என் இளைய மகன் அமெரிக்கா சென்ற போது குடிவரவு – அகல்வு அதிகாரிகள் அவரை சுமார் இரண்டு மணீ
நேரம் காக்க வைத்து விட்டு, பிறகு எதுவுமே கேட்காமல் நாட்டுக்குள் செல்ல அனுமதித்திருக்கிறார்கள்.
இது பசுமையாக நினைவில் இருக்க, வழியனுப்ப சென்னை விமான நிலையம் வந்த மூத்த நகன் ஆசிஃப்
மீரான், “வாப்பா உங்களையும் தடுத்து நிறுத்தினால் upset ஆகாதீர்கள்” என்றான்.
சென்னையில் இரவு பத்து மணிக்கு புறப்பட்ட விமானம், துபையில் ஒரு ஒன்றரை மணி நேரம் தங்கி
இந்திய நேரப்படி மாலை ஆறு மணிக்கு – அமெரிக்க நேரப்படி காலை எட்டு மணிக்குச் சென்றது.
குடிவரவு-அகல்வுப் பகுதியில் எனக்கு முன்னால் கேரள மாநிலத்தைச் சேர்ந்த ஒரு முஸ்லிம் குடும்பம்.
கணவர் அமெரிக்காவிலேயே வேலை பார்க்கிறார். சடுதியில் அலுவலை முடித்து அனுப்பி விட்டார்கள்.
அடுத்து என் முறை. உள்ளங்கையை ஒரு கருவியில் காட்டச் சொன்னார்கள். பிறகு பெருவிரலை.. அது
போல அடுத்த கையையும்… தொடர்ந்து, “எதற்காக வந்திருக்கிறீர்கள் ?” என்ற கேள்விக்கு, “சுற்றுலா..!”
என்றேன் சுருக்கமாக..!
கடவுச் சீட்டைக் கவனமாகப் பர்சீலித்தார். பிறகு, Welcome to the States..enjoy your holiday..” என்ற வண்ணம் கடவுச்சீட்டைக் கையில் தந்தார். துபை ஞாபகத்தில், “ஜெஸாக்கல்லாஹ்..” என்று அரபியில் நன்றி என்றேன்.
அடுத்து சுங்கம். ஒரு அதிகாரி இருந்தார். பத்துப் பேர் வரிசையில் நின்றனர். எட்டாவதாக நான். இன்னொரு
அதிகாரி வந்தமர்ந்தவாறே என்னை அழைத்தார். பூர்த்தி செய்த படிவத்தைக் கேட்டார். அடுத்து என்னைப்
போகச் சொல்லி இருக்கிறார். நான் கவனிக்கவில்லை. பெட்டியைத் தூக்கி பரிசோதனைமேசையில்
வைத்தேன். அவர் மிகுந்த் மரியாதையுடன், “உங்களை போகச் சொன்னேன்… நீங்கள் போகலாம்..” என்றார்.
இரட்டை ஆச்சரியத்திலிருந்து விடுபடாமலேயே, வண்டியை உருட்டிக் கொண்டு வந்தேன். குதிரை உயரத்தில்
ஒரு நாய் வந்து மோப்பம் பிடித்தது. அது.. ஊ ஊ ய் ய் ய் என்று ஒரு முனகல் முனகினால் போதுமாம்.
பெட்டியைத் திறக்கச் சொல்லி உள்ளெ இருந்த ஊறுகாய், மசாலா சாமான்கள் இனிப்பு வகைகள் அத்தனை
பொருட்களையும் எடுத்து தூர வீசிவிட்டே நம்மைப் போக விடுவார்களாம். ஆனால் அந்த நாய் என்னையும்
ஒரு உரசு உரசிப் பார்த்து விட்டு, “என்னய்யா இந்த மாதிரி கிராக்கியை எல்லாம் முகர்ந்து பார்க்கச் சொல்கிறீர்கள்” என்பது போல் என்னை இளக்காரமாக ஒரு பார்வை பார்த்து விட்டு அது பாட்டுக்குப் போய்
விட்டது.
வெளியே வருகிறேன். யார் யாரையெல்லாமோ வரவேற்கக் காத்திருக்கும் கூட்டத்துக்கு மத்தியிலிருந்து
முப்பது வருடப் பழக்கம் உள்ளது போல் பாசமும் பரிவுமிக்க “ஐயா” என்றொரு உற்சாகக் குரல்…ஸ்வாதி..!!!
ஏறக்குறை அத்தனை வயது மதிக்கத்த ஸ்வாதியும் அவரது தோழி அனுஜாவும் அவரது மகனும்…!
ஸ்வாதி அதற்கு முன்பு என்னைப் பார்த்தது கூட இல்லை. ஸ்வாதி, அவர்
கணவர் தேவன், தாயார் மற்றும் குடும்பத்தினர், என் இனிய நண்பர் வேந்தன் ஐயா, என் மகனின் தோழன் ராஜன், தோழி ஸ்மிதா, தமிழினி, என்னை அமெரிக்காவுக்கு வரவழைத்த என்
உறவினர்ஃபைசல், அவரது குடும்பத்தினர்,அவரது மைத்துனர் மற்றும்
குடும்பத்தினர், நண்பர்கள் சங்கர பாண்டியன், ரகு நந்தன், சிவா
எல்லாருமாகச் சேர்ந்து என் அமெரிக்கப் பயணத்தை இடர்பாடுகள்
இல்லாததாக – இனிமையானதாக அமைய உதவினார்கள். அத்தனை
பேருக்கும் இதய நன்றி.
எப்போதெல்லாம் சந்தர்ப்பம் கிடைக்கிறதோ அப்போதெல்லாம் அமெரிக்கா
செல்ல எனக்கு விருப்பம்.
அன்புடன் – சாத்.அப்.ஜப்பார்
abjabin@gmail.com