பரிந்துரைக்கப்பட்டது. 20-ம் நூற்றாண்டின் அகிம்சைக்கான சின்னமாக கருதப்பட்டவர் மகாத்மா காந்தி. ஆனால், அமைதிக்கான நோபல் பரிசு அவருக்கு தரப்படவேயில்லை. ஏன்? அப்படியெனில், இந் நோபல் பரிசு வழங்கப்படுவதில் ஏதேனும் உள்நோக்கங்கள் இருக்கிறதா?

நோபல் பரிசுக்கான பரிந்துரைகளை ஏற்க கடைசி நாள் 2009 ஜனவரி 31. ஒபாமா அமெரிக்க அதிபராக பதவியேற்றது 2009 ஜனவரி 20. பதவியேற்ற 12 நாட் களுக்குள்  அவருடைய பெயர் பரிந்துரை செய்யப்பட் டுள்ளது. 250-க்கும் மேற்பட்ட பரிந்துரைகளிலிருந்து ஒபாமாவின் பெயர் மட்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. டைனமைட், ஜெலட்டின், பாலிஸ்டைட் போன்ற பேரழிவு வெடிபொருட்கள், பேரழிவு ஆயுதங்களை தயாரித்து உலகெங்கும் விற்று பணமாக்கி பல ஆயிரம் கோடிகளை குவித்துள்ள நோபல் நிறுவனம் `அமைதி பரிசு’ வழங்க உலக நாடுகளிலெல்லாம் நாடுகளுக் கிடையில் பகைமையை மூட்டி, இரு தரப்புக்கும் ஆயுதங்களை சப்ளை செய்து, அவற்றை தம் ஆதிபத்தியத் தின் கீழ் கொண்டு வருவதும், உலகின் இயற்கை வளங்களை கொள்ளையடிப்பதும், எதிர்க்கும் நாடுகளை தன் ஆயுத பலத்தால் நிர்மூலமாக்குவதும், ஆயிரக்கணக் கான அணு ஆயுதங்களை தன்னிடம் குவித்து வைத்துக் கொண்டு, உலக நாடுகள் அணு ஆயுதங்களை தயாரிக்கக் கூடாது எனவும், `அணு ஆயுதம் அற்ற உலகைப் படைப்போம்’ – என உளறிக் கொண்டு திரிவது மாக உள்ள அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் அதிபர் `அமைதிப் பரிசை’ – பெற இந்த நாடகம் இனிதே அரங்கேறுகிறது. இந்த ஆயுத வியாபாரியும், உலக பேட்டை ரவுடியும் நடத்தும் இந்த நாடகத்தை மனித நேயம் கொண்ட உலக மக்கள் நம்பத் தயாராக இல்லை. மனித குலத்தின் நிணமும், சதையும் தின்று கொழுத்த இந்த சைவப்புலிகளை – சாத்தான்களை தோலுரிப்போம். இந்த சாவு வியாபாரிகள் இல்லாதொழியும் நாளே உலகம் முழுமைக்கும் அமைதி திரும்பும் நாள். சமாதானம், சகவாழ்வு, சகோதரத்துவம் மலரும் நாள். அந் நாள் எந்நாளோ?

விடியலுக்கு காத்திருப்போம்.

மின்னஞ்சல் :
jeevalawyer@rediffmail.com
lawyerjeeva@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *