பசுங்கதிர் எம்.கே.ஈ. மவ்லானா

கட்டுரைகள்

ஆதிமனிதன் எங்கே தோன்றினான் எப்படித் தோன்றினான். மனிதன் படைக்கப்பட்டானா அல்லது குரங்கிலிருந்து பரிணாமம் பெற்று வந்தானா? நபி ஆதம் தோன்றியது எங்கே? அவர்களின் சந்ததிகள் வாழ்ந்தது எந்நிலத்தில்? நூஹ் நபி காலப் பிரளயம் எங்கு நடந்தது? ஷீது நபிக்கும் ராமாயணத்துக்கும் என்ன தொடர்பு? முதல் மனிதன் பேசிய மொழி எது? இப்படிப் பல்வேறு கேள்விகளுக்கும் ஆராய்ச்சிப் பூர்வமான பதில்களைத் தருகிறார். ஆசிரியர் மவ்லானா அவர்கள்.

மதிப்பிற்குரிய மவ்லானா அவர்களின் 25 வருட ஆய்வின் பலன் இது. பழுத்த கனியிது. பத்தாண்டுகளாக ‘பசுங்கதிர்’ ஏட்டில் வெளிவந்த கட்டுரைகளின் தொகுப்பு.

வரலாற்றுச் சான்றுகள், இலக்கியச் சான்றுகள், அகழ் வாராய்வுச் சான்றுகள், இதிகாசச் சான்றுகள், இறைமறைச் சான்றுகள் என அள்ளிக் கொட்டியிருப்பது அதிசயிக்கச் செய்கிறது.

ஷீது நதியின் பெயரிலிருந்து மருவிய சேது நிலப் பகுதி யிலிருந்து சிந்து சமவெளிவரை சடைவு ஏற்படாமல் நம்மை அழைத்துச் செல்கிறார் ஆசிரியர். அந்தப் பாதை பலரால் மறைக்கப்பட்ட பாதை. எவரும் செல்லத் துணியாத புதிய பாதை.

இஸ்லாமியத் தமிழ்க் கண்ணுடன் ஆராய்ந்து எழுதப் பட்டுள்ள இந்நூல் ஓர் அரிய சாதனை அபார முயற்சி.

சில விஷயங்களில் சர்ச்சைகள் எழலாம்.எழட்டுமே அப்போது தானே தெளிவு பிறக்கும். எப்படியிருந்தாலும் ஆசிரியரின் கடுமையான உழைப்பு பாராட்டுக்குரியது. இந்த ஆய்வுத் திறனை ஊக்குவிப்பதும் உற்சாகப்படுத்துவதும் நமது கடமையாகும்.

சிராஜ் மாத இதழ் 1983 ஆகஸ்டில் எழுதிய விமர்சனம் இது. நூலின் பெயர் சேது முதல் சிந்து வரை 315 பக்கங்களில் 1982 இல் அந்த நூலை எழுதியவர் எம்.கே.ஈ.மவ்லானா.

இவர் இயற்பெயர் அஸ்ஸையிது ஷெய்குல் ஜிஃப்ரி. இஸ்லாமியச் சமுதாயச் சேவையில் ஆர்வங்கொண்டவர். முஸ்லிம் லீகில் பல பொறுப்புகளேற்றுச் சேவை செய்துள்ளார். ‘பிறைக்கொடி’ ‘பசுங்கதிர்’ ஆகிய இதழ்களின் ஆசிரியர். முஸ்லிம் பத்திரிகை ஆசிரியர் சங்கத் தலைவர், வேதபுரியின் ரகசியம், புர்தா காட்சிகள், இஸ்லாமும் இளந் தலைமுறையினரும், தாமிரப்பட்டணம், இஸ்லாமிய உலகின் திருப்புமுனை, கலப்பட மார்க்கங்கள், இரு மருத்துவர் கதை, பாலைவனத்து ரோஜா, செம்மண் திட்டு, வேரில் பூத்த மலர், வழிகாட்டும் வரைபடம் முதலிய பல நூலகளை இயற்றியுள்ளார். மேலும் கட்டுரைகள் பல எழுதி யுள்ளார். இவரின் ’சேது முதல் சிந்து வரை’ எனும் நூலுக்கு தமிழக அரசின் பரிசு கிடைத்துள்ளது. ஆறாவது உலகத்தமிழ் மாநாட்டில் பங்கேற்றுள்ளார். ’ஞானக் கவிச்சித்தர்’ எனும் சிறப்புப் பட்டம் பெற்றுள்ளார். சிறந்த பத்திரிகையாசிரியர், எழுத்தாளர், பேச்சாளர்.

1990 டிசம்பரில் கீழக்கரையில் நடைபெற்ற இஸ்லாமியத் தமிழ் இலக்கிய ஐந்தாம் மாநாட்டில் பொற்கிழி வழங்கிப் பாராட்டப்பட்டபோது கூறப்பட்ட வாசகங்கள் இவை.

இலக்கிய இதழில் முன்னோடிகளின் ஒருவரான எம்.கே.ஈ. மவ்லானா சாதனைத் தடம் பதித்தவர் சேது முதல் சிந்து வரை நூலை எழுதி வெளியிட்டதுமே அவருக்கு அங்கீ காரமும் விருதும் கிடைத்தன.

தனிச்சிறப்பு

1982 இல் தமிழகத்தின் அன்றைய முதலமைச்சர் எம்.ஜி.ஆர். வரலாற்றுத்துறை நூலுக்கான பரிசை ஆசிரியர் மவ்லானா அவர்களுக்கு வழங்கினார்.

நோவாவுக்குப் பாட்டன் சேது. முதல் மனிதனாகிய ஆதத்தின் புத்திரர்களில் ஒருவர் என்பதையும் ஆதமின் மற்றொரு புத்திரனாகிய ஹாபீல் என்பவன் அவன் சகோதரன் காபீல் என்பவனால் கொல்லப்பட்ட பிறகு பிறந்த குழந்தைக்கு சேது என்ற பெயரிட்ட வரலாற்றை பைபிள், இஸ்லாமிய இதிகாசம் ஆகியவைகளின் ஆதார விளக்கங் களுடன் கண்டோம். இன்றைக்கும் இந்த சத்புத்திரனாகிய சேதுவின் பெயரால் தமிழ்நாட்டின் ஒரு பகுதி இருந்து கொண்டிருப்பதையும் விளக்கினோம். கடல்கொண்ட குமரியின் வடபுலத்திற்கு ஆதிசேது என்பதும் பெயராகும்.

சேதுவையும் தாண்டி நாம் ஆதி மனிதனாகிய ஆதாமைக் காணச் சென்றபோது அவர், அவர் புத்திரர் ஹாபீல், காபீல், சேது முதலியவர்களுடன் இலங்கை உள்ளிட்ட இன்றைய தமிழகத்திலேயே வாழ்ந்ததற்கான காலடித் தடங்களையும் காண்கின்றோம். முதல் மனிதரின் புத்திரர்களாக ஹாபீல், காபீல், ஆபேல் காயின் என்ற பெயர் தாங்கிய இரு சமாதிகள் முதல் மனிதராகிய ஆதமும், அவர் மனைவி யாரும் எந்தப் பகுதியில் உலவித் திரிந்தனர் எனக் கருது கிறோமோ அந்தப்பகுதி – ராமேஸ்வரம் பகுதியில் இருக்கிறது.

முதல் மனிதராகிய ஆதம் ஹவ்வாவின் மற்றொரு புத்திரர் சேது. இதைத்தான் அரபி தனக்கு இசைவாக ஸீது எனக் கையாள்கிறது. அந்த சேது ஸீது – ஸத் புத்திரராக இருந்தார் என விவிலியமும், அவர் ஒரு நபி என இஸ்லாமும் கூறுகின்றன. இந்தச் சேதுவின் பெயரால் அந்த நிலப் பகுதியே ஹாபீல் – காபீல் சமாதி இருப்பதாகக் கருதப் படும் இடமும், ஆதாம் – ஹவ்வா வசித்ததாகக் கருதப்படும் இடமும் சேது நிலம் என அழைக்கப்படுகிறது.

நூஹ் நபிக்குப் பாட்டனாராக ஷீதின் (சேது) வரலாற்றைப் படம் பிடித்துள்ளார் மவ்லானா.

சேது முதல் சிந்து வரை ஓர் அரிய மனித இன ஆய்வு நூல். முன்னுரை, வாழ்த்துரை, மதிப்புரை, அணிந்துரை, பாராட்டுரைகளை அறிஞர்கள் வழங்கியுள்ளனர். இந்நூல் உலகத்தின் பூர்வ மனித இன ஆய்வாளர்களிடையே ஒரு புதுமையான சலனத்தை உண்டாக்கும் என்று நிச்சயமாக நம்புவதாக முன்னுரையில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழக சட்டமன்றத்தில் 10.5.86 இல் நடைபெற்ற விவாதம் ஓர் எடுத்துக்காட்டு:

ஆ.கா.அ.அப்துஸ் ஸமது பேசினார்

சேது சமுத்திர திட்டத்தைப் பற்றிப் பேச வந்த திரு. குமரி அனந்தன், சீதை நாடு என்பதுதான் சேது எனத் திரிந்திருக்கக் கூடும் என்று சொன்னார்.

சொல்லாராய்ச்சியாளர்கள் ஒன்றை ஒத்துக் கொள்வார்கள். சேதுவுக்கும் சீதைக்கும் இருக்கும் நெருக்கத்தைவிட, சேதுவுக்கும் ஷீதுவுக்கும் நெருக்கம் அதிகம் உண்டு. அந்த நாட்டின் உண்மைப் பெயர் – தொன்மைப் பெயர் ’ஷீது நாடு’ என்பதுதான்.

ஷீது என்றால் யார்? என்ன? என பலர் கேட்கலாம். மனித இனத்தின் தொடக்கம் தென்னகத்தில்தான் நடந்தது என்பதை எல்லோரும் ஒத்துக் கொண்டிருக்கிறார்கள்.

இலங்கையில் உள்ள மலைச் சிகரத்தை சிவனடி பாதம் என இந்துக்கள் கூறுகிறார்கள். ஆதாம்ஸ் பீக் (ஆதாமின் சிகரம்) என கிறிஸ்தவர்கள் சொல்லுகிறார்கள். பாவா ஆதம் மலை என முஸ்லிம்கள் குறிப்பிடுகிறார்கள். ஆக ஆதி மனிதர் நடமாடிய இடம் அது தான் என்பதில் கருத்து ஒற்றுமை இருக்கிறது.

ஒரு காலத்தில் தென்னகத்தில் ஒரு பகுதியாகத்தான் இன்றைய இலங்கைத்தீவு இருந்தது. அந்த நிலப்பரப்பு எப்போது பிரிந்ததோ? எப்படிப் பிரிந்ததோ? தெரியவில்லை. அந்தப் பிரிவினை இன்றும் நமக்குப் பிரச்சினையை உண்டாக்கிக் கொண்டிருக்கிறது. ஆக, நான் சொல்ல வந்தது, ஆதிமனிதர் ஆதமின் மகன் நான் சீது என்பவர். அவர் பெயர் தான் அவர் நடமாடிய நாட்டின் பெயராயிற்று.

நாடு கடந்து இலங்கையில் பல ஆண்டுகள் வாழ்ந்ததால் பரந்த கண்ணோட்டத்தில் இலக்கிய வரலாற்று ஆய்வுகளில் மவ்லானா ஈடுபட்டார்.

வளர்ச்சி

கீழக்கரையில் முஹம்மது ஈசா சாஹிபு – பாத்திமா பீவி தம்பதியரின் புதல்வராகப் பிறந்தவர் மவ்லானா. பெற்றோர் சூட்டிய பெயர் அஸ்செய்யது ஷைகு ஜிஃப்ரி. உறவினர் ஒருவர் மவுலானா என்று அழைத்ததால் அந்தப் பெயரே நிலைத்துவிட்டது. வாலிபப் பருவத்திலேயே இலங்கையில் மன்னார் பகுதிக்குச் சென்று முள்ளிக்குளம் கிராமத்தில் தமது தம்பியுடன் தங்கினார்.

’வேதபுரியான்’ எனும் புனைப்பெயரில் பத்திரிகைகளில் கட்டுரைகள் எழுதி வந்த மவுலானா வரலாற்று ஆய்வு களிலும் கவனம் செலுத்தி வந்தார். வேதபுரியின் இரகசியம் என்ற முதல் நூலை இலங்கையில் இருந்தபோதே வெளியிட்டார். 1964 ஆம் ஆண்டில் இலங்கையின் அப்போதைய பிரதமர் திருமதி பண்டார நாயக்கவின் அரசு எந்தக் காரணமுமின்றி தம்மை அங்கிருந்து வெளியேற்றி விட்டதாக எழுதியுள்ளார் மவ்லானா.

நாடு திரும்பிய அவர் கீழக்கரையில் இருந்தபடியே அரசியல், சமூகப் பணிகளில் ஈடுபட்டார். தொய்வில்லாமல் எழுதி வந்தார். ஊராட்சி மன்ற உறுப்பினராக பல ஆண்டுகள் பங்காற்றினார். இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கில் இணைந்து காயிதே மில்லத் இஸ்மாயிம் சாகிப் அவர்களின் பாசமிகு தொண்டராக விளங்கினார் மவ்லானா.

முகவை இராமநாதபுரம் மாவட்ட முஸ்லிம் லீக் தலைவராகப் பொறுப்பேற்றார். தி.மு.கழகம், சுதந்திர கட்சி ஆகியவற்றுடன் சேர்ந்து முஸ்லிம் லீக் கூட்டணி அமைத்த அந்தக் காலகட்டத்தில் ராஜாஜி, அண்ணா முதலானோர் கலந்து கொண்ட முஸ்லிம் லீக் மாநாட்டை நடத்துவதில் முக்கிய பங்கு வகித்தார்.

பசுங்கதிர்

பல பத்திரிகைகளில் எழுதி வந்த எம்.கே.ஈ. மவ்லானா சொந்த இதழை நடத்த விரும்பினார். அதனால் சென்னைக்குக் குடியேறி ’பசுங்கதிர்’ பத்திரிகையை 1967 இல் தொடங்கினார். (முகவரி:43, முத்துமாரிச் செட்டித் தெரு, சென்னை -600001).

அபூ உமர் முதலான புனைப்பெயர்களும் அவருக்கு உண்டு. பசுங்கதிர் இதழுடன் பதிப்பகத்தையும் அதே பெயரில் நடத்தி பற்பல நூல்களை வெளியிட்டார். மவ்லானா அவருடைய இதழியல் இலக்கியப் பணிகளுக்கு சக பத்திரிகை ஆசிரியர் களும் அறிஞர்களும் ஊக்கமளித்து வந்தனர்.

பசுங்கதிர் இதழில் 15.1.1973 முதல் வெளிவந்த கட்டுரைத் தொடரை உன்னிப்பாகக் கவனித்துக் கண்காணித்து வந்தவர் களில் பிறை கவுரவ ஆசிரியர் எம். அப்துல் வஹ்ஹாப் சாகிப் முக்கியமானவர். அதை தாங்களாகவே ஆங்கிலத் திற்குப் பெயர்த்து உலக நூலாக அறிமுகப்படுத்த எண்ணு வதாகக் கூறிக் கொண்டிருந்தார். என எழுதுகிறார் மவ்லானா. இது
ஓர் எடுத்துக்காட்டு.

பசுங்கதிர் இதழில் அவர் எழுதிய பல தொடர் கட்டுரைகள் பசுமையாக நினைவில் நிற்கக் கூடியவை. உந்துலூசியாவின் (ஸ்பெயின்) தலைவன், வித்திரியா விருந்து ஆகியவை அவற்றில் அடங்கும்.

சிறுகதை

எம்.கே.ஈ மவ்லானா சிறுகதை இலக்கியத்தில் உரிய இடம் பெற்றவர். தமது காலகட்டத்திற்கேற்ப அவர் சிறுகதைகளை எழுதியதால் பல கதைகள் மிக நீளமானவை.

இறைவனின் அருளால் பெற்ற அருளைப் பயன்படுத்திப் புனையும் அற்புதமான கற்பனைகளால் சிறந்த சிந்தனை யாளர்கள், கற்பனைகளால் கற்பனைக் கதைகளைத் தொகுத்து விடுகிறார்கள். உண்மையில் இது பாராட்டுக் குரியதுதான்.

எனினும், நம் கண்முன்னாலேயே நடைபெறக் கூடிய சில நிகழ்ச்சிகள் அந்தக் கற்பனையாளர்களின் கற்பனைகளை விடவும் சிறப்பானவையாகவும் ஆச்சர்யத்துடன் நெற்றியில் சுருக்கத்தைத் தோற்றுவிக்கக் கூடியவைகளாகவும் நிகழ்ந்து விடுகின்றன. அப்படிப்பட்ட நிகழ்வுகள் ஆங்காங்கே நாடோடிச் செய்திகளாக மக்கள் மனதில் பேசவும் படுகிறது.

பேசப்படும் அந்தச் செய்திகளுக்கு வடிவம் கொடுத்து தொகுத்துத் தரப்படும் பொழுது மக்களுக்கு அவை இனிப்புச் செய்திகளாக அமைவதோடு, அவற்றில் பல அறவழிப் போதனைகளாகவும் அமைகின்றன. அந்த வழிப்பட்டதே இந்தச் சிறுகதைகளின் தொகுப்பு.

பசுங்கதிர் பதிப்பாக வெளியீடாக 1982 நவம்பரில் வந்த கல்லறை விழா சிறுகதைத் தொகுப்பின் முன்னுரை வரிகள் இவை.

இதில் முதற்கதையான ’வசிய மருந்து’ பாரஸீகத்தில் பேசப்படும் நாடோடிக் கதை. நூலுக்குப் பெயரிட்டு இருக்கக் கூடிய கல்லறை விழா அரபு நாட்டு வரலாறுகளில் பதிவு செய்யப்பட்டிருக்கும் ஓர் உண்மை நிகழ்ச்சி.

மூன்றாவது தலைப்பாகிய ’காதலில் தோல்வியுற்ற ஒரு காளை’ பாகிஸ்தான் பிரிவினையின் போது நிகழ்ந்த விரும் பத்தகாத ஆயிரக்கணக்கான நிகழ்ச்சிகளில் ஒன்று.

நான்காவது கதையாகிய ‘பன்றிவித்த பணமும் ஹஜ் யாத்திரையும்’ பலரும் அறியாமலோ அல்லது அறிந்தோ பலரிடத்தும் மிக்க நாசூக்காக ஒன்றி நிற்கும் முறைகெட்ட வாழ்க்கையைப் படம்பிடித்துக் காட்டுவதாகும்.

ஐந்தாம்படைப்பு பற்பல இடங்களில் இன்றும் தொழிலாளர் களைச் சுரண்டி முதலாளிகள் வாழ்வதாகக்கூறி அந்தத் தொழிலாளிகளுக்கு வெறியை ஊட்டி இந்தத் தொழிலாளி களையே சுரண்டி வாழக்கூடிய எத்தர்களைப் படம்பிடித்துக் காட்டுவதாகும்.

சிறுகதைகளின் பின்னனியும் சாரமும் இவை. மவ்லானாவின் நடைக்கு ஓர் எடுத்துக்காட்டு. பன்றிவித்த பணமும் ஹஜ் யாத்திரையும் ஒரு குறிப்புரையுடன் தொடங்குகிறது.

கண்ணுக்குமுன் நல்லதாகத் தெரியக்கூடிய சில காரியங் களை ஒவ்வொருவரும் மிக்க மகிழ்ச்சியுடன் செய்து விடுகிறோம். அதற்குள் நமக்குத் தெரியாமலே நஞ்சு கலந்திருப்பதை நாம் அறிந்துக் கொள்வதில்லை. பிறர் யாராவது எடுத்துச் சொல்லும்போதே சில உண்மைகள் தெரிய வருகின்றன. அப்படிப்பட்ட ஓர் உண்மைச் சம்பவத் தைத்தான் தொகுத்துத் தரப்படுகிறது.

அவர் அந்தக் கிராமத்தின் பெரிய தனக்காரர். அந்தக் கிராமத்தில் மட்டுமென்ன? அடுத்துள்ள ஐந்தாறு கிராமங் களில் கூட அவருக்கு நிகரான பொருளாதார வசதி படைத்தவர் வேறு எவரும் இல்லை. இத்தனைக்கும் விவசாயமே அவரது உடலும் உயிரும்.

கிராமத்தில் ஏறக்குறைய முக்கால் பங்குக்கு மேற்பட்ட நிலம் அவருக்கே சொந்தம். உழவு மாடுகள், பண்ணை ஆட்கள் ஏராளம். அண்மையில் உழவு மிஷினாகிய டிராக்கடர்கூட ஒன்று வாங்கி விவசாயத்தை முழு மூச்சாகக் கவனித்து வருகிறார்.

அந்தக் கிராமம் தோன்றி எத்தனை நூற்றாண்டுகள் ஆகி இருக்குமோ தெரியாது. ஆனால் அது தோன்றி பல நூற்றாண்டுகள் ஆகி இருக்கும். என்பது மட்டும் உறுதி. ஏனென்றால் அந்தக் கிராமத்தைத் தொடர்புபடுத்திக் கூறப் படும் கதைகள் அப்படித்தான் எண்ணச் செய்கின்றன.

கிராமம் தோன்றிய காலம் முதல் அங்கிருந்து எவரும் ஹஜ்ஜுக்குப் போனதாக வரலாறு இல்லை. இந்த நிலைமை யில்தான் கிராமத்தின் பெரிய தனக்காரராகிய அவர் ஊரவர் பலரின் பணிவான தூண்டுதலின் காரணமாக அந்த வருசம் ஹஜ்ஜுக்குப் போக முடிவு செய்தார்.

முடிவு செய்ததும் அடுத்த கட்டமாக எனக்கு ஆள் அனுப்பி வரச் சொல்லிவிட்டார். நான் கிராமத்தில் கொஞ்சம் விவர மானவன் என்று பெயர் பெற்றவன். அரசாங்க அலுவல்கள் உட்பட எல்லா விவரங்களும் தெரிந்தவன் என்ற மதிப்பும் பெற்றவன்.

அழைப்பு வந்ததும் இதோ வருகிறேன் என்று சொல்லி அனுப்பிவிட்டு கையிலிருந்த வேலைகளை முடித்துக் கொண்டு அவர் வீட்டுக்குப் போய்ச்சேர்ந்தேன். என்றை யையும் விட அன்று மிக்க மகிழ்ச்சியுடன் என்னை வரவேற்று இருக்கச் சொன்னார். நான் ஒரு நாற்காலியை இழுத்துப் போட்டு அமர்ந்ததும் அவர் இந்த வருசம், தான் ஹஜ்ஜுக்குப் போக முடிவு செய்திருப்பது பற்றிக் கூறினார்.

இந்தச் செய்தியை அவர் கூறியதும் நான் உண்மை யிலேயே மிக்க மகிழ்ச்சியோடு பெருமிதம் கொண்டேன். ஏனெனில், ஒரு கிராமத்தின் சரித்திரமே மாறப் போகிற தல்லவா? கதை தொடர்கிறது. படித்துச் சுவைத்து படிப்பினை பெறலாம்.

பதிப்பாளர்

பசுங்கதிர் மவ்லானாவின் பதிப்புத்துறை பணிகள் பதிவு செய்யத்தக்கவை. அவர் இருபதுக்கு மேற்பட்ட நூல்களை இயற்றி பதிப்பித்துள்ளார்.

கவிஞராகவும் திகழ்ந்த அவர் வெளியிட்ட கவிதைத் தொகுப்பு – எதிர்நீச்சல், உலகப்பெரும் மேதை உமர் கையாம், முஸ்லிம்களின் ஒருதலை ராகம், எல்லாம் இன்ப மயம் – பயணக்கட்டுரை, முஹம்மதெனும் பெருஞ்சித்தர் முதலாக அவருடைய நூல் பட்டியலில் அடங்கும்.

வேரில் பழுத்த பலா நூலை நெல்லை பாலாஜியுடன் இணைந்து எழுதி வெளியிட்டார் எம்.கே.ஈ.இஸ்லாத்தைத் தழுவிய கிறிஸ்தவப் பாதிரியார் ஒருவர் ஆங்கிலத்தில் எழுதிய நூலை தமிழில் ’தீர்க்க தரிசனம் நிறைவேறுகிறது’ என்ற தலைப்பில் வெளியிட்டார்.

தமிழில் எழுதப்பட்ட முதல் நாவல் (புதினம்) எது என்ற சர்ச்சை தொடர்வதை அறிவோம். தாமிரப்பட்டணம் முதல் நாவல் என்ற கருத்தை நிலைநாட்ட உதவியவர் மவுலானா. கீழக்கரை மகான் மாப்பிள்ளை லெப்பை ஆலிம் அரபுத் தமிழில் எழுதிய ‘மதீனத்துன்னுஹாஸ்’ நூலை ‘தாமிரப் பட்டணம்’ எனும் பெயரில் பசுங்கதிரில் தொடராக வெளியிட்டு நூலாக்கினார். அவர்.

1859 இல் எழுதப்பட்ட புதினம் அது. கீழக்கரை லெ.செ. நூஹ் தம்பி மரைக்காயரிடமிருந்து அந்த நாவல் பிரதியைப் பெற்று 23 அத்தியாயங்களாக வெளியிட்டு பின்னர் நூலாக வெளியிட்டார். இதன் அரபுத்தமிழ்ப் பதிப்பு இலங்கையிலும், தமிழகத்திலும் 1990 – 1903 ஆம் ஆண்டுகளில் இருமுறை பதிப்பிக்கப்பட்ட குறிப்பையும் எம்.கே.ஈ. மவ்லானா முன்னுரையில் குறிப்பிட்டுள்ளார்.

இந்நூல் மதிக்கத்தகுந்த பெருமைக்குரியதும் புதையுண்ட உலக மனிதகுல வரலாற்றை வெளிப்படுத்துவதுமான சிறப்பைச் சுமந்திருக்கிறது என்று வாசகர்கள் கருதுவார் களானால், அந்த மதிப்பு, பெருமை, சிறப்பு அத்தனையும் ‘மாதிஹுஸ் ஸிபத்தைன்’ – மகான் மாப்பிள்ளை லெப்பை ஆலிம் அவர்களுக்கே உரித்தாகும். அவர்களுக்கு மாபெரும் ஞானத்தையும். தீட்சண்யத்தையும் அருளிய அல்லாவுக்கே புகழனைத்தும் உரித்தாகும். – இதுவும் முன்னுரை.

வாசகம்

தமிழ்மொழியின் முதல் நாவலாசிரியர் ’கமலாம்பாள் சரித்திரம்’ எழுதிய பி.ஆர்.ராஜம் அய்யர் என்று சொல்லப் படுவதுண்டு. ஆனால், அது தவறு. ‘ஹஸன் பே சரித்திரம்’ என்னும் தமிழ் நாவலை எழுதிய சித்தி லெப்பை அவர்களே முதல் நாவலாசிரியர் என்று சில ஆண்டுகளுக்கு முன்பாக நிரூபிக்கப்பட்டுள்ளது. அதற்கு முன்பாகவே, ‘தாமிரப் பட்டணம்’ நாவல் எழுதப்பட்டுவிட்டது. ஆகையால் அதுவே முதல் நாவல் எனவும் தமிழ்மொழியின் முதல் நாவலாசிரியர் மாப்பிள்ளை ஆலிம் அவர்களே எனவும் இப்போது உறுதியாகிறது. அறபி லிபியில் எழுதப்பட்டாலும் அந்நாவலின் மொழி தமிழே ஆகும்.

மதுரை பல்கலைக்கழக இஸ்லாமியத் தமிழியல் துறைத் தலைவர் முனைவர் பீ.மு. அஜ்மல்கானின் ஆய்வுரை இது.

நற்பணிகள்

முன்னோடி பசுங்கதிர் எம்.கே.ஈ. மவ்லானா அவர்களின் பன்முனைப் பணிகள் விரிவானவை. தமிழ்நாடு முஸ்லிம் பத்திரிகையாளர் சங்கத்தின் தலைவராக அவர் விளங்கினார். 10.9.1989 இல் திருச்சியில் நடைபெற்ற அச்சங்கத்தின் செயற் குழுக்கூட்டத்தில் அவருடைய மறுமலர்ச்சி ஆசிரியர் நாவலர் ஏ.எம்.யூசுப், தூத்துக்குடி முஸ்தபா ஹுசைன், பேராசிரியர் கே.எம்.காதர் முஹைதீன், கனி சிஷ்தி முதலானோர் அணிதிரண்ட நிகழ்ச்சி மறக்க முடியாதது.

எழுத்தாற்றலுடன் பேச்சுத் திறனும் பெற்றவர் மவ்லானா. இந்திய சுதந்திரத்திற்கு முன்பு காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து சுதந்திர வேட்கையை எழுப்பும் மேடைப் பேச்சுக் கலையைக் கற்றுக் கொண்டார். மேடைச்சிங்கம், பிரசங்கி எனப் பெயர் பெற்றார்.

ஆக, கலை, இலக்கியம், அரசியல், ஆன்மீகம், வர்த்தகம், பேச்சுத் திறன், வாகனம் ஓட்டுதல், துப்பாக்கிச் சுடுதல், சமையல், சமரசம் என எல்லாத் துறைகளிலும் ஈடுபாடுள் ளவர், கீழக்கரை தந்த இந்த முன்னோடி. கல்விக்கூடம் சென்று கற்காதவர் மார்க்கக் கல்வியைப் பெற்றவர். முனைவர்பட்டம் தர லண்டன் தமிழ்ச்சங்கம் முன்வந்த போது அதைப் புறக்கணித்தார்.

மவ்லானா கீழக்கரையில் 1970 டிசம்பர் 29,30,31 ஆகிய தேதிகளில் நடைபெற்ற இஸ்லாமியத் தமிழ் இலக்கிய மாநாட்டில் ஓர் அங்கம் வகித்தார். அவருக்கு நிறைவு விழாவில் கலைஞர் கருணாநிதி பொற்கிழி வழங்கிப் பாராட்டினார்.

எம்.கே.ஈ. மவ்லானாவுக்கு அதுவே நிறைவு நிகழ்ச்சியாக அமைந்துவிட்டது.

பொற்கிழியுடன் துயிலச் சென்ற அவர் கண் விழிக்காமல் அன்றிரவே உலகைத் துறந்து இலக்கியப் பசுங்கதிர் ஆகிவிட்டார்.

நன்றி :

சமநிலைச் சமுதாயம்
ஜுன் 2009

Jamal / Minjamal
Dr Himana Syed ,
dateThu, Jul 30, 2009 at 10:58 AM
subjectRe: பசுங்கதிர் எம்.கே.ஈ. மவ்லானா

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்ம..

சமநிலைச் சமுதாயம், ஜுன் 2009 இதழில் வெளிவந்த கட்டுரையில்

அதில் குறிப்பிட்டிருந்த தவறான தேதியினைத் தெளிவுபடுத்திய டாகடர். ஹிமானா செய்யது அவர்களுக்கு மிக்க நன்றி.

டாக்டர் ஸாஹிப் அவர்களின் விளக்கத்தை இந்த மடலில் பதிவு செய்துள்ளேன்.

அன்புடன்,
சகோ. ஜமால் முஹம்மது.

=====================================================

மவ்லானா கீழக்கரையில் 1990 டிசம்பர் 29,30,31 ஆகிய தேதிகளில் நடைபெற்ற இஸ்லாமியத் தமிழ் இலக்கிய மாநாட்டில் ஓர் அங்கம் வகித்தார். அவருக்கு நிறைவு விழாவில் கலைஞர் கருணாநிதி பொற்கிழி வழங்கிப் பாராட்டினார்.

-This is the corrected version.

I was A MEMBER OF the PRO OF THE SAID CONFERENCE.
MOULANA PASSED AWAY A FEW DAYS AFTER THE CONFERENCE
MOULANA’S SON EESA LIVES IN SINGAPORE . HE HAS CORRECTED THE DATE IN SAMANILAI SAMUTHAAYAM JULY ISSUE LETTERS TO EDITOR COLUMN –

DR.HIMANASYED

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *