ஐக்கிய அமீரகத்தில் ஓர் ஐக்கிய ஜமாஅத்

ஐ. மு. மு. ஜமாஅத்


அகிலத்தை படைத்த அல்லாஹ், அதில் அழகிய தோற்றத்தில் மனித சமுதாயத்தைப் படைத்தது மட்டுமின்றி,அகிலத்தில் சிறந்த படைப்பாகவும் படைத்துச் சிறப்பித்தது தன்னை மட்டும் தான் மனிதன் வணங்க வேண்டும் என்பதற்காகத்தான்.அடியான் அல்லாஹ்விற்கு செய்ய வேண்டிய கடமைகளை நிறைவேற்றியபின்,மற்ற அடியார்களின் பக்கமும் கவனம் செலுத்துமாறு அல்லாஹ் அன்புக்கட்டளை இடுகின்றான்.

அல்லாஹ்வையே வணங்குங்கள்;அவனுக்கு எப்பொருளையும் இணை வைக்காதீர்கள். தாய் தந்தையர்க்கும்; உறவினர்களுக்கும், அநாதைகளுக்கும், ஏழைகளுக்கும், அண்டை வீட்டிலுள்ள உறவினர்க்கும்,(உறவினரல்லாத) அண்டை வீட்டாருக்கும்,(தொழிலில், பிரயாணத்தில்)கூட்டாளியாக இருப்போருக்கும், வழிப்போக்கருக்கும், உங்களுடைய வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவர் (களான அடிமை)களுக்கும் (நீங்கள்) உபகாரம் செய்யுங்கள். (இவர்களை விட தான் உயர்ந்தவனென்று) பெருமையடிக்கிறவனாக, கர்வம் உள்ளவனாக இருப்பவனை,நிச்சயமாக அல்லாஹ் நேசிப்பதில்லை.

(அல்குர் ஆன் 4;36)

என்று அனைத்து தரப்பு மக்களுக்கும் உதவியும், உபகாரமும் செய்ய கூறிய அல்லாஹ், வசனத்தின் இறுதியில் செல்வத்தால், செல்வாக்கால் பெருமையடிக்கும் மனிதனை நேசிப்பதில்லை என்று எச்சரிக்கையும் செய்கின்றான்.

அண்ணல் நபி(ஸல்) அவர்களின் அருள்மொழியும் அதைத் தான் வலியுறுத்துகின்றது.

முஃமின்கள் ஒருவர் மற்றொருவருக்கிடையில் அன்பு செலுத்துவதிலும், கருணை காட்டுவதிலும் உதவி ஒத்தாசை செய்வதிலும் ஓர் உடலைப் போன்றவர்களாவார்கள். அவ்வுடலில் ஒரு உறுப்பு பாதிக்கப்பட்டால் மற்ற அனைத்து உறுப்புகளும் காய்ச்சல் கண்டு விழித்திருந்தும் அதற்காக ஒத்துழைக்கின்றன.    (புகாரி)

இவ்வாறு மனித சமுதாயம் ஒருவருக்கொருவர் உதவிகள் புரிந்து,பாசத்தையும் நேசத்தையும் பகிர்ந்து கொள்வது இறைப்பணிக்கு அடுத்த அறப்பணிகளில் புனிதப்பணியாக அங்கீகரிக்கப்படும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

அல்லாஹ்  ரஸூலின் இந்த கட்டளையை உலகில் எத்தனையோ இயக்கங்களும், தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் தனி மனிதனும் இது போன்ற நல்லுதவி நற்பணிகளில் ஈடுபட்டு வரும் வேளையில்; நமது முதுகுளத்தூரைச் சேர்ந்த இஸ்லாமிய சமுதாய மக்களும் பல வகைகளில் நற்பணிகளை ஆற்றி வருகின்றனர்.

அவ்வகையில் முதுகுளத்தூர் பெரிய பள்ளிவாசல் ஜமாஅத் நிர்வாகத்தினரால் செயல்பட்டு வரும் ஹிம்மத்துல் இஸ்லாம் வாலிபர் சங்கம்; திடல் பள்ளிவாசல் ஜமாஅத் நிர்வாகத்தினரால் செயல்படும் ஷரீஅத்துல் இஸ்லாம் சன்மார்க்க சங்கம் போன்ற அமைப்புகள் சிறப்பான சேவைகள் செய்துள்ளன. இன்றும் செய்து வருகின்றன. தற்போது நமதூரில் அறக்கட்டளைகள் பல தொடங்கப்பட்டு அதன் மூலமும் இஸ்லாமிய சமுதாய மக்களுக்கு மட்டுமின்றி அனைத்து சமுதாய மக்களுக்கும் சேவைகள் செய்து வருகின்றனர்.

காலச் சூழ்நிலைக்கேற்ப பர்மா, மலேசியா, அரபு நாடுகள் போன்ற வெளிநாடுகளில் பொருளீட்டச் சென்ற நமதூர்வாசிகள் அங்கும் பல அமைப்புகள் ஏற்படுத்தி நமதூர் மக்களுக்கு பல அறப்பணிகள் ஆற்றியுள்ளனர். தற்பொழுது ஐக்கிய அமீரகத்தில் ( U.A.E. ) வசித்து வரும் நமதூர் வாசிகள், நமதூரின் அனைத்து ஜமாஅத்தினர்களையும் ஒருங்கிணைத்து “ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத்” என்ற பெயரில் அமைப்பு ஒன்று தொடங்கி கல்விச் சேவையில் ஈடுபட்டு வருவது ஒரு சிறப்பான நற்பணியாகும்.

“நீங்கள் (ஆலிமாகவோ) அறிஞராகவோ, அல்லது கல்வியைக் கற்கும் மாணவராகவோ, அல்லது கல்வியைக் கவனத்துடன் கேட்பவராகவோ இல்லையெனில், கல்வியை  அறிஞர்களை  நேசிப்பவராகவோ இருங்கள்.(இந்நான்கல்லாமல்) ஐந்தாம் வகையினராக ஆகி விடாதீர்கள்” (முன்தகப் அஹாதீஸ்) என்ற அண்ணல் நபி(ஸல்) அவர்களின் அமுத மொழிக்கேற்ப நமது சமுதாய மாணவ,மாணவிகளின் மீது அக்கறை கொண்டு அவர்கள் கல்வியில் பின்தங்கி விடாமல் இருக்க, நமதூரில் டியூசன் செண்டர் தொடங்கி அதில் பல திறமையான ஆசிரியர்களை நியமித்து, எவ்வித கட்டணமுமின்றி இலவசமாக மாணாக்கர்களுக்கு பாடங்கள் கற்றுத் தரப்படுகின்றன. இதன் மூலம் பல மாணவ மாணவிகள் கல்வி பயின்று எஸ்.எஸ்.எல்.சி, +2 தேர்வுகளிலும், பள்ளித் தேர்வுகளிலும் அதிகமான மதிப்பெண்கள் பெற்று வருகின்றனர்.மேலும் அவர்களை ஊக்கப்படுத்த அதிக மதிப்பெண்கள் பெற்றவர்களுக்கு வருடம் தோறும் நினைவுப் பரிசுகளும் நமது அமைப்பின் மூலம் வழங்கப்பட்டு வருகிறது.

பள்ளி இறுதித்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று வெற்றி பெற்று மேற்கொண்டு, கல்லூரி மற்றும் தொழிற்கல்வி படிப்புகளில் கல்வியைத் தொடர இயலாத, வசதி இல்லாத மாணவர்களை இனம் கண்டு அவர்களுக்குப் பொருளாதார உதவிகள் அளித்து  படிப்பைத் தொடரவும் ஏற்பாடு செய்து வருகின்றனர். அதன்படி நமதூரைச் சேர்ந்த நமது மாணவர் ஒருவருக்கு பொறியியல் கல்லூரி படிப்பை முடிக்கும் வரை தொடர்ந்து முழு உதவியும் அளிக்கப்பட்டு, அவரை ஒரு இஞ்சினியராக நமது அமைப்பு உருவாக்கியுள்ளது. நமக்கு பெருமையான மகிழ்ச்சிக்குரிய செய்தியாகும்.

அமீரகத்தில் ( UAE ) வசிக்கும் நமது ஐக்கிய ஜமாஅத் உறுப்பினர் களிடம் ரமளான் மாத இறுதிப் பகுதியில் ஃபித்ரா (சதகத்துல் ஃபித்ரா) பணம் வசூல் செய்யப்பட்டு அதை நமது ஊருக்கு அனுப்பி வைத்து நமது ஊரில் உள்ள ஏழைகள்,வறியவர்களுக்கு “அரிசி மற்றும் பணம்” வழங்கி உதவிகளும் செய்யப்பட்டு வருகின்றது.

நமதூரிலிருந்து ஐக்கிய அமீரகத்திற்கு சுற்றுலா வரும் நமதூர் வாசிகளை நமது ஐக்கிய ஜமாஅத் சார்பாக வரவேற்று, விருந்தளித்து உபச்சாரம் செய்வதையும் கடமையாக நினைத்து கடைப்பிடித்து வருகின்றது. மேலும் நமதூரிலிருந்து ஐக்கிய அமீரகம் வந்த சமுதாயச் செம்மல்களை சிறப்பிக்கும் வகையில் விருதுகள் வழங்கியும் கெளரவப் படுத்தியுள்ளது.

பெரிய பள்ளிவாசல் தலைமை இமாம் மெளலானா அல்ஹாஜ் எஸ்.அஹ்மது பஷிர் சேட் ஆலிம் அவர்களுக்கு “சிராஜுல் உம்மா” என்ற விருதினையும்,

சமுதாய சமூக ஆர்வலர் டாக்டர் ஏ.அமீர்ஜஹான் எம்.பி.பி.எஸ் எம்.டி, பி.ஹெச்டி. ( U.S.A.) அவர்களுக்கு “வாழ்நாள் சாதனையாளர்” விருதினையும் வழங்கி கெளரவப்படுத்தப்பட்டனர். மேலும் தேசிய நல்லாசிரியர் எஸ். அப்துல் காதர், ஜனாப். முத்து முஹம்மது,மவ்லவி சுலைமான் ஆலிம், டாக்டர். நசீருல் அமீன் உள்ளிட்டோரும் கௌரவிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் நமதூரில் அன்றாடம் நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை அனைத்துலக மக்களும் தெரிந்து கொள்ள வசதியாக நமது ஐக்கிய ஜமாஅத் சார்பில் வெப்சைட் துவக்கி உடனுக்குடன் செய்திகள் தெரிவிக்கப்பட்டு வருகின்றது.

வெப்சைட் முகவரி ; www.mudukulathur.com
குழும முகவரி : muduvai@googlegroups.com

கடந்த பல வருடங்களாக, ஐக்கிய அமீரகத்தில் துபாயை மையமாக வைத்து சமுதாய நற்பணிகள் ஆற்றிவரும் ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத்தின் தலைவராக என்.எஸ்.ஏ. நிஜாமுத்தீன் சாஹிப் அவர்களும், துணைத்தலைவராக எஸ். சம்சுத்தீன் சாஹிப் அவர்களும், பொதுச் செயலாளராக முதுவை ஹிதாயத் ( 050 5196433 ) அவர்களும், ஆடிட்டராக ஹெச். அமீர் சுல்த்தான் அவர்களும், பொருளாளராக ஏ. அஹ்மத் இம்தாதுல்லாஹ் சேட் அவர்களும், ஒருங்கிணைப்பாளராக ஹெச். இப்னு சிக்கந்தர் அவர்களும் இருந்து ஆர்வமிக்க அனைத்து உறுப்பினர்களின் ஒத்துழைப்போடு மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகின்றது.

தற்சமயம் மஸ்கட்டில் பணியாற்றி வரும் ஹெச். ஹஸன் அஹமது அவர்கள் அமீரகத்தில் பணிபுரிந்த காலத்தில் நமது ஜமாஅத்தின் தலைவராக இருந்து சிறப்பாக வழி நட்த்திச் சென்றது குறிப்பிட்த்தக்கது.

எல்லாம் வல்ல அல்லாஹ் நமது ஐக்கிய ஜமாஅத்தின் சேவைகளை ஏற்றருள் புரியவும், மேலும் பல நற்பணிகள் செய்ய நல்லுதவி அருள நம் அனைவருக்கும் நற்கிருபை செய்வானாக ! ஆமின் !!

ஆக்கம் :
மவ்லவி ஏ. சீனி நைனார் தாவூதி
துபாய்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *