( தமிழ்மாமணி,முனைவர் மு.அ.முகம்மது உசேன் எம்.ஏ, பி.எச்.டி., )
ஓய்வு பெற்ற குடந்தை கல்லூரி தமிழ்ப் பேராசிரியர்,
துணைத்தலைவர், இஸ்லாமிய இலக்கியக் கழகம்,
கும்பகோணம்.
இஸ்லாமியத் தலைமை ஆளுமை என்பது எல்லாம் வல்ல அல்லாஹ்விடமே துவங்குகிறது. அல்லாஹ்தான் இந்த உலகத்தின் தலைவன். அவனே வணக்கத்திற்குரியவன். தீர்ப்பு நாளின் அதிபதியும் அவனே. அவன் பேராற்றல் மிக்கவன். ஏக தலைவனும் அவனாகவே விளங்குகிறான். அவனது வழியே மிக நேரான வழி. நேர்வழி செல்வோருக்கு அவன் துணை புரிகின்றான். நம்பிக்கையாளர்களின் நேசிப்பிற்குப் பாத்திரமானவன். அவன் தலைமைக்குரிய தனிப்பெரும் பண்பான அமைதியின் பக்கம் அழைப்பவன் அல்லாஹ். அவன் அளவற்ற அருளாளன். நிகரற்ற அன்புடையோன், இவையெல்லாம் அல்குர் ஆனில் இறைவன் தன்னைப்பற்றி நமக்கு அருளிய சத்திய வாசகங்கள். தீர்க்க வசனங்கள் இவை அனைத்தும் ஒரு தலைமைப் பண்பாளரிடம் இருக்க வேண்டிய குணாம்சங்கள் இந்த தன்மைகள் நிறைந்தவன் அல்லாஹ். இக்குணங்களை திரும்பத் திரும்ப அனைத்து உலகின் ரட்சகனான அல்லாஹ் நமக்குப் பிரகடனப் படுத்துகிறான். சத்திய சமத்துவ திருமறையாம் திருக்குர்ஆன் மூலமாக இவைகளை இறைவனைத் தவிர வேறு யாரும் சுய பிரகடனம் செய்ய தகுதியுடையோரை இறைவன் படைக்க வில்லை. ஆனால் இவைகளை மக்களிடம் கொண்டு செல்லுங்கள் என்று காலம் காலமாய் நபிமார்களை இப்பூவுலகிற்கு அனுப்பி வைத்தான்.
அவன் அகமகிழ்ந்து பரிபூரண திருப்தி அடைந்தபோது நம் பெருமான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை இறுதி நபியாக இவ்வுலகிற்கு அருளினான். நபித்துவத்தின் பூரணத்துவம் ரசூலுல்லாஹ்விடமே நிறைவு பெறுகிறது. நபித்துவம் என்னும் பிறைமதி. ஆதம் தொடங்கி அல்லாஹ்வின் அருளால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் முழுமதி பெளர்ணமியாய் பரிணமிக்கின்றது. உலகின் ஞான ஒளி முகம்மத் என்னும் நபி மொழியில் ஜொலிக்கிறது.
ஆதம் நபி தொட்டு அனைத்து நபிமார்களுக்கும் தலைமைப் பண்பு சீராக வளர்ந்தோங்கி இருக்கிறது. இருப்பினும் அண்ணலம் பெருமான் பூவுலக கோமான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் இப்பண்புகள் மேலோங்கி இருப்பதை நம்மால் உணர முடிகிறது. எவை, எவை எல்லாம் சிறந்தத் தலைமைப் பண்புகள் என்பதற்கு மேலாண்மை ஆய்வாளர்கள் பின்வரும் பண்பியல் கூறுகள் இருக்க வேண்டும் என்று கூறுகிறார்கள்.
தன்னடக்கம், சுய கட்டுப்பாடு (self control) எல்லா மக்களையும் சமமாக மதிக்கும் சமநிலையான உணர்வு, ஒரு காரியத்தில் முடிவெடுப்பதில் தீட்சண்யமான பார்வை, சரியாக திட்டமிடல் அந்த திட்டத்தை மிகத்துள்ளியமாக நிறைவேற்றுதல், நம்பிக்கையாளர்களை உருவாக்குதல், அவர்களின் நம்பிக்கைக்குப் பாத்திரமானவராக இருத்தல், ஒருவர் மீது பட்சாதாபப்படுதல், அனுதாபப்படுவதோடு மட்டும் நின்று விடாமல் அனுதாபத்திற்கு உரியோரின் உள்ளத்தில் உயர்வான எண்ணக்கிளர்ச்சியை (Empathy) உருவாக்குதல், எல்லோரிடத்திலும் இணைந்து போதல், இவை எல்லாவற்றிற்கும் மேலாக எல்லா நம்பிக்கை யாளரிடமும் ஒரு இணைவை (integragity) உருவாக்குதல் ஆகியவை தலைமைப் பண்பாக இன்று பேசப்படுகிறது.
இவைகளோடு வென்றெடுக்கும் திறன், நம்பிக்கையாளர் களிடம் நன்மதிப்பை ஏற்படுத்திக் கொள்ளல், தன்னலம் பேணா தகைமை, கூர்மதியும் குறுகிய கால செயல் வடிவ முடிவும், எளிமையாக சந்திக்கக் கூடியவராக அடையக் கூடியவராக இருத்தல், தலை சிறந்த பேச்சாற்றல் மிக்கவராக இருத்தல் இவைகளும் தலைமைப் பண்பாளரின் குணங்களாகும். இவை அனைத்தையும் இணைத்து நாம் ஒரு வரியில் சொல்லிவிடலாம். நபிகளார் எப்படி உபதேசித்தார் களோ (ஹதீஸ்) எப்படி செயல்பட்டார்களோ அவைகள் அனைத்தும் தான் தலைமைப் பண்புகள்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தன்னடக்கத்தோடு வாழ்ந்தார்கள். இறைக் கட்டளையையே செயல்படுத்தி னார்கள். எளிமையாக வாழ்ந்தார்கள். சமூகத்திற்கு மட்டு மல்ல தன் குடும்பத்திற்கும் நல்ல தலைவராக விளங்கி னார்கள். நபிகளார் தன் கிழிந்த உடைகளைத் தைத்துத் தந்திருக்கிறார்கள். நைந்த தனது காலணிகளைச் செப்பனிட்டு அணிந்திருக்கிறார்கள். என அன்னை அயிஷா (ரலி) அவர்கள் கூறியுள்ளார்கள். தன்னடக்கத்துடன் எளிமையும் இதில் வெளிப்படுகிறது. (திர்மிதி, ஷமைல், ஹம்பல் 6: 256)
இறைவன் அருளிய இஸ்லாம் கடமைகளை நிறைவேற்ற அவர்கள் இப்பூவுலக மக்கள் மீது கொண்ட நம்பிக்கைத்தான் இன்று உலகம் முழுவதும் ஈமான் என்னும் நம்பிக்கை கொண்ட கோடானுகோடி முஸ்லீம்களையும், முஸ்லீம் நாடு களையும் உருவாக்கியுள்ளது. அரபு நாட்டின் ஏதாவது ஒரு வெயில் சுட்டெறிக்கும் பாலைவனத்தில் நட்டு நடுவே நின்று விட்டு அந்த இடத்தில் நிலவு தோன்றா வளர்பிறையின் முன்னிரு நாட்களில் நின்று பயங்கர இருளில் நின்று யோசித்தால் எதுவுமே கிடைக்காத இந்த ஏகாந்த மணல் பூமியில் மனித சஞ்சாரமே இல்லாத ஜீவனற்ற இந்தப் பாழ்வெளியில் எவ்வளவு பெரிய மாபெரும் தலைவரை இறைவன் நபியாகத் தந்திருக்கிறான் என்பது புலப்படும். உடலும், உள்ளமும், பக்தியினாலும், பயத்தினாலும், குளறும். இறைவன் கிருபையாளன், கருணையாளன் என்பது புலப்படும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் செயல்திறன் புலப்படும்.
பல்லாயிரம் சிலை தெய்வங்களை வணங்கி வந்த பாலை நில மக்கள் மனதில் ’அல்லாஹ்’ என்னும் பசுஞ் சோலையைப் படர விடுவது அவ்வளவு எளிதான காரியமல்ல. பல தெய்வ வழிபாட்டில் இருந்து அவர்களை விடுவிப்பதே அபூர்வம். உருவமில்லா உன்னத இறைவனை உணர்த்துவது எவ்வளவு கடினம் ! தன்னை வருத்தித்தான் உலகத்தவரை உம்மத் ஆக்கினார்கள். நீங்கள் எங்கிருந்த போதும் அவன் (இறைவன்) உங்களுடன் இருக்கிறான் என்று இன்று சொல்வது சுலபம். ஈர நெஞ்சே தோன்றாத அம்மக்க ளிடம் இச்சத்திய வசனத்தைக் கூற கடும் முயற்சி அவர்களுக்கு அப்போது ஏற்பட்டிருக்கக்கூடும்.
ஒருவரின் நம்பிக்கையாளர்களில் முதன்மையானவர் அவரது தாயார். திருமணமான பிறகு மனைவி, மனைவி கணவனை நம்ப வேண்டும். கணவன் மனைவியை நம்ப வேண்டும். நம்பிக்கை என்பது இருவழிப்பாதை. ஹிரா குகையில் நடந்த்தைக் கூறி அகில உலகின் ஏக இறைவன் அல்லாஹ் என்று திருத்தூதர் கூறிய போது பெண்களுக்கு அரசி அன்னை கதீஜா (ரலி) அவர்கள் அடுத்த கணமே அது உண்மை என்று நம்பினார்கள். நல்ல தலைவருக்கு உரிய பண்பு குடும்பத் தலைமையிலிருந்து தொடங்கி சமுதாயத் தவரை அவர் கூறுவது தான் உண்மை என்று நம்ப வைத்திருக்கிறது.
நல்ல பயிற்றுனர்களே சிறந்த விளையாட்டு வீரர்களை உருவாக்க முடியும். அதாவது அவர்கள் சிறந்த பயிற்சி பெற வேண்டும். பின்னர் அதைப்பற்றி பயிற்றுவிக்கும் திறன் வேண்டும். தான் இறைவனிடம் பயிற்சி பெற்றவர்கள் என்பதை நபிகள் மக்களுக்கு நிரூபனமாக விளக்கினார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கூறுவதாக அல்லாஹ் தன் திருமறையில் கூறுகின்றான். (நபியே) அளவற்ற அருளாளன் தான் இந்தக் குர்ஆனை (உங்களுக்குக்) கற்றுக் கொடுத்தான். அவனே மனிதனுக்குப் பேசவும் கற்பித்தான் (திருக்குர்ஆன் 55, 1-4) எல்லா உயிரினங்களும் இறைவனின் படைப்பு என்ற பயிற்சி தன்மை அவர்களை எல்லா ஜீவராசி களும் இறை அச்சத்தோடு ஜீவித்து வாழ வேண்டும் என்று உபதேசிக்க வைத்தது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சிறந்த திறன் ஆள்பவராக (Skill of Ieading performance ) விளங்கினார்கள். அதே சமயம் அவர்கள் சிறந்த திறனாளர் (Skill) ஆவார்கள். இஸ்லாத்திற் காகத் தற்காப்பு போரிடும் போது (Defence war) அவர்களே தலைமை தாங்கினார்கள். பத்ர் போரில் அவர்கள் வகுத்த வியூகம் அகழி வெட்டி போர் புரிவது என்பது அக்காலத்து புதுமையான விஷயமாகும். வெற்றிக்குப் பின்னால் தான் நிதானம் தேவை என்பதை அவர்கள் உணர்ந்தார்கள். அது தான் தலைமைப் பண்பும் கூட. ஆனால் அதற்கு அடுத்த மதினாவில் நடந்த உஹத் போர் அவர்களுக்குக் கடும் சோதனையாக இருந்தது. பத்ர் வெற்றிப் பெருமிதத்தில் இருந்த முஸ்லீம்கள் சற்று அலட்சியமாக இருந்தார்கள். உஹத் மலை அடிவாரத்தில் 50 வில் வீரர்களை நிறுத்தி ’நீங்கள் இந்த இடத்தை விட்டு அசையாதீர்கள்’ முஸ்லீம்கள் வெற்றி பெற்று விட்டார்கள் என்று செய்தி கேட்டாலும் சரி, இந்த இடத்தை விட்டு நகரக்கூடாது’ என்றார்கள். எதிரியை ஆரம்பத்தில் வீழ்த்திய முஸ்லீம்கள் நபிகள் கட்டளையை ஏற்காமல் நகர ஆரம்பித்தார்கள். பின்வாங்கி ஓடிய எதிரிப்படை திரும்பி வந்து தாக்க ஆரம்பித்தது. அதில் எழுபது பேர் ஷஹீத் (வீர சுவர்க்கம்) அடைந்தார்கள். நம் பெருமானார் அவர்கள் காயம் பட்டார்கள். அந்த நிலையிலும் அவர்கள் கோபமோ கடும் சொல்லோ கூறவில்லை. இறைவன் திருமறையில் இதனைக் கூறுகிறான். நபியே அல்லாஹ்வுடைய அருளின் காரணமாகவே நீங்கள் கடுகடுப் பானவராகவும், கடின உள்ளம் கொண்டவராகவும் இருந்திருப்பீர்களானால், உங்களிடமிருந்து அவர்கள் வெகுண்டோடி இருப்பார்கள். ஆகவே அவர்களின் குற்றங் களை நீங்கள் மன்னித்து (இறைவனும்) அவர்களை மன்னிக்கப் பிரார்த்திப்பீராக ! அன்றி யுத்தம் சமாதானம் ஆகிய மற்ற காரியங்களிலும் அவர்களுடன் கலந்து ஆலோசித்து வாருங்கள் (திருக்குர்ஆன் : 3: 159) எவ்வளவு அருமையான தலைமைப் பண்பு உபதேசம் அல்லாஹ்விட மிருந்து வருகிறது பாருங்கள். அதுவும் அருமை பெருமான் நபிகள் நாயகத்திற்கு.
தலைமைப் பண்பின் மன்னிக்கும் சுபாவம் வேண்டும். தன்னைச் சார்ந்தோர் செய்யும் தவறுகளைப் புரிந்து பின்னாளில் அத்தகைய தவறுகள் நடக்காது அவர்களை அன்பால் அரவணைக்க வேண்டும். இந்தப் பண்பு அவர்களிடம் இருந்தபோதும் உலகத்தாருக்கு உணர்த்த நபிகளிடம் கூறி நபிக்கு அறிவுறுத்துகிறான்
உஹத் போரில் முஸ்லீம்கள் தோல்விக்குக் காரணகர்த்தாவாக விளங்கியவர் காலித் பின் வாலித் என்பவராவார். பின்னர் இவர் இஸ்லாத்தைத் தழுவினார். தன்னை இஸ்லாமிய சேவையில் சேர்த்துக் கொள்ளவில்லையே என்று வருந்தினார். நம்புகின்றவர்களை நம்பும் குணம் கொண்ட நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், இஸ்லாமியப் படையில் எவ்விதத் தயக்கமும் இன்றி சேர்த்துக் கொண்டார். அது மட்டுமல்ல அபுஜஹீலுடைய சகோதரர் இபின் ஹஸ்ஸம் இஸ்லாத்தை ஏற்று ஏகத்துவத்தில் அசையாத நம்பிக்கை உள்ளவ ரானார். நபிகளார் மரணித்ததற்குப் பிறகு, இரண்டாண்டுகள் கழித்து நடந்த யர்முக் போரில் தண்ணீர் தந்த போது கூட அருந்த மறுத்து ஷகீதானார். (ஹக்கீம், முஸ்தாக் 3, 242) எதிரியை மன்னிப்பது மட்டுமல்ல அரவணைத்து நம்பி, நல்ல நம்பிக்கையாளராக மாற்றும் சீரிய தலைமை அண்ணலாரிடம் இயல்பாகவே அமைந்திருந்தது.
தலைமைப் பண்பின் மற்றொரு அருங்குணம், தான் நிலை மாறா தன்மை(Stability) தன் மகனார் இறந்த போது சூரிய கிரகணம் தோன்றி இருள் சூழ்ந்தபோது ஸஹாபாக்கள் இறைவன் இச்சோக சோதனைக்கு உலகை இருள்கப்ப வைத்து விட்டான். என்றபோது அது இயற்கையாய் நடக்கும் ஒரு செயல் என்று கூறி, மூடப்பழக்க சிந்தனைக்கு முற்றுப் புள்ளி வைத்தார்கள். எதுவும் இறைவன் நாட்டப்படி என்ற அசையா நம்பிக்கை உடையவர்கள். உதுமான் பின் மதூம் என்ற ஸஹாபா இறந்து விட்டார்கள், நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தேம்பி தேம்பி அழுதார்கள். அவர்கள் அடக்கம் செய்யப்பட்ட போது ஒரு பெண், ’’உதுமான் அவர்கள் ஒரு பறவையைப் போல் பறந்து சுவர்க்கம் புகுகிறார்கள்’’ என்றாள். அப்படிப்பட்ட துக்கத்திலும் ரசூலுல்லாஹ் அவர்கள் கூறினார்கள். உனக்கு அவர் சுவர்க்கம் புகுவார் என்று எப்படித் தெரியும்? நபியாக இருக்கும் எனக்கே அது தெரியாதே? என்றார்கள். (முஸ்லிம், அஸ்மான் 31,33 இமாம் ஹன்பல் 3: 447) இது தான் தன் நிலைமாறாப் பண்பு என்பது தன்னை முன்னிறுத்தாமல் அல்லாஹ்வே அனைத்திற்கும் என்பதால் தன்முனைப்பு தோன்றாத நிலை நிலைத்து நிற்கும்.
நபிகளார் வாழ்வில் தலைமைப் பண்பிற்கு எதிரான பகைவர்களும் அவர் களின் செயல்களும் இருந்தபோதும், எதிரிகளின் எதிர் வினைகளை (Negative) உடன் வினையாக (Positive) மாற்றி அமைத்தார்கள். கடந்த காலத்தில் நின்று எதிர்காலத்தை கணிக்கும் சக்தி உடையவராக விளங்கினார்கள். சவால்களைச் சமாளிக்கும் சமயோசித ஞானம் பெற்றிருந்தார்கள். உலகோரை ஏகத்துவத் திற்குக் கொண்டு வர அதையே இலக்காகக் (Goal) கொண்டு அந்த இலக்கினை அடைய சதாசர்வகாலமும் ஆய்ந்து அதற்கான செயலில் ஈடுபட்டார்கள். யதார்த்தங்களை (As it is) புரிந்து கொள்ளும் பேராற்றல் பெற்றிருந்தார்கள். மனப்புயலில் (Brain Storming) சிக்கித் தவிக்காத குணம் பெற்றிருந்தார்கள். மனதில் உறுதி, எல்லாக் காரியத்தில் முழுமை எடுத்தக் காரியம் யாவிலும் வெற்றி இவைகள் அவர்கள் தலைமைப் பண்பு பட்டியலில் நீங்கா இடம் பெற்றுள்ளது. சரியான நேரத்தில் சரியான முடிவு. அதையும் சக தோழர் களிடம் கலந்து ஆலோசிக்கும் கூட்டுத் தலைமைப் பண்பு (Collective leadership) அவர்களிடம் மேலோங்கி இருந்தது.
சிறந்த நாவன்மை (Communication Skill) உடையவர்களாக விளங்கினார்கள். தன் வளர்ப்பு தாயார் அன்னை ஹலிமா அவர்கள் மக்காவில் அழைத்து வந்து ஆடு, ஒட்டகம் மேய்க்க நேர்ந்ததால் நேர்த்தியான அரபிய மொழி பேசும் திறன் வாய்ந்தது என்றும் கூறியுள்ளார்கள். அபு ஜஹீலே அவர்களது நாவன்மை கண்டு நடுநடுங்கிப் போனார். சொல்லும் செயலை அவர்கள் நிரூபித்துக் காட்டினார்கள். மக்கள் ஏகத்துவ விழிப்புணர்வு பெற தூண்டும் சக்தியாக (Motivation) விளங்கினார்கள். எல்லாவற்றிற்கும் மேலாக உலகப் பாசறையின் மனித நேயப் பாதுகாவலராக அவர்கள் விளங்கி வருகிறார்கள். ’’மதங்களில் எவர் தீவிரவாதத்தைப் புகுத்துகிறார்களோ அவர்கள் தண்டிக்கப்பட வேண்டியவர்கள்’’ (முஸ்லிம்) என்று உலகோருக்கு அவர்கள் எச்சரிக்கை விடுகிறார்கள்.